ஏ ஆர் ரஹ்மான், யமஹா மியூசிக் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டு, இசையின் மகத்துவத்தைப் பற்றி பேசினார். அவர், இசை ஒரு குணமளிக்கும் செயல்முறை என்றும், சென்னையை இசையின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற தனது கனவை பகிர்ந்தார். பியானோ வாங்க முடியாத காலத்திலிருந்து, இப்போது யமஹா பியானோ பரிசளித்தது அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
யமஹா மியூசிக் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஏ ஆர் ரஹ்மான், சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் பேசிய ரஹ்மான் "என் வாழ்க்கையை இசையமைப்பாளராக துவங்கி, ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது வரை பல விஷயங்களை பார்த்துள்ளேன். பலரும் என்னிடம் கேட்பது `நீங்கள் எல்லாவற்றையும் சாதித்துவிட்டீர்கள், எது உங்களை இன்னும் செலுத்துகிறது?' என்றுதான். எது என்னை செலுத்துகிறது என்றால், கொடுக்க வேண்டும் என்ற ஆசை தான். சென்னையை இசையின் தலைநகரமாக மாற்ற வேண்டும்.
இசையை மேற்கத்திய, இந்திய என வரையறுக்க விரும்பவில்லை. இசை என்பது ஒரு healing process. தனியாக நீங்கள் ஒரு கருவியை பயிற்சி செய்வது கூட healing process தான். ஒரேமாதிரியான அலுப்பு தரக்கூடிய வாழ்க்கை, தனிமை போன்றவை நம்மை தாக்கும் போது இசைக்கருவியை வாசிப்பது, இசையில் இயங்குவது உங்களை குணமாக்கும். இசை என்பது சமையலை போன்றது. நீங்கள் சமைத்து நீங்களே சாப்பிடலாம். அல்லது நீங்கள் சமைத்த சிறந்த ஒன்றை மற்றவர்களுடன் பகிரலாம். அப்படி நடக்கும் அன்னதானங்கள் மூலம் ஒரு நிறைவு கிடைக்கும். அது மனிதநேயமும் கூட. சமையல் வயிறுகளை நிறைத்து போல, இசை செவிகளை நிறைக்கிறது. அது ஆன்மாவுக்கானதும் கூட. அது உங்கள் நல்வாழ்வுக்கும் உதவும்.
டிஜிட்டல் மற்றும் analog இசை என மாறிக் கொண்டே இருக்கும் ட்ரெண்ட் பற்றி கேட்கப்பட்ட போது "ஒரு காலத்தில் analog இசைக்கருவிகளை வாங்க முடியாத நிலையில் இருந்தேன். பியானோ எல்லாம் மிக விலை உயர்ந்ததாக இருக்கும். இப்போது இவர்கள் எனக்கு ஒரு பியானோவை பரிசளித்துள்ளார்கள். அது சைக்கிளில் வைத்திருப்பவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை கொடுத்தது போன்றது. தரமான கருவிகள் எல்லாம் மிக விலை உயர்ந்ததாக இருந்தது. இப்போது யமஹா அதன் தயாரிப்புகளை சென்னையில் செய்ய உள்ளார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது என்னுடைய ஸ்டுடியோவுக்கு நான் உலகின் பல இடங்களில் இருந்து இசைக்க கருவிகளை வாங்கி வருகிறேன்." என்றார்.
AI இசை பெருகிவரும் காலத்தில், எப்படி தனித்து தெரிவது எனக் கேட்கப்பட "சமூக வலைத்தளங்களில் வரும் இசை AI ஆக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் முன் இசைப்பது தான் இப்போது மதிப்பு மிக்கதாக உள்ளது. அதனால் தான் இப்போது இசை கட்சேரிகள் பெரிய வரவேற்பை பெறுகிறது. நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்ன என்றால், மனதிலிருந்து ஒன்றை உருவாக்கி, அதனை உருவாக்கும் போதும், கேட்கும் போதும் நீங்கள் மகிழ முடிந்தால், மற்றவர்களாலும் மகிழ முடியும். அது ஸ்லோவான மெட்டாக இருந்தாலும் சரி. அந்தப் பாடல் மெனக்கெடலுடன் உருவாக்கப்பட்டால், அதற்கான இடம் கிடைத்தே தீரும்." என்றார் ஏ ஆர் ரஹ்மான்.