R B Choudary web
கோலிவுட் செய்திகள்

இறுதி மூச்சு வரை சினிமா... ஆர் பி சௌத்ரியின் அசராத பயணம்! | R B Choudary | Super Good Films

பல பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களே சினிமா தயாரிப்பை நிறுத்தி வரும் நிலையில் 100வது படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என மிகுந்த கனவுகளுடன் திட்டமிட்டு வந்தார்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தது துறைக்கு பேரிழப்பாகும். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அவர், நகை மற்றும் இரும்பு தொழிலில் இருந்து 1988ல் ‘ஆதி பாவம்’ மூலம் தயாரிப்பாளராக மாறி, ‘புது வசந்தம்’ முதல் ‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘திருப்பாச்சி’ வரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் எண்ணற்ற ஹிட் படங்களை வழங்கினார்.

தமிழ் சினிமாவின் முதன்மை தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர் பி சௌத்ரி, அதிர்ச்சிகரமான சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிடி. தமிழ் சினிமாவில் 38 வருடம் இவரது பங்களிப்பு மிகப்பெரியது. ரத்தன்லால் பகத் சௌத்ரி (எ) ஆர் பி சௌத்ரி ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். நகை, இரும்பு உற்பத்தி, ஏற்றுமதி போன்ற துறைகளில் பணியாற்றி வந்தவர், 1988ல் மலையாள படமான `ஆதி பாவம்' படத்தை தயாரித்ததன் மூலம் சினிமா தயாரிப்பாளராக மாறினார். தொடர்ந்து `லயனம்', `கல்பனா ஹவுஸ்' போன்ற படங்களை தயாரித்தார். தமிழில் இயக்குநர் விக்ரமனின் அறிமுகப்படமான `புது வசந்தம்' மூலம் தயாரிப்பாளராக கால் பதித்தார். படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பெயர் பிரபலமானது.

Super Good Films

அதனை தொடர்ந்து `சேரன் பாண்டியன்', `கோகுலம்', `நாட்டாமை', `பூவே உனக்காக', `மிஸ்டர் ரோமியோ', `லவ் டுடே', `சூர்யவம்சம்', `துள்ளாத மனமும் துள்ளும்', `நீ வருவாய் என', `ஆனந்தம்', `திருப்பாச்சி' என பல ஹிட் படங்களை கொடுத்து தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு கூட இந்நிறுவனம் தயாரித்து வடிவேலு, பகத் பாசில் நடித்து உருவான `மாரீசன்' படம் வெளியானது. இப்போது விஷால் நடித்து இயக்கி வரும் `மகுடம்' படமும் சூப்பர் குட் தயாரிக்கிறது. இப்படி தொடர்ச்சியாக சினிமாவில் இயங்கியவர் சௌத்ரி.

Magudam

சினிமாவில் அதிக இயக்குநர்களை அறிமுகபடுத்திய பெருமை ஆர் பி சௌத்ரியை தான் சாரும். இதுவரை 44 இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். விக்ரமன், கே எஸ் ரவிக்குமார், பால சேகரன், சசி, எழில், ராஜகுமாரன், லிங்குசாமி, ரவி மரியா, பிருந்தா சாரதி, பேரரசு, கோகுல் உட்பட பல இயக்குநர்கள் சூப்பர் குட் மூலம் அறிமுகமானவர்களே. ஆர் பி சௌத்ரியின் நண்பராய் இல்லாத ஒருவரும் தமிழ் சினிமாவில் இருக்க மாட்டார்கள் என சொல்லும் அளவிற்கு அத்தனை பேரின் நம்பிக்கையை சம்பாதித்து வைத்திருப்பவர். அவரது படங்களில் உறவுக்கு எப்படி முக்கியத்துவம் இருக்குமோ, அதே போல் அவரது நிஜ வாழ்விலும்.

R B Choudary

குடும்ப கதை, ஜனரஞ்சகமான படம் போன்றவற்றை தேர்வு செய்வதில் ஒரு மாஸ்டர் ஆர் பி சௌத்ரி. அவர் தயாரிக்கும் நிறைய படங்களில் அந்த பேமிலி டச், எப்போதுமே இருக்கும். `நாட்டாமை' சரத்குமாரை மூளை முடுக்கெல்லாம் சேர்த்தது, `பூவே உனக்காக' ஒவ்வொரு வீட்டுக்கும் விஜயை கொண்டு சேர்த்தது, அதே விஜயை திருப்பாச்சி மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாற்றியது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல ஹிட் படங்களை கொடுத்தார். 

பூவே உனக்காக திரைப்படம்.

பொழுதுபோக்கு படங்களுக்கு என ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தவர் தனது நிறுவனத்தின் 99வது படமாக விஷால் நடிப்பில் `மகுடம்' படத்தை தயாரித்து வந்தார். பல பாரம்பரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களே சினிமா தயாரிப்பை நிறுத்தி வரும் நிலையில் 100வது படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என மிகுந்த கனவுகளுடன் திட்டமிட்டு வந்தார். அந்த ஆர் பி சௌத்ரியை தான் இப்போது இழந்திருக்கிறோம். அவரது சினிமா பங்களிப்பை என்றும் மனதில் வைத்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.