R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

ஹை கோர்ட் மஹாராஜா தான் கருப்பு பட INSPIRATION-ஆ? - ஆர் ஜே பாலாஜி சொன்ன பதில்

என்னிடம் ஒரு முக்கியமான மூத்த விநியோகஸ்தர் ஒருவர் கூறினார். ரொம்ப வருடம் கழித்து தியேட்டர் உள்ளே இப்படி பார்க்கிறோம். படம் வசூல் செய்வது நல்ல விஷயம், ஆனால் மக்கள் உட்கார்ந்து படம் பார்க்காமல் நின்று கொண்டே பார்த்தனர்.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படம் மே 15 வெளியீட்டிலிருந்து திரையரங்குகளில் திருவிழா சூழலை உருவாக்கி வருகிறது. கோயம்புத்தூர் முதல் திருநெல்வேலி வரை குடும்பங்கள் கூட்டமாக குவிந்து பார்க்கும் அளவுக்கு அபரிமிதமான அன்பு கிடைக்கிறது. வசூலில் பட்டையை கிளப்பும் நிலையில், இந்த வெற்றியால் உற்சாகமடைந்த பாலாஜி, ‘கருப்பு’ பார்ட் 2 கண்டிப்பாக வரும் என அறிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பார்க்கும் டூரை இன்று துவங்கியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.

நேற்று திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் சென்ற பாலாஜி பேசிய போது " கோயம்புத்தூர், திருச்சி, மதுரை இப்போது திருநெல்வேலி என ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும் ஒரு விஷயம் என்ன என்றால், அபரிமிதமான அன்பு. நேற்று மதுரையில் ஒரு திரையரங்கில் இரவுக் காட்சி பார்த்தேன். அது தியேட்டர் மாதிரியே இல்லை. ஒரு திருவிழா போல இருந்தது. இப்போது திருநெல்வேலியில் முக்கியமான தியேட்டர் ராம் சினிமாஸ். இங்கும் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்திருக்கிறார்கள்.

karuppu

என்னிடம் ஒரு முக்கியமான மூத்த விநியோகஸ்தர் ஒருவர் கூறினார். ரொம்ப வருடம் கழித்து தியேட்டர் உள்ளே இப்படி பார்க்கிறோம். படம் வசூல் செய்வது நல்ல விஷயம், ஆனால் மக்கள் உட்கார்ந்து படம் பார்க்காமல் நின்று கொண்டே பார்த்தனர். எனக்கு கடவுள் மேல் உறுதியான நம்பிக்கை உள்ளது. நம்மை மற்றவர்கள் நம்பாமல் இருக்கலாம், ஆனால் நாம் நம்ப வேண்டும். நம்மை நம்புவது மிக முக்கியம். நான் மிக உறுதியாக நம்பினேன் இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும் என. ஒரு நாள் தள்ளிப்போன போது மிக வருத்தமாக இருந்தது. ஆனால் வெளியாகும் போது பெரிய வரவேற்பை பெரும் என நம்பினேன். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்பினேன், அது நடக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் பார்ட் 2 கண்டிப்பாக வரும். இன்னும் கதையை எழுதவில்லை, அதை எழுத வேண்டும்." என்றார்.

திருநெல்வேலியில் ஹை கோர்ட் மஹாராஜா என்ற விஷயத்தை அடிப்படையாக வைத்து கருப்பு உருவானதா என கேட்கப்பட்ட போது "இந்தப் படம் வெளியான பின்னர் தான் ஹை கோர்ட் மஹாராஜா பற்றி படித்தேன். எனக்கு அப்போது தான் தெரியும். எனக்கு இந்த யோசனை வந்தது மாசாணி அம்மன் கோவிலை பற்றி கேள்விப்பட்ட போதுதான். அதே போல தான் இங்கு ஹை கோர்ட் மஹாராஜா என நினைக்கிறேன். கடவுள் ஹை கோர்ட் மஹாராஜாவாகவோ, மாசாணி அம்மனாகவோ, பதினெட்டாம்படி கருப்பாக இருந்தாலும் சரி பல ரூபத்தில் படம் வெற்றியடைய உதவி இருக்கிறார் என்பதை நம்புகிறேன்." என்றார் ஆர்.ஜே.பாலாஜி.