'கருப்பு' பார்ட் 2.. ஆர் ஜே பாலாஜி சொன்ன அப்டேட்! | Suriya | Karuppu 2 | R J Balaji
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ஆம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. வசூலிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை ஒவ்வோர் ஊரிலும் சென்று பார்க்கும் டூரை நேற்று துவங்கினார் ஆர் ஜே பாலாஜி. அப்படி சேலத்தில் உள்ள SPR CineCastle திரையரங்கு சென்றார் ஆர் ஜே பாலாஜி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
விஜய் சாருக்கு இந்தக் கதையை முதலில் சொன்னீர்களா?
"முதலில் ஒரு கதையை எழுதினேன், அந்தக் கதையை விஜய் சாரிடம் கூறினேன். பின்னர் சூர்யா சாரிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஏற்ற மாதிரி அந்தக் கதையை மாற்றி கூறினேன். அதுதான் இப்போது கருப்பாக வந்திருக்கிறது. எல்லா இடத்திலும் அவர்கள் வீட்டுப் பையன் ஜெயித்ததுபோல கொண்டாடுகிறார்கள். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி."
சினிமா துறையை சேர்ந்தவர் முதல்வர் ஆகி இருக்கிறார், அவர் சினிமா துறைக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
"சினிமா மட்டுமல்லாது எல்லாத் துறையையும் முன்னேற்ற வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒரு புது முதலமைச்சர் வந்திருக்கிறார், நிறைய நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நாம் எல்லோரும் ஓட்டு போட்டிருக்கிறோம். அவர் நல்லது செய்வார் என நம்புகிறேன். எனக்கு விஜய் சாரை பிடிக்கும், தனிப்பட்ட முறையில் தெரியும். எனவே எல்லோரையும்போல நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்."
குறிப்பிட்ட ஒரு மதத்தை வைத்து நீங்கள் படம் எடுக்கிறீர்களே?
"எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் அம்மன் படம், முருகர் படம் வந்திருக்கிறது. நான் இப்போது கருப்பசாமி வைத்து படம் எடுத்திருக்கிறேன். மிக அரிதாகதான் மற்ற மதங்களை வைத்து படம் வரும். எனவே, இதை நான் மட்டும் செய்யவில்லை. கால காலமாக இப்படித்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் மேரி மாதா பற்றி படம் எடுக்கும் வாய்ப்பை கடவுள் எனக்கு வழங்கினால் நான் அதையும் செய்வேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை மிக அதிகம், எல்லாக் கடவுளையும் கும்பிடுவேன்.”
’கருப்பு’க்கு பார்ட் 2 இருக்கிறதா?
"ஆம். பார்ட் 2 இருக்கிறது சார். அதுதான் படத்தின் முடிவிலேயே வருமே."

