விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நடக்கிறது எனவும், படம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை தணிக்கைச் சான்று தரப்படவில்லை எனவும் பிரச்னை எழுந்தது.
இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். இந்த மனு நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும் கூறினார். ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில், யாரோ புகாரளித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து நீதிபதி வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிடி ஆஷா, "யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனிப் புகார் அளிக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ”இந்த வழக்கில் அனைத்துமே இயல்புக்கு மாறாக உள்ளது. யு/ஏ சான்று என முடிவு செய்துவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியது ஏன்” என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் சொன்ன தணிக்கை வாரியம் தரப்பில், ”இது வழக்கமான நடைமுறை” என தெரிவிக்கப்பட்டது. ”புதிய தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை இன்னும் பார்க்க வேண்டி இருப்பதால் வழங்கப்படவில்லை” என வாதம் வைக்கப்பட்டது. மேலும், ”பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி தந்தால் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்க முடியும்” என வாதம் வைக்கப்பட்டது.
அப்போது அந்தப் புகாரில், ’’எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றுதானே கூறப்பட்டு இருக்கிறது. எனவே, இந்தப் புகார் நிலைக்கத் தக்கதல்ல’’ என நீதிபதி கூறினார். அதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, ’’படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும், திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்’’ எனவும் கூறினர். பின்னர் நீதிபதி, ’’தணிக்கை வாரியத்தின் டைம்லைனை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’’ என்றார்.
’’தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று’’ என பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ’’சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுபினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால், மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஓர் உறுப்பினர், எப்படி பெரும்பான்மை உறுபினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும், ரூ.500 கோடி முதலீடு செய்து படம் எடுத்துள்ளோம். குறித்த தேதியில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும்’’ என்றும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. ’’ஆனால் ரூ.500 கோடியோ, ரூ.1 கோடியோ விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். நாளை மறுதினம் ரிலீஸ் எனக்கூறி சான்றிதழ் கேட்க முடியாது’’ என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
அப்போது, ’’வழக்கை வேறு ஒருநாளுக்கு ஒத்தி வைக்கலாமா’’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ’’படக்குழு இன்றே தீர்ப்பளிக்க வேண்டும்’’ என வாதம் வைத்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 9 அன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் கூறி இருக்கிறது. விஜய் பட வெளியீட்டில் நெருக்கடி ஏற்படுவது முதன்முறை அல்ல. ஆனால் இந்த முறை ரிலீஸ் தேதிவரை சிக்கல் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருவேளை 9ஆம் தேதி படத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அன்றே படத்தை வெளியிட வாய்ப்பு மிகக் குறைவு. எனவே சொன்ன தேதியில் படம் வெளியாகாது என்ற சூழல் உருவாகியுள்ளது. தீர்ப்புக்கு பின்னரே படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தெரியவரும்.