சென்சார் சிக்கலில் ஜனநாயகன் | தணிக்கைத் துறையால் சான்று வழங்குவதை தாமதிக்க முடியுமா?
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அதற்கு இன்னும் தணிக்கை சான்று வழங்கப்படவில்லை என்பதுதான், தவெக தரப்பினர் கிளப்பியிருக்கும் புதிய புயல். இறுதிகட்ட பணிகள் நிறைவு பெற்றபின், ஜனநாயகன் திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பல வாரங்கள் முன்பே ஜனநாயகன் படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், அதற்கு U/A சான்றிதழை பரிந்துரைத்த நிலையில், தற்போது வரை தணிக்கை சான்று தரப்படவில்லை என்கிறார், தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார்.
ஒரு படத்தை பார்த்தபின் தணிக்கைத் துறை அதிகாரிகளால், சான்று வழங்குவதை தாமதிக்க முடியுமா? அப்படி தணிக்கை சான்று தாமதமாகிறது என்றால், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை ஆராய்ந்தபோது, பல்வேறு தகவல்கள் கிடைத்தன. ஒரு படத்தை தணிக்கைத்துறை அதிகாரிகள் பார்த்து முடித்தபின், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். படத்தின் தன்மை மற்றும் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ப U, U/A, A என, எந்த மாதிரியான சான்று கிடைக்கப்போகிறது என்பது, அந்த கூட்டத்திலேயே இறுதி செய்யப்பட்டுவிடும்.
1. முக்கிய காட்சியையோ, அல்லது கூடுதலான காட்சிகளையோ நீக்க வேண்டும் என தணிக்கைத்துறை கூறுகிறது என்றால், படக்குழு அதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அப்படி செய்தால் தணிக்கை சான்று தாமதமகும்.
2. ஒரு படம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் விதத்தில் இல்லை என தணிக்கைத்துறை கருதினால், தணிக்கை அதிகாரிகளே மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்வார்கள். அது நடந்தாலும் தணிக்கை சான்று கிடைக்காது.
3. இந்த காரணங்களும் இல்லை என்றால், படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தாலும் படத்துக்கான தணிக்கை சான்று தாமதம் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.
ஒரு தயாரிப்பாளர், தணிக்கைத்துறை கூறிய காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டாலோ, அல்லது மேல்முறையீடு செய்ய முடிவு செய்தாலோ, அதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டால், தணிக்கை உறுப்பினர்கள் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு, புதிதாக எடிட் செய்யப்பட்ட படத்தை தணிக்கைத்துறைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றாலோ? மேல்முறையீடு செய்வதாக உறுதி அளித்துவிட்டு, தயாரிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ, தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதமாகலாம் என தணிக்கைத்துறை உறுப்பினர் வட்டாரத்தில் தகவல்கள் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அறிய, சென்னையில் உள்ள மத்திய தணிக்கைத்துறை அதிகாரியை தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டபோதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஜனநாயகன் தரப்பில் இருந்து தெளிவான விளக்கமும் கிடைக்கவில்லை. இறுதியாக, ஜனநாயகன் படக்குழுவினரோ அல்லது சென்சார் அதிகாரிகள் தரப்போ, முழுமையான விளக்கம் அளிக்கும்பட்சத்தில், உண்மைகள் வெளிவரும்.

