Kamalhaasan Biography
கோலிவுட் செய்திகள்

என் சுயசரிதையை எழுதினால் பல பொய்கள் சொல்ல வேண்டிவரும் - கமல்ஹாசன் | Kamalhaasan

பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கையில் எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும்.

Johnson

கேரளாவில் நடைபெற்ற ஊடக நிகழ்வில் கலந்து கொண்டார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். அந்த நிகழ்வில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மலையாள சினிமா, ரிட்டயர்மெண்ட், சுயசரிதை, உலகநாயகன் பட்டத்தை துறந்தது எனப் பல விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளார்.

உங்களுக்கு பல மொழிகள் தெரிந்தாலும், பெங்காலி படிக்க முயற்சித்தீர்கள், அதற்கு காரணம் நடிகை அபர்ணா சென் மீது உங்களுக்கு இருந்த காதல் என ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில் கூறினாரே எனக் கேட்டதும் "அந்த மொழி படிக்க வேண்டிய அவசியம் இல்லை, இப்போது அது புரிகிறது. ஆனால் அவர் மீது இப்போதும் காதல் தான். அவர் அழகு என்பதனால் மட்டுமல்ல, மிகச்சிறந்த திறமை அவர்" என்றார் கமல். மேலும் ஹேராமில் ராணிமுகர்ஜி பாத்திரத்திற்கு அவரது பெயரைதான் வைத்தீர்களா எனக் கேட்டதும் "ஆம், நான் அவரது பெரிய ரசிகன். அவரது வெளிப்புற அழகுக்காக மட்டுமல்ல, அவரது அகஅழகும் என்னை ஈர்த்தது" என்றார்.

Kamalhaasan

முன்பு சினிமாவில் பெண்களுக்கு நடிக்க நல்ல பாத்திரங்கள் அமைந்ததில்லை, இப்போது அது மாறி இருக்கிறது. இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்றதும் "நல்ல சினிமா எப்போதும் இருக்கிறது. ஆனால் அவை மெய்ன்ஸ்ட்ரீமுக்கு வருவதில்லை, அது மட்டுமே விமர்சனத்துக்குரியது. இல்லை என்றால் நான் ஏன் கேரளாவுக்கு வரப் போகிறேன். தமிழில் நான் மகிழ்ச்சியாக இல்லை. பாலச்சந்தர் போல் வெகு சிலரே அங்கு இருந்தனர். ஒருவேளை எனக்கு வாய்ப்பு வந்தாலும், அது வெறும் வாய்ப்பே தவிர நல்ல படமாக இல்லை. எனவே நல்ல படங்களுக்காக நான் தேட வேண்டி இருந்தது. பெங்காலியில் உருவானாலும், அது மிகவும் தூரத்தில் இருந்தது, எனக்கு மொழியும் தெரியாது. இந்த பசுமையான நிலம் தான், எந்த நல்ல நடிகருக்கும் சிறந்த வாய்ப்பை கொடுக்கும் இடமாக இன்று வரையிலும் இந்தியாவில் இருந்து வருகிறது" என்ற பதிலளித்தார்.

‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் கம்பேக்’ என்று பிராண்ட் செய்வது சரியா? இது போன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா எனக் கேட்கப்பட "புதிய காம்போக்கள் வர வேண்டும் என்பது முக்கியம். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கையில் எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், ‘இப்போது நிறுத்தாதே, ஒரு நல்ல படம் செய்துவிட்டு நிறுத்து’ எனச் சொல்வார்கள். ஒரு நல்ல படம், ஒரு நல்ல படம் என அதன் பின்னால் தான் ஓடிக்கொண்டிருக்கிறேன் இப்போது" என்றார்

உங்களுடைய சுயசரிதையை எழுத ஆர்வம் உள்ளதா என்ற கேள்விக்கு "நிறைய பொய் சொல்லவேண்டி வரும். எனக்காக அல்ல, மற்றவர்களுக்காய். அதனால்தான் என்னுடைய சுயசரிதையை எழுதாமல் இருக்கிறேன். என்னை பற்றிய உண்மையை சொன்னாலும் கூட மற்றவர்களுக்கு ஆபத்து வரலாம். ஆனால் நான் எல்லோருக்கும் சொல்வது உங்களது சுயசரிதையை எழுதுங்கள் என சொல்வேன். அது உங்களுக்கே உங்களை பற்றிய புரிதலை உண்டாக்கும். என்னுடைய சுயசரிதை பாதி எழுதப்பட்டுவிட்டது. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகமே. அதை சற்று வரிசைப்படுத்தி எழுத வேண்டியது மட்டுமே என் வேலையாக இருக்கும்" என்றார்.

உங்களை உலகநாயகன் என அழைக்க வேண்டாம் என சொல்லிவிட்டீர்கள். பின்பு எப்படி அழைக்க வேண்டும் எனக் கேட்டதற்கு "எப்படி வேண்டுமானால் அழைக்கலாம், ஆனால் அழையுங்கள். செல்லக்குட்டி என குறிப்பிட்ட வயது வரைதான் கொஞ்சுவார்கள். பின்பு அது மாறிவிடும். அப்படித்தான் இதுவும். மேலும் நான் உலகம் முழுக்க சுற்றி இருக்கிறேன். உலகத்தின் அளவு என்ன என்பது எனக்கு தெரியும். அதன் நாயகன் என என்னை அழைத்துக் கொண்டால் எனக்கு வெட்கமாக இருக்க வேண்டாமா? அதனால் தான் அப்படி அழைக்க வேண்டாம் எனக் கூறினேன்" என்றார் கமல்.