ஜி டி நாயுடுவை இந்தியாவின் எடிசன் என புகழ்ந்து பேசும் சத்யராஜ், எடிசன் மியூசியம் பார்த்தபின் ஜி டி நாயுடு மியூசியம் இன்னும் பெருமை தருவதாக கூறுகிறார். மாதவன் ஜி டி நாயுடுவின் பல வயது தோற்றங்களை நம்ப வைக்கும் வகையில் நடித்ததையும், கோவை ஸ்லாங் பேசும் திறன் தன்னை விட மேம்பட்டதாக இருந்ததையும் வியப்புடன் பகிர்ந்து, படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என உறுதியாக கூறுகிறார்.
எனக்கு இந்தப் படத்தில் நடிக்க துவங்கியதும் ஏற்பட்டது குற்ற உணர்வு தான். கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்துவிட்டு ஜி டி நாயுடு மியூசியம் போனதே இல்லை என. ராஜ்குமார் சார் தான் அழைத்து போய் காட்டினார். எங்கள் குடும்பமும், அவர் குடும்பமும் நான்கு தலைமுறைகளாக பழக்கம். ஜிடி நாயுடு படம் என்றதும் கிருஷ்ணா கதையை வந்து கூறினார், நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்கு ஆச்சர்யம். இப்படி நிஜமாகவே நடந்ததா என்று.
இந்தப் படம் பெரிய வெற்றியடையும் என ஏன் தோன்றுகிறது என்றால், ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான எல்லா விஷயமும் இதில் உண்டு. அதைவிட அதிகமாகவே இருக்கிறது. அண்ணாமலை ரஜினி சார் சவால் விடும் காட்சி போன்ற சம்பவம் கூட இருக்கிறது. நான் இதில் மிக வியந்த விஷயம் என்றால், மாதவன் ஜி டி நாயுடு போல கெட்டப் போட்டு வந்தார் எனக்கு அடையாளமே தெரியவில்லை. படத்தில் ஜி டி நாயுடுவின் வெவ்வேறு வயதை காட்டும் விதமாக நடித்துள்ளார் மாதவன்.
நான் கோவை சார்ந்த நபர் என்பதால், மாதவன் கோவை ஸ்லாங் எப்படி பேசுவார் என பார்க்கலாம் என இருந்தேன். ஆனால் அவர் பேசிய விதம் என்னையே மிஞ்சும் விதமாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் ஆகும். ஜி டி நாயுடுவை தமிழ்நாடு, இந்தியா என சுருக்க முடியாது. அவரை இந்தியாவின் எடிசன் என சொல்வார்கள். நான் எடிசன் ஊரில் இருக்கும் மியூசியம் சென்றேன். அதை பார்த்துவிட்டு ஜி டி நாயுடு மியூசியம் பார்த்தால், ஜிடி நாயுடு இன்னும் பெரிய சாதனையாளர் என தோன்றியது.