Vetrimaaran Youth
கோலிவுட் செய்திகள்

”ஜி.வி. மற்றும் கென் இணைந்து நடிக்க வேண்டும்” - வெற்றிமாறன் வைத்த கோரிக்கை | Vetrimaaran | Youth

ஒரு நடிகராகவோ, ஒரு இயக்குநராகவோ கென் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டான் என்றுதான் சொல்வேன்.

Johnson

கென் கருணாஸ் இயக்குநராகவும்,  ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வெற்றிமாறன் பேசியபோது, "இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தைப் பற்றியும், கென்னைப் பற்றியும் பகிர்ந்துகொள்ள நிறைய இருக்கிறது. இங்கு அவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது மிகவும் மகிழ்ச்சிகரமான குழுவாக தெரிகிறது. இப்படி சந்தோஷமாக நேர்மறையாகப் பணியாற்றுவது எல்லாப் படத்திலும் நடக்காது. ஒரு சில படங்களுக்குத்தான் அமையும். அப்படி நடக்க முக்கியமான காரணம், அந்தக் குழுவை வழிநடத்துவார் நேர்மறையான ஆளாக இருக்க வேண்டும். கென் அந்த நம்பிக்கையை இந்தக் குழுவுக்குக் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தக் கதையைக் கேட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கும். நான் இந்தக் கதையை கேட்டுவிட்டு கதை ரொம்ப நன்றாக இருக்கிறது, இரண்டாம் பாதி மிக நீளமாக இருக்கிறது எனச் சொன்னேன். ஆனால் இந்தக் கதையைச் சொல்லும்போது கென்னிடம் இருந்த எனர்ஜி, மிக நுணுக்கமாக இசையெல்லாம் சேர்த்து கதை சொன்ன விதம் அவனுக்குப் பெரிதாக உதவியது. ஒரு நடிகராகவோ, ஓர் இயக்குநராகவோ கென் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டான் என்றுதான் சொல்வேன். தனுஷை நிறைய உள்வாங்கி இருக்கிறான், அவருடைய தாக்கம் அவனிடம் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அவனாக தயார் ஆனவன் என்றுதான் சொல்வேன். இதில் நான் செய்தது எதுவும் இல்லை.

தனுஷ், ’அசுரன்’ சமயத்தில் நான் ஒருவரை என் மகனாக நினைக்க வேண்டும் என்றால், அவர் என்னுடனே இருக்க வேண்டும் எனச் சொல்லி அவனைக்கூடவே வைத்திருந்தார். அது அவனுக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஒரு இளைஞன் பெரிய குழுவைச் சமாளித்து இவ்வளவு தூரம் வருவது என்பது சாதாரண விஷயமல்ல.

வெற்றிமாறன்

இந்தப் படத்திலிருந்து இதுவரை பார்த்த காட்சிகள் எல்லாம் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜிவி மற்றும் கென் நடிக்கும் புரோமோ வீடியோ எல்லாம் நன்றாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.