"என்னை ஹீரோ என நம்பாத அந்த ஒருவர்.." - கென் சொன்ன சம்பவம் | Ken Karunas | Youth
கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் `யூத்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கென் கருணாஸ் பேசியபோது, "என்னை நம்பி இந்தப் படத்தை எடுக்க என்னுடன் துணை நின்றவர்களுக்கு நன்றி. நீங்கள் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்திருக்க முடியாது. வாழ்க்கையில் முக்கியமான ஐந்து பேரை பற்றிப் பேச நினைக்கிறேன். முதலில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் தாமிரா. அவர் இப்போது உயிரோடு இல்லை. `ரெட்டச்சுழி' என்ற படத்தில் என்னை நடிக்க வைத்தது அவர்தான். அவருடைய ஆசிர்வாதம் என்றும் இருக்கும் என நம்புகிறேன்.
அடுத்தது என்னை எனக்கே கண்டுபிடித்துக் கொடுத்து, ’உன்னால் செய்ய முடியும்’ எனச் சொன்ன வெற்றிமாறன் சார். நான் எத்தனை மேடைகள் ஏறினாலும் இந்த நன்றியை உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பேன். வாழ்க்கையில் என் அப்பா அம்மாவுக்கு அடுத்து அதிகமான விஷயங்களை அவருடன்தான் பகிர்ந்திருக்கிறேன். அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு அறிவுரை கூறுவார். அடுத்து, அம்மா முத்து சூர்யா. அவரால்தான் இந்தப் படமே நடந்தது. ரொம்ப நன்றி அண்ணா. அன்று இரவு, ’என் நண்பர்கள் இருக்கிறார்கள், இந்தப் படத்தைச் செய்வார்கள் என அவர் மட்டும் சொல்லவில்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. அவர் சொன்ன வார்த்தையை நம்பி ஒரு முதல் பட ஹீரோவுக்குச் செய்யும் செலவைவிட அதிகமாகச் செலவு செய்த என் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் நன்றி.
என் அப்பா, அம்மா, படத்தின் மூன்று கதாநாயகிகளுக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ் அண்ணா நன்றி. இந்தப் படம், வெளியே தெரிய நீங்கள் பெரிய காரணம். இந்தப் படம் செய்யும்போது ஒரு சம்பவம் நடந்தது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒரு சின்ன பையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார். அந்தப் பையன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, ’என்னப்பா’ என்று கேட்டேன். ’இல்ல.. படத்துடைய ஹீரோ யார் என பார்க்கிறேன்’ என்றார். ’யாராக இருக்கும் எனச் சொல்லு’ என்றேன். என்னைத் தவிர எல்லோரையும் சொன்னார். பின்னர் நான் நடிப்பதை எல்லாம் பார்த்துவிட்டு என்னுடன் போட்டோ எடுக்க வந்தார். அப்போதும் நான் படத்தில் காமெடி நடிகர் என்றுதான் நினைத்தார். தம்பி என்னை காமெடியனாக நினைத்தாவது படத்தை பார்த்து விடுப்பா.
கடைசியாக ஒருவரைப் பற்றி பேச வேண்டும். நான் இயக்குநராக இங்கு நிற்கக் காரணம் தனுஷ் சார்தான். ரொம்ப ரொம்ப நன்றி சார். தெரிந்தோ, தெரியாமலோ நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். ’வாத்தி’ படத்தில் நான் முதல் பரிசு வாங்குவதைப்போல ஒரு காட்சி நடித்தேன். அதைப் பார்த்து நீங்கள், ’இதேபோல் நீ விருது வாங்குவதை நான் பார்க்க வேண்டும்’ எனச் சொன்னீர்கள். நான் எப்போது விருது வாங்குவேன் என தெரியாது. ஆனால் இந்த மேடையில் உங்களின் உதவி இயக்குநர், ஓர் இயக்குநராக நிற்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ’திருச்சிற்றம்பலம்’ மேடையில் `கடைசி வரைக்கும் நன்றியோடு இருந்தா அது மாஸ்' என சொன்னீர்கள். நான் கடைசிவரைக்கும் உங்கள் இருவருக்கும் நன்றியோடு இருப்பேன் சார்" என்றார்.

