இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் pt web
கோலிவுட் செய்திகள்

“மற்றவர் மனம் புண்படும்போது பொறுப்பேற்றுக்கொள்வது முக்கியமானது” மிஷ்கின் குறித்து வெற்றிமாறன்

இயக்குநர் மிஷ்கின் பேசியது சர்ச்சையாகி இருந்த நிலையில், இன்று நடந்த திரைப்பட நிகழ்வில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். பின் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் “மற்றவர்கள் மனம் புண்படும்போது, அதற்காக பொறுப்பேற்றுக்கொள்வது மிக முக்கியம்” எனத் தெரிவித்தார்.

அங்கேஷ்வர்

பாட்டல் ராதா திரைப்பட நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், தான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “பாடலாசிரியர் தாமரை என்னை விமர்சித்துப் பேசியிருந்தார். அவரிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர் ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார், ‘வெற்றி என்னை இப்படி பேச வைத்துவிட்டது’ என சொல்லியிருந்தார். 18 வருடமாம போராடிக்கொண்டே இருக்கிறேன். வெற்றி என் தலைமேல் இருந்திருந்தால் இந்நேரம் நான் பெரிய பெரிய ஆட்களுடன் எல்லாம் நான் படம் செய்திருக்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தது எனக்கு மிகப்பிடித்த, மிகச்சிறந்த ஆளுமை லெனின் பாரதி. அவரும் என்னை விமர்சித்திருந்தார். அது தத்துவ ரீதியான விமர்சனம். அவருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தது அருள்தாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன், தானு, என்மேல் செருப்பை எறிவேன் என்று சொன்ன நண்பர் என அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

பின் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “அந்த நிகழ்வு முடிந்த பின் நானும் அமீரும் நிறைய நேரம் பேசினோம். பின் மிஷ்கினை அழைத்து என் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். அவர், ‘உன்கருத்துகளுடன் உடன்படுகிறேன் வெற்றி. இதைப்பற்றி எனக்கும் சில கருத்துகள் இருக்கிறது’ என பேசினார். கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு நிகழ்வு நடக்கிறது. அது தவறாகும்போது அதை உடனடியாக சரிசெய்து கொள்கிற தைரியம் மிஷ்கினுக்கு இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. மற்றவர்கள் மனம் புண்படும்போது, அதற்காக பொறுப்பேற்றுக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.