அல்லு அர்ஜூன், அட்லி எக்ஸ் தளம்
கோலிவுட் செய்திகள்

"அல்லு அர்ஜூனுக்கு புதிய தோற்றம்..." - AA22xA6 பற்றி அட்லீ சொன்னதென்ன? | Atlee | Allu Arjun

முன்னணி இயக்குநர் அட்லீ, இப்போது விளையாட்டுத் துறையிலும் கால் பதித்துள்ளார்.

Johnson

முன்னணி இயக்குநர் அட்லீ, இப்போது விளையாட்டுத் துறையிலும் கால் பதித்துள்ளார். Pickleball குழுவான Bengaluru Jawans, இப்போது Bengaluru Open 2025ல் பங்கு கொள்கிறது. இதற்கான துவக்கவிழா நேற்று பெங்களூரில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டார். அங்கு அளித்த பேட்டியில் Pickleball பற்றியும் சினிமா பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

” ‘ஜவான்’ என்ற பெயர் இருந்தாலே, உங்களுக்கு ஒரு ராசி இருக்கிறது போலவே?”

" ‘ஜவான்’ படம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு ஆசிர்வாதம்போல அமைந்தது. பெங்களூரு குழுவை வாங்கியபோது, ப்ரியா, ’நாம் ஏன் ’பெங்களூரு ஜவான்’ என பெயர் வைக்கக்கூடாது’ எனக் கேட்டார். அப்படித்தான் இந்த பெயர் அமைந்தது. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் நாங்க முதல் இடம் வந்தோம். ’ஜவான்’ என்னுடன் பிணைப்புடன் இருக்கும் ஒன்று. பெங்களூருவுக்கும் எனக்கும் உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கிறது."

”எதனால் Pickleball-ஐ தேர்வு செய்தீர்கள்?”

"சினிமா தாண்டி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏற்கெனவே வளர்ந்த பல விளையாட்டுகள் இருந்தது. ஆனால் அதிகம் பரிட்சயம் இல்லாத, நம்முடனே சேர்ந்து வளரக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்க வேண்டும் என நினைத்தோம். என்னுடைய படப்பிடிப்புகளுக்கு மத்தியில் Pickleball விளையாடும் பழக்கம் எனக்கு உண்டு. இது மிகவும் சுவாரஸ்யமான ஆட்டம். பின்புதான் அதைப் பற்றி ஆராய ஆரம்பித்தேன். என் தோழி சமந்தாவும் ஒரு டீம் வைத்திருக்கிறார் என தெரிந்துகொண்டேன். அதன் பின்தான் இந்த ஆட்டத்தைத் தேர்வு செய்து பெங்களூரு அணியை அமைத்தோம். Pickleball மற்றும் Padel இரண்டும் இந்தியாவில் வேகமாய் வளர்ந்து வரக்கூடிய விளையாட்டுகள். இதில் Pickleballலுக்கு என கடுமையான வரைமுறைகளோ, கட்டுமானமோ இல்லை. அது அனைவராலும் எளிமையாக விளையாடக் கூடியது. ஒருநாளில் 19 மணி நேரம் வேலை செய்து துவங்கியது என் சினிமா பயணம். தூங்குவது 5 அல்லது 6 மணிநேரம்தான். இதுதான் என் கடந்த 19 ஆண்டுகால சினிமா பயணம். இப்போதும் 18 மணிநேரம் உழைக்கிறேன். ஆனால், அது பரிந்துரைக்கக்கூடியது அல்ல. எனவே உடலைக் காக்க வேண்டும் என உடற்பயிற்சிகள் மேற்கொண்டேன். அதைத் தாண்டி என்னை உற்சாகப்படுத்தும் ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். Pickleball கிடைத்தது. என் படப்பிடிப்புத் தளங்களில்கூட Pickleball செட் அப் அமைத்து, பிரேக் நேரங்களில் சென்று விளையாடி புத்துணர்ச்சியாக திரும்புவேன்."

”Pickleball தவிர பெங்களூருவில் வேறு என்ன தொடர்புகள் உங்களுக்கு உண்டு?”

"நிறைய சினிமா நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். யாஷ் சார் நெருங்கிய நண்பர். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மரியாதை வைத்திருக்கிறோம். இணைந்து பணியாற்ற வாய்ப்பு அமையுமா என காத்திருக்கிறோம்."

Kantara

”இப்போதைய பேச்சுகள் அனைத்தும் `காந்தாரா சாப்டர் 1' பற்றிதான். நீங்கள் படத்தைப் பார்த்தீர்களா?”

"ஆம். படம் வெளியானபோது ஆம்ஸ்டர்டாமில் இருந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்துச் சென்று பார்த்தேன். பார்த்து முடித்ததும் ரிஷப் செட்டிக்கு போன் செய்து பேசினேன். அவர் பலருக்கும் தன்னம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். ஓர் இயக்குநராகவே அது கடினமான உழைப்பு. ஆனால், அதில் அவரும் நடித்தும் இருக்கிறார் என்பது அசாத்தியமான ஒன்று. அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். "

”A6 x AA 22 படத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?”

"படப்பிடிப்பு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஒரு படத்திற்கு எந்த முன்மாதிரிகளும் இல்லை. எனவே, இதன் உருவாக்கத்தில் நாங்களே புதிதாய் பல விஷயங்களை கண்டுபிடித்து வருகிறோம். பார்வையாளர்களுக்கு பெரிய ஒன்றைக் கொடுக்க முயலுகிறோம். புது சுவையையும், புது காட்சியமைப்பையும் கொடுப்போம். பார்வையாளர்கள் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தவும் முன்னேறவும் உதவி இருக்கிறார்கள். `ராஜா ராணி' செய்தபோது, அடுத்து சிறப்பாக ஒன்றை எதிர்பார்த்தார்கள், `தெறி' இயக்கினேன். அடுத்து `மெர்சல்', `பிகில்', `ஜவான்' என என்னை நகர்த்தி வந்திருக்கிறார்கள். எனக்கு இது ரிஸ்க் என தோன்றவில்லை. நான் இந்தப் பயணத்தை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன். புதிதான, ஆர்வத்தை தூண்டக்கூடிய, தொடர்ந்து பார்க்க விரும்பக்கூடிய ஒன்றை செய்கிறேன்."

AA22xA6

”அல்லு அர்ஜூன் இந்தப் படத்திற்காக புதிதான தோற்றத்தில் வர இருக்கிறாராமே?

"நாங்கள் சிறப்பான ஒன்றைக் கொடுக்க முயல்கிறோம். சில மாதங்கள் காத்திருங்கள். ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இதற்குமுன் பாக்காத ஒன்றைச் செய்கிறோம். இந்தியர்களுக்கு சமமாக, ஹாலிவுட் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்களும் இது மிக சவாலான படம் என சொல்கிறார்கள்."