சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படம் இன்று வெளியாவதாக இருந்தும், பண நெருக்கடி காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் இயக்குநர் பாலாஜி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். அதே நேரத்தில் படம் தமிழகத்தில் தடைப்பட்டிருந்தும், புனே, மும்பை போன்ற வடமாநிலங்களில் CUBE மூலம் சட்டவிரோதமாக திரையிடப்பட்டதாக தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (மே 14) வெளியாக இருந்தது. ஆனால் சில பண நெருக்கடி காரணமாக வெளியாவதில் சிக்கல் உருவானது. இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியார் நிறுவனம் சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது. இது குறித்து நேற்று நள்ளிரவு வரை இந்த பேச்சு நீண்டிருக்கிறது. பிரச்சனை முடியாததால் இன்று படத்தை வெளியிட முடியவில்லை. படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர் ஜே பாலாஜி கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இன்னொரு பக்கம் `கருப்பு' திரைப்படம் தமிழகத்தில் வெளியாகாத நிலையில், புனே, மும்பை உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக CUBE வெளியிட்டது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சிவா, தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் CUBE நிறுவனத்தில் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசிய போது "வடமாநிலங்களான புனே, மும்பை, வாரணாசி ஆகிய இடங்களில் படம் திரையிடப்பட்டதாக ரசிகர்கள் சிலர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். பின்னர் CUBEஐ தொடர்பு கொண்டு படத்தை நிறுத்தவே 1 மணி நேரம் ஆகிவிட்டது.
எங்கள் தரப்பில் தவறு நடந்துவிட்டது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டார்கள். இருப்பதிலேயே CUBE தான் பாதுக்காப்பு என நம்பினோம். அந்த நம்பிக்கை உடைந்து போனதில் வருத்தம். அவர்கள் விளக்கம் கொடுத்தாலும், அதற்கான இழப்பீடு கொடுப்பது பற்றி பேசுகிறோம் என சொன்னாலும், படம் எவ்வளவு நேரம் ஓடியது, ஜனநாயகன் போல இதுவும் பைரஸியில் வெளியாகிவிடுமோ என்ற பயம் உள்ளது. மேலும் இதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், இந்த பிரச்சனையை முதலைமைச்சரிடம் எடுத்து சொல்ல இருக்கிறோம். அவர் எங்கள் துறையை சேர்ந்த முதல்வர் நிச்சயம் புரிந்து கொள்வார்" என்று பேசி உள்ளார்.
இன்று காலையில் இருந்து மதியம் வரை அனைத்து காட்சிகளும் ரத்தானது. அதனை தொடர்ந்து மாலை மற்றும் இரவு காட்சிகளும் ரத்து என தகவல்களை சில திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துவிட்டனர். எனவே நாளை காலை 9 மணிக்கு படத்தை வெளியிடும் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றது தயாரிப்பு தரப்பு. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு பல காரணங்களால் தாமதமாகி, ஒரு வழியாக தேதி அறிவிக்கப்பட்டு, மே 14 என ரிலீஸுக்கு கருப்பு தயாரான நிலையில், இப்போது மீண்டும் ஒரு தடை. இதனை கருப்பு எப்போது தாண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.