சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கியுள்ள படம் `Mana Shankara Vara Prasad Garu'. இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் இயக்குநர் அனில் ரவிப்புடி. அதில் "நான் எடுத்த 8 படங்களில் `F2', `Sarileru Neekevvaru', `Sankranthiki Vasthunam' என மூன்று படங்கள் சங்கராந்திக்குதான் வெளியாகியுள்ளது. இப்போது அதே நாளில் `Mana Shankara Vara Prasad Garu' படமும் வர இருக்கிறது. சிரஞ்சீவி சாரை ஒரு குடும்பப் படத்தில் மீண்டும் நடிக்க வைத்திருக்கிறேன். அவரது காமெடியான காட்சிகள் நிறைய இதில் இருக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்பு மிக எளிமையான ஒன்றாக இருக்க வேண்டும் என யோசித்தோம். அப்போதுதான் சிரஞ்சீவி அவர்களின் நிஜ பெயரான சிவசங்கர வர பிரசாத் என்பதையே தலைப்பாக மாற்றினோம். அதற்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் வெங்கடேஷ் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா அனைவரும் தெலுங்கு சினிமாவின் தூண்கள் போன்றோர். இதில் யார் இணைந்து நடித்தாலும் ரசிக்கலாம். அப்படி இருவர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. படத்தில் வெங்கடேஷ் வரும் காட்சிகள் கொண்டாடப்படும். அவர்கள் இருவரும் வரும் பாடலும் சிறப்பாக வந்திருக்கிறது" என்றார்.
”விஜயின் ’ஜனநாயகன், ’பகவத் கேசரி’ ரீமேக்கா” என அவரிடம் கேள்வி கேட்கப்பட "அந்த இயக்குநரேகூட, `சிலர் ரீமேக் என்கிறார்கள், சிலர் இல்லை என்கிறார்கள், இது தளபதி படம்' என மறைத்து மறைத்துதான் பேசுகிறார். நாமும் இதை ஒரு தளபதி விஜய் படமாகவே எடுத்துக் கொள்வோம். ’வாரிசு’ படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நான் இருமுறை விஜய் சாரை சந்தித்தேன். அவர் சிறந்த ஜென்டில்மேன்.
அரசியல் வருகை காரணமாக அவரது கடைசிப் படமாக உருவாகியுள்ள இதில் என் பங்களிப்பு இருக்கிறதா, இல்லையா என்பதை ரிலீஸுக்கு பின் தெரிந்துகொள்வோம். அந்தப் படத்தை எப்படி அவர்கள் ட்ரீட் செய்துள்ளனர் என பார்ப்போம். ரிலீஸ் ஆவதற்கு முன்பு இது ரீமேக்கா, இல்லையா எனப் பேச வேண்டாம். ரிலீஸுக்கு பின்பு அதை அப்போது பேசுவதே சரியாக இருக்கும். அதுவரை இது தளபதி விஜய் படம்" என பதிலளித்தார்.