நடிகர் சிவகார்த்தியேன் pt desk
கோலிவுட் செய்திகள்

“வாழ்க்கையில் ஜெயிக்கணும்; உடன் உள்ளவர்களையும் ஜெயிக்க வைக்கணும்” - நடிகர் சிவகார்த்திகேயன்

“எனக்கு கணக்கு வராது. என் தந்தை ஒரு மணி நேரம் கெஞ்சி சீட் வாங்கிக் கொடுத்த இந்த பள்ளியில் இன்று சிறப்பு விருந்தினராக நானே வந்திருக்கேன்” என தான் படித்த பள்ளியில் நடிகர் சிவகார்த்தியேன் பேசினார்.

PT WEB

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மான்போர்ட் சகோதரர்களின் 353 வது பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்பள்ளியின் முன்னாள் மாணவர் நடிகர் சிவகார்த்திகேயன், தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

இதைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை நான் பயின்றேன். எட்டாம் வகுப்பு வரை 8 பள்ளிகளுக்கு மாறியவன் நான். காரணம், தந்தையின் அரசு வேலை. நான் பிறப்பதற்கு முன்பு எனது தந்தையும் தாயும் இந்த பள்ளியின் வழியாக சென்றுள்ளனர். அப்போது ‘இவ்வளவு பெரிய பள்ளியாக உள்ளது. நமக்கு மகன் பிறந்தால் அவனை இங்கே படிக்க வைக்க வேண்டும்’ என பேசி இருந்தனர்.

“எனக்கு கணக்கு வராது என்று சிவகார்த்திகேயன் சொன்னதும் கூச்சலிட்ட மாணவர்கள்”

அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பில் சேர்ப்பதற்கு எனது அப்பா இங்கு உள்ள பள்ளி தலைமையாசிரியரை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு என்பதால் நுழைவுத் தேர்வு எழுதச் சொன்னார்கள். எனக்கு கணக்கு வராது. நான் நுழைவுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு சென்றேன். அப்பா என் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். காரணம் நுழைவுத் தேர்வில் கணக்கு சரிவர நான் எழுதவில்லை. பிறகு ஒரு மணி நேரம் கெஞ்சி சீட்டு வாங்கினேன் என அப்பா குறிப்பிட்டார்.

நடிகர் சிவகார்த்தியேன்

“எனது அப்பா யாரிடமும் போய் கெஞ்சி எதற்கும் நிற்க மாட்டார் ஆனால் எனக்காக நின்றார்”

என் அப்பா யாரிடமும் போய் கெஞ்சி எதற்கும் நிற்க மாட்டார். எனக்காக நின்று இந்த பள்ளியில் சேர சீட்டு வாங்கிக் கொடுத்தார். அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றேன். அப்பா அன்று ஒரு மணி நேரம் நின்று கெஞ்சி சீட்டு வாங்கியதற்கு, இப்போது நான் மேடையில் நிற்பது நிகராகிவிட்டது என உணர்கிறேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து வளர்ந்துள்ளேன் என்பது பெருமையாக உள்ளது” என்றார்.

சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டு இருக்கும்போது, ஒவ்வொரு ஆசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார் அப்பொழுது கூட்டத்தில் வள்ளுவன் என்ற ஆசிரியர் எழுந்து சென்றுள்ளார். அப்போது “சார், நீங்க வகுப்பு எடுக்கும் பொழுது நான் எழுந்து சென்றேனா? உட்காருங்கள்... நான் பேசுவதை கேளுங்கள்” என்று கிண்டலடித்தவுடன் மாணவர்கள் அனைவரும் குரல் எழுப்பி சிரித்தனர்.

வாத்தியார் அடித்ததால் தான் இன்று நன்றாக இருக்கிறேன்:

தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “இங்குள்ள ஆசிரியர்கள் மீது மிகுந்த அன்புள்ளவன். இங்கே ஜேம்ஸ் என்ற ஆசிரியர் அடித்தால் செவுல் திரும்பிவிடும். நான் வாத்தியார் அடித்ததால்தான் இன்று நன்றாக இருக்கிறேன். இந்தப் பள்ளியை என்றும் மறக்க மாட்டேன். இப்பொழுது மாணவர்களுக்கு பெற்றோர், சோசியல் மீடியா என்ற பிரஷர் இருக்கும். ஸ்கூல் லைப்பை மிஸ் பண்ணாதீங்க. நல்லா படிங்க. குறைந்தபட்சம் மார்க் எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற முயலுங்கள்.

எனக்கு ஒரு படம் ஹிட்டாகிற சந்தோஷத்தை விட ஒரு சதவீத அதிக சந்தோஷம், இந்த பள்ளிக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. வாழ்க்கையில் ஜெயிக்கணும். உடன் உள்ளவர்களையும் ஜெயிக்க வையுங்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.