ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துச் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் `ஆண்பாவம் பொல்லாதது'. சிவகுமார் முருகேசன் எழுதிய இக்கதையை இயக்கியவர் கலையரசன் தங்கவேல். கடந்த வாரம் இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் உள்ள சிக்கல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின. குறிப்பாகப் பெண்களால்தான் ஆண்களுக்குச் சிக்கல் என்ற தொனியில், ஆண் மைய சிந்தனைகளை முன்வைத்து இப்படம் பேசி இருந்த பல கருத்துக்களுக்கு வலுவான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்து வந்தன. தற்போது இந்தப் படம்பற்றி எழுத்தாளர் ஜா.தீபா தனது பார்வையை புதிய தலைமுறைக்காகப் பகிர்ந்துள்ளார். ஆண்பாவம் பொல்லாதது குறித்த அவரது கண்ணோட்டம் பின்வருமாறு,
"இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. விவாகரத்துகள் எதனால் நடக்கிறது, சிறிய விஷயங்களுக்குக் கூட விவாகரத்து கேட்கும் நிலை உருவாகி இருப்பது என்பதை எல்லாம் எடுத்திருக்கிறார்கள். ஒரு ஈகோ மோதலின் காரணமாக ஆணை காலி செய்ய ஜீவனாம்சம் கோரக்கூடிய பெண்கள் சிலர் உண்டுதான். தவறான திருமணத்தினால் வாழ்க்கையை இழந்த ஆண்களும் உண்டு. தன் வாழ்நாள் எல்லாம் சேமித்த பணத்தை, செட்டில்மென்ட்டாகக் கொடுத்துவிட்டு, தன் வாழ்க்கையை முதலிலிருந்து துவங்கிய ஆண்கள் இருக்கிறார்கள். ஒரே அடியாக இதனை ஆண்களின் தவறு எனக் கூறிவிட முடியாது. மோசமான சூழலில் ஆண்கள் இருக்கிறார்கள்தான்.
எதற்காக விவாகரத்து, நாம் என்ன தவறு செய்தோம், வீட்டில் எப்படி சொல்லிக் கொடுத்தார்களோ அப்படித்தானே இவர்களிடம் நடந்து கொண்டோம், இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது எனப் புரிந்து கொள்ளாத ஆண்களும் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் சொன்னது போல் அவர்களுக்கான அவகாசம் நாம் தந்துதான் ஆக வேண்டும். கணவன் - மனைவி இடையே என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு முன்னமே பிரிவு உண்டாகிறது. அதேபோலச் சுதந்திரம் என்ற பெயரில், நான் என்ன செய்தாலும் நீங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது எனப் பேசும் பெண்களும் இருக்கிறார்கள். இது எல்லாம் சரி தான். ஆனால், இவற்றின் சதவீதம் குறைவு. இந்தச் சதவீதக் குறைவை, படத்தில் பொதுமைப்படுத்தி இருக்கிறார்கள் அதுதான் பிரச்னை.
Feminism என்ற ஒரு Theory எப்படி தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறதோ, அதேபோலத்தான் இதிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்குநருக்கு, இந்த விஷயத்திலிருந்து ஒன்று சொல்லத் தோன்றி இருக்கிறது. ஆண்கள் பக்கம் இருந்து பார்க்க வேண்டும், ஆண்கள் படும் வேதனைகளை யாரும் சொல்லவில்லை, பெண்களுக்கு மட்டுமே இங்கு ஆதரவு இருக்கிறது. சட்டமும் பெண்களுக்கானதாகத்தான் இருக்கிறது. பெண்ணியம் என்ற பெயரில் போலி பெண்ணியவாதிகளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அவர் நினைத்ததின் வெளிப்பாடுதான் இந்தப் படம். உதாரணமாக Feminism என்பதை பற்றி அவர் சொல்வதை எடுத்துக் கொள்ளலாம், பேருந்தில் செல்கையில் ஆண் அமர்ந்திருக்கும்போது, பெண் நிற்கும்போது, நீயும் உட்காரு, நானும் உட்காருகிறேன் எனச் சொல்வது சமத்துவம், அது பெண்ணியம். நான் நின்று கொண்டிருக்கையில் நீ அமர்ந்திருக்கிறாயே என ஒரு பெண் சொன்னால் அது போலி பெண்ணியம் என்று சொல்கிறார்.
இதில் ஒன்றை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் சென்று எழச் சொல்லும் பெண்கள் இருக்கவே மாட்டார்கள். எப்போது சொல்வார்கள் என்றால், பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தால், இது எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை, இதில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்பார்கள். இதுதான் வித்தியாசம். எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றில் நீங்கள் உரிமை கோரி நின்றால் நாங்கள் கேட்போம். இதைப் போலி பெண்ணியம் எனச் சொன்னால் என்ன செய்வது? இதைத் தெளிவாகச் சொல்வதிலிருந்து இப்படம் தவறி இருக்கிறது.
திரும்பத் திரும்ப ஒரு பெண் க்ளாஸ் எடுக்கிறார், நான் என் கணவருக்குச் செய்வது காதல் என்று. இப்படத்தின் அடிப்படை பிரச்னையே என்ன என்றால், படத்தின் கதாநாயகி என்ன மாதிரியான கேரக்டர் எனத் தெரியவே இல்லை. தோழர் என அழைத்தால் இவனுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு இடத்தில் தோழர் என்பது பெரிய வார்த்தை, அதைச் சாதாரணமாகப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறார். அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, பெண்ணியவாதிதான் தோழர் என்று சொல்வார்கள், தோழர் எனச் சொல்லும் பெண்ணியவாதிகள் சமூகத்துக்கு ஒவ்வாதவர்கள் என்பது மாதிரியான கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானது. இவ்வளவு ஜனரஞ்சகமான ஒரு படத்தில் இப்படியான கருத்துகளை சொல்லும்போது ரொம்பவும் கவனம் தேவை.
சில வழக்குரைஞர்கள் வருகிறார்கள், அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதால், தங்களிடம் வரும் தம்பதிக்கு விவாகரத்து வாங்கி தர நினைக்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. எப்படி இவ்வளவு மோசமான கருத்தை இவர்கள் பதிவு செய்கிறார்கள் என்பது குறித்து எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்களா எனத் தெரியவில்லை. இங்கு Feminism-ன் வேலையே ஆண்களிடமிருந்து பெண்களைப் பிரிப்பதுதான், அதுவும் சட்டத்தைத் தன் வேலையாக எடுத்துக் கொண்டவர்கள் அப்படிதான் என நிறுவ முயற்சிக்கிறார்களா? ஒரு வழக்குரைஞர் விவாகரத்து பெற்றிருக்க கூடாதா? அவர்கள் விவாகரத்து பெற்றதால் பிறரையும் அப்படி நடத்துகிறார்கள் எனச் சொல்கிறார்களா? இவ்வளவு முக்கியமான விஷயத்தை மிகச் சாதாரணமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
ஆண்களின் உழைப்பை ஜீவனாம்சமாகப் பெண்கள் பெறுகிறார்கள், சட்டம் பெண்களுக்கானதாக இருக்கிறது, இங்குப் போலி பெண்ணியவாதிகள் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் சொல்ல விரும்பியிருந்தால், அந்தக் கதாநாயகியின் பாத்திரத்தை அப்படி உருவாக்கி இருக்கலாம். முதல் காட்சியிலேயே ஜாதகம் பார்க்கும்போது, மாப்பிள்ளை கார் வைத்திருக்கிறார், இவ்வளவு சம்பாதிக்கிறார் அவரை அடிமையாக வைத்துக்கொள் என அந்தப் பெண்ணிடம் சில தோழிகள் கூறுகிறார்கள். அப்படி யாரும் இங்கே சொல்வதில்லை, அதன் சதவீதம் மிகக்குறைவு. இந்தப் படத்தின் பெரும் பிரச்சனையே எது மிகக் குறைவான சதவீதத்தில் உள்ளதோ, ஒரு விவாகரத்து வழக்கில் எது மிகக்குறைவான பங்காற்றுகிறதோ, அவற்றைப் பொதுமைப்படுத்தி இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சனை.
இதைச் சார்ந்த அவர்கள் ஆராய்ச்சிகளைச் செய்திருந்தால், இந்தக் கதையை மிக நன்றாகச் சொல்லி இருக்க முடியும். ஏன் பெண்ணியவாதிகளைத் திரும்பத் திரும்பச் சாடி இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. கைத்தட்டல் வாங்கவா? இல்லை என்றால் இதுபற்றிய புரிதல் இயக்குநருக்கு இல்லையா? இல்லை என்றால் அவருக்கு இதன் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டி இருந்ததா? பெண்ணியவாதிகளால் இப்படி எல்லாம் பிரச்னையென அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் படம் கொஞ்சம் ஆபத்தான படம். அது மட்டும் உண்மை, அதில் மாற்றுக் கருத்தே இல்லை. விவாகரத்து தப்பு, சரியென யாரும் சொல்லிவிட முடியாது. அது அவரவர் தேர்வு. அவரவருடைய சூழல் அது, அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
இந்தப் படத்தில் புத்திசாலித்தனமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒன்றை செய்திருக்கிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து முன்வைக்கும் நியாயங்களை மிகக் குறைவாக வைத்துக் கொண்டு, ஆண்கள் தரப்பு சொல்ல வேண்டியதை அதிகமாக வைத்திருக்கிறார்கள். அது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் இந்தப் படம் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட படம். சரியான ஆராய்ச்சி இல்லாமல் சொல்லப்பட்ட படம். இன்று Feminism பங்கு என்ன என்பதில் எந்தப் புரிதலும் அற்று சொன்ன படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாகச் சமூகத்தைச் சென்று சேரும் வெகுஜன ஊடகத்தில், முக்கியமான பிரச்சனைகளைப் பற்றிப் பேசும்போது, அதில் சரியான கருத்துகளை சொல்வதும், பொறுப்புணர்வுடன் இருப்பதும் அவசியம். இனியேனும் சினிமா கலைஞர்கள் இதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது.