இயக்குநர் சுதா கொங்கரா Pt web
சினிமா

விஜய் ரசிகரின் சமூக வலைதளப் பதிவு: ”இது ரசிகர்களின் ரவுடித்தனம்” - இயக்குநர் சுதா கொங்கரா!

பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், அவதூறு பரப்புவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா குற்றம் சாட்டியுள்ளார்.

PT WEB

பராசக்தி திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதாகவும், அவதூறு பரப்புவதாகவும் இயக்குநர் சுதா கொங்கரா குற்றம்சாட்டியுள்ளார்.

பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வருவதாக இருந்தது. அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பராசக்தி - ஜனநாயகன்

இந்த நிலையில் தான், விஜயின் கடைசிப் படம் வரும் வேளையில் வேண்டுமென்றே, ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் சிவகார்த்திக்கேயனின் பராசக்தி திரைப்படத்தை திமுக வெளியிட முடிவு செய்திருப்பதாகக் கூறி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து, பராசக்தி படத்தின் டிரைலர் வெளியீட்டின் போதும், ஜனநாயகன் பட டிரைலரின் பார்வையாளர்களை விட அதிகமாக பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, பராசக்தி திரைப்படத்திற்கு செயற்கையான முறையில் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்ததாக விஜய் ரசிகர்கள் சார்பில் குற்றம் சட்டப்பட்டது.

ஆனால், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவில்லை. அதேசமயம், இந்தி திணிப்புக்கு எதிராக 1960 களில் நடந்த போராட்டங்கள் குறித்து எடுக்கப்பட்ட பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த நிலையில் தான், பராசக்தி திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, ’தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், விஜய் ரசிகர் ஒருவரின் சமூக வலைதளப் பதிவை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

SK, Sudha Kongara

அதில், “தணிக்கை வாரியத்திடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயமல்ல, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னிப்புச் சான்றிதழ் வாங்குங்கள், அப்போதுதான் படம் ஓடும் என ஒருவர் பதிவிட்டுள்ளார். இது ஆரோக்கியமான சினிமா சூழல் அல்ல. ஒரு படத்திற்கு எதிராக பெயர் தெரியாத ஐடி-களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரியான, ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொடியூசரான தேவ் ராம்நாத்தும், இதே கருத்தை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், ”உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்கள், மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது, புக் மை ஷோ செயலி ரேட்டிங்கில் விளையாடுவது, இப்படி செய்வதெல்லாம் போட்டியல்ல. கடந்த ஆண்டு வெளியான ஒரு பெரிய படத்திற்கும் இதையே தான் செய்தீர்கள்.சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நமக்கு ஆரோக்கியமானது அல்ல. பராசக்தி திரைப்படம் மாணவர்களின் இயக்கத்தை பற்றியது, அதை கண்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்” என எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவும் தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களின் பதிவுகளை சுட்டிக்காட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.