sj surya web
சினிமா

”அந்த பாட்ட பார்த்துட்டு மிரண்டுட்டன்.. ரசிகர்களோட பணம் அதுக்கே சரியா போயிடும்” - எஸ் ஜே சூர்யா!

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் வரும் ஜரகண்டி பாடலை பார்த்து மிரண்டுவிட்டதாக எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

பிரமாண்ட இயக்குநர் என்று புகழ்பெற்ற ஷங்கரும், தெலுங்கு திரைப்பட உலகின் முக்கிய ஸ்டாராகிய ராம் சரணும் இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் கேம் சேஞ்சர். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலபேர் நடித்துள்ளனர்.

கேம் சேஞ்சர் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன், விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுத, எஸ் தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்‌ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலை ஒட்டி வரும் ஜனவரி 10-ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது.

ஜரகண்டி பாட்ட பார்த்துட்டு மிரண்டுட்டன்..

இன்னும் 3 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், படம் குறித்து பேசியிருக்கும் எஸ் ஜே சூர்யா படத்தின் செலவு 500கோடி என குறிப்பிட்டுள்ளார். அதிலும் படத்தில் வரும் ஜரகண்டி பாடலை பார்த்துவிட்டு மிரண்டு விட்டதாக கூறியிருக்கும் அவர், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அந்த பாடல் விருந்தாக இருக்கும் என கூறியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் எஸ் ஜே சூர்யா, “கேம் சேஞ்சர் படத்தை உருவாக்க சாதாரண அளவில் செலவாகவில்லை, கிட்டத்தட்ட 500 கோடிவரை செலவாகியுள்ளது. அதற்கான வட்டிஎல்லாம் சேர்த்தா எங்கயோ போகும், ஆனால் தயாரிப்பாளர் தில்ராஜ் சார் அதையெல்லாம் பொறுமையாக கையாண்டிருக்கிறார், அவருக்கு ஷங்கர் சார் என்றால் ரொம்ப பிடிக்கும்.

படத்தை பற்றி சொல்லவேண்டுமானால் பிரமாண்டமாக உள்ளது. அதிலும் ஜரகண்டி என்ற பாடலை பார்த்துவிட்டு மிரண்டுவிட்டேன், பாடல் குறித்த காட்சி வெளியாகிட்டதால லிரிக்கல் வீடியோவ படக்குழு வெளியிட்டிருக்காங்க. அந்த பாட்டோட முழு வெர்சன சமீபத்துல பார்த்தன், பிரபுதேவா சார் கோரியோகிராஃபி வேற, பாட்டு வேற மாதிரி இருக்கு.

ஹேண்ட்ஸம், பியூட்டிஃபுல் என்ற வார்த்தைகளுக்கு தகுந்தமாதிரி ராம்சரண், கியாரா அத்வானி இருவரும் அப்படி இருக்காங்க. படம் பார்க்க வர ரசிகர்களோட காசுக்கு அந்த ஒரு பாட்டே போதுமானதாக இருக்கும். படம் பார்த்துட்டு திரும்ப ஐமேக்ஸ்ல போய் அந்த பாட்ட பாருங்க அப்படி இருக்கும், அந்த பாட்டுக்கு பிறகு மொத்த படமே ரசிகர்களுக்கு போனஸா தான் இருக்கப்போகிறது” என்று பாடலையும் மேக்கிங்கையும் பாராட்டி பேசியுள்ளார்.