"ராம்சரண்-க்கு தேசிய விருது கிடைக்கும்" கேம் சேஞ்சர் படத்திற்கு முதல் ரிவ்யூ சொன்ன புஷ்பா டைரக்டர்!
இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஷங்கரும், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரணும் இணைந்து உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலபேர் நடித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன், விவேக் ஆகியோர் எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுத, எஸ் தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர்.
ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை ஒட்டி ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது.
கேம் சேஞ்சர் ஃபிளாஷ்பேக் காட்சிகள் என்னை நெகிழவைத்தது..
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு இறங்கியிருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டல்லாஸில் கேம் சேஞ்சர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் கலந்துகொண்டார்.
அப்போது படம் குறித்து பேசிய அவர், நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். 'கேம் சேஞ்சர்' படத்தை நான் சிரஞ்சீவி சாருடன் சேர்ந்து பார்த்தேன். அதனால் படத்திற்கு முதல் விமர்சனத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். முதல் பாதி, அருமை. இடைவேளை, பிளாக்பஸ்டர். என்னை நம்புங்கள். இரண்டாம் பாதியில், பிளாஷ்பேக் காட்சி என்னை நெகிழவைத்தது. ராம் சரண் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய நடிப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளது' என்று பேசினார்.
அந்த வீடியோவை ராம் சரண் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.