அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ்சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் கிராஃப்ட் வேறொரு இடத்திற்கு நகர்ந்துள்ளது. ’அமரன்’ படத்தின் மூலம் 300-கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய தமிழ் ஹீரோக்கள் பட்டியலில் ரஜினி, விஜய், கமலுடன் தன்னை இணைத்துகொண்டார்.
இந்நிலையில், அமரன் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. படம் முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. சர்க்கார், தர்பார் திரைப்படங்களின் சரிவிற்கு பிறகு ஏஆர் முருகதாஸ் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மதராஸி திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஹைதராபாத்தில் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆதரவளித்துவரும் தன்னுடைய தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்த முறை நான் 'மதராஸி' படத்திற்காக ஹைதராபாத்தில் இருக்கிறேன். இது ஒரு சிறந்த படம். மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகேஷ் பாபு போன்ற ஸ்டார்களுடன் பணியாற்றிய முருகதாஸ் சாருடன் இணைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன் . அனிருத் என் அன்பு நண்பர், அவரது இசை இந்தப் படத்தை மேலும் உயர்த்தியுள்ளது” என்று பேசினார்.
மேலும் தெலுங்கு ரசிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமா குறித்து பேசிய அவர், ரெமோ, டாக்டர், டான், மாவீரன், அமரன் போன்ற படங்களுக்கு இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல தற்போது 'மதராஸி' படத்திற்கும் அதே அன்பையும் வரவேற்பையும் நீங்கள் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என பேசினார்.
தெலுங்கு சினிமாவில் நல்ல கண்டெண்ட் இருந்தால், அதற்கு செலவு செய்ய தெலுங்கு தயாரிப்பாளர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் அதிகளவில் ஆயிரம் கோடி வசூல் படங்கள் உள்ளன. இதை நான் எப்போதும் சொல்லவேண்டும் என்று நினைத்த ஒரு விசயம் என்று கூறினார்.