madhumitha
madhumitha pt
சினிமா

மதுபோதையில் காரை ஓட்டி காவலரை இடித்தாரா பிரபல சீரியல் நடிகை மதுமிதா? உண்மையில் நடந்தது என்ன?

யுவபுருஷ்

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை மதுமிதா(24). இவர் கடந்த 21ம் தேதி இரவு 8 மணியளவில் தனது நண்பரின் புதிய காரை சோழிங்கநல்லூரில் உள்ள பிரியத்தியங்கரா கோயிலில் பூஜை போடுவதற்காக அவருடன் சென்றுள்ளார். தொடர்ந்து, மீண்டும் வீடு திரும்பியபோது, காரை மதுமிதாவே ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது கோவில் தெருவில் இருந்து சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலைக்கு வெளியில் வந்து இடது பக்கம் திரும்பியுள்ளார். அங்கு மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.

இதனால் வாகனத்தை திருப்பி எதிர்திசையில் இயக்கி வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு இரண்டாம் நிலை காவலர் ரவிகுமார்(29) மீது மோதியதில், அவருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடிபட்ட காவலர் சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய சீரியல் நடிகை மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து ஆர்டிஓ சோதனைக்கு பின் காரை ஒப்படைத்துள்ளனர். அன்றையே தினமே 4 மணி நேர விசாரணைக்கு பின் காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காரை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காவலரிடம் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. வழக்கு விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திருமுருகனிடம் கேட்டபோது “விபத்தில் சிக்கிய கார் மதுமிதாவின் நண்பருடையது. புதிய கார் வாங்கி பூஜை போட வந்து விட்டு திரும்பி செல்லும் போது எதிர் திசையில் சென்று காவலர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். நடிகையிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளது. அவர் குடிபோதையில் எல்லாம் இல்லை” என்று விளக்கமளித்தார்.

இதன்மூலம், குடிபோதையில் கார் ஓட்டி சீரியல் நடிகை மதுமிதா விபத்து ஏற்படுத்தியதாக பரவிய தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.