”இருள் விலகும் இரவு வேண்டும்” - கொடைக்கானல் மலைகிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

இருக்க வீடு, உடுத்த உடை, உண்ண உணவு, குடிக்க நீர், இருளை விரட்டும் மின்சாரம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் துயரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
தீப்பந்தத்துடன் மலைகிராம மக்கள்
தீப்பந்தத்துடன் மலைகிராம மக்கள்pt desk

செய்தியாளர்: செல்வ. மகேஷ்ராஜா

ஒருபக்கம் தகதகவென பல வண்ணங்களில் மின்னும் அழகிய கொடைக்கானல் மலை நகரம்... மறுபக்கம் இருள் சூழ்ந்த இருளர் வசிக்கும் பகுதி. பதபதைக்கும் இரவின் இருளை விலக்கி வெளிச்சத்தை நோக்கி அச்சத்துடன் வாழும் ஆதி குடிகள். வானுயர்ந்த வண்ணமயமான பிரம்மாண்ட கட்டடங்கள் உள்ள நகர் பகுதி. வானமே கூரையாய் மொட்டை பாறையில், ஓலை, சேலை, தார்பாய் சுற்றிய வன வீடுகள். இதுதான், கொடைக்கானல் மலைப்பகுதியின் மாறுபட்ட சூழல். 77 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மின்னொளியில் கொடைக்கானல் நகரம்
மின்னொளியில் கொடைக்கானல் நகரம்pt desk

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட, பழங்குடியின கிராமங்கள் உள்ளன. பழையர் என பொருள்படும், ”பளியர்” மற்றும் அவர்களின் இரத்த உறவான ”புலையர்” ஆகிய இரண்டு ஆதி குடிகள், உலகம் உருவாகிய நாள் முதல், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இவர்களின் ஒரே கோரிக்கை, ”இருள் விலகும் இரவு வேண்டும்” எனபதுதான்.

கண்கள் இருந்தும் கும்மிருட்டில் பார்வையற்றவர்களாக வாழும் மலைகிராம மக்கள்

குழந்தை குட்டிகளுடன் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒளியில்லாமல் ஒருநாள் இரவை கடத்துவதே கடினம். ஆனால், பல தலைமுறைகளாக ஒவ்வொரு நாளும் அடர்ந்த இருளில், தீப்பந்தங்கள் மற்றும் காடா விளக்குகள் ஒளியுடன் மலைப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் இடர்களுக்கு மத்தியில் இரவுகளை கடத்தி வருகின்றனர். மூங்கில் பள்ளம், வாழைகிரி, மல்லிகா நகர், பனிக்கரை, வாலாங்குளம், கடப்பாரை குழி, உள்ளிட்ட கிராமங்களுக்கு இன்றளவும் முழுமையான மின்சாரம் சென்றடையாததே இருளுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

வீடு மாதிரி ஆனால் வீடல்ல
வீடு மாதிரி ஆனால் வீடல்லpt desk

கண்கள் இருந்தும் கும்மிருட்டில் பார்வையற்றவர்களாக வாழும் மலைகிராம மக்கள், வீடின்றி வெயில், மழை, குளிர், காற்று, என அனைத்து தாங்கிக் கொண்டு வனத்தையும், வானத்தையும் மட்டும், நம்பி வாழ்க்கையை கடத்தி வருகிறார்கள்.; நிலவு ஒன்றே இரவில் இரவில், துணை என கூறும் இவர்கள், வன விலங்குகளிடம் இருந்து, தங்களை தற்காத்துக் கொள்ள தீப்பந்தங்கள் ஏந்துவது, குழந்தைகள் படிக்க காடா விளக்குகளை பயன்படுத்துவது தீமூட்டி இரவில் காவல் இருப்பது போன்ற வாழ்க்கை முறையை தங்களைத் தவிர, வேறு எவரும் இருந்து விட முடியாது என்று கூறுகின்றனர்.

”குடியிருக்க தரமான வீடுகளும், வீட்டில் ஒளியேற்ற மின்சாரம் கேட்கிறோம்”

மத்திய மாநில அரசின் வீடு கட்டும் திட்டங்கள் மூலம், ஒதுக்கும் சொற்பத் தொகை பற்றாமல், மலைப்பகுதிகளில் உள்ள, ஆதிவாசி கிராமங்கள் முழுவதும் தரமற்ற குகை வீடுகளே கட்டித்தரப் படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ”நாங்கள் பெரும் மாளிகை கேட்கவில்லை”, ”குடியிருக்க தரமான வீடுகளும், வீட்டில் ஒளியேற்ற மின்சாரம் கேட்கிறோம்” என வேதனையை கொட்டுகின்றனர். வனத் துறையின் முட்டுக்கட்டை இல்லாமல், வனப் பொருட்கள் சேகரிக்க அனுமதி, வன உரிமைச் சட்டத்தின் மூலம், சில ஏக்கர் விவசாய நிலம், வீட்டிற்குத் தேவையான மனையடி பட்டா, குடிநீர் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட, அடிப்படை உரிமைகளைக் கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தண்ணீர் சுமந்துவரும் மலைகிராம பெண்கள்
தண்ணீர் சுமந்துவரும் மலைகிராம பெண்கள்pt desk

மலைப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள நிலையில், வெறும் 100 நபர்களுக்கு கூட, நிலைத்து வாழ விவசாய நிலங்கள் கொடுக்கப்படவில்லை என்பது அவர்கள் வைக்கும் பெரும் குற்றச்சாட்டாகும். ஆதி குடிகளாக உள்ள, அவர்களின் வாழ்விடங்களை மலைப்பகுதியில் பண்ணை நிலம் வாங்கும், பணம் படைத்தவர்கள் நெருக்குவதாகவும் அரசு இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து, கண்காணிக்கவும், கோரிக்கை வைத்துள்ளனர். வெளியூர்களில் தங்கி படிக்கும் அடுத்த தலைமுறையினர், புதிய வாழ்விற்கு பழகி, சொந்த ஊர் திரும்பி வர விரும்பாமல் அவர்களை விட்டுப் பிரிவதாக, வேதனை தெரிவித்தனர்.

ஆதி தொழிலை செய்ய ஊக்கப்படுத்தி அறிய வனப் பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு உதவி செய்ய வேண்டும்

நல்ல வீடும், இரவில் வெளிச்சமும் இருந்தால், எங்களை பார்க்க நிச்சயம் எங்கள் பிள்ளைகள் இங்கு வருவார்கள் என்ற தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர். வெளியூர் செல்ல விரும்பாமல், வனத்திற்குள் இருக்க விரும்புபவர்களுக்கு, ஆடு மாடுகள் வளர்க்கவும், காட்டு நெல்லி, காட்டுத்தக்காளி, கானமிளகாய், கடுக்காய், தேன், கிழங்கு உள்ளிட்ட, ஐம்பதிற்கும் மேற்பட்ட வனப் பொருட்கள் சேகரிக்கவும் ஆதி தொழிலை செய்ய ஊக்கப்படுத்தி அறிய வனப் பொருட்களை சந்தைப்படுத்தவும் அரசு உதவி செய்ய வேண்டும். வனத்தை காக்கும் மக்களான அவர்கள் வாழும் இடத்திலேயே, நிலை நிறுத்தினால் மட்டுமே அவர்களின் வாழ்வு மேம்படும் என்பது நிதர்சனம்.

பருந்து பார்வையில் மலைகிராமம்
பருந்து பார்வையில் மலைகிராமம்pt desk

ஏற்கெனவே இருக்கும், திட்டங்களுக்கு மாற்றாக, ஆதி குடிகளுக்கென சிறப்பு வீடு கட்டும் திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் என ஒவ்வொன்றிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் செயல்படுத்துவதை, உறுதி செய்தால் மட்டுமே மலைவாழ் மக்களின் வாழ்வு மேம்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com