“லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது”-ஜெயலலிதா ஆட்சி குறித்து பிரதமர் மோடி அன்றும் இன்றும் பேசியதென்ன?!

எம்ஜிஆருக்கு பிறகு நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார்கள் என சொன்னால், ஜெயலலிதா என்று என்னால் சொல்லமுடியும் என பிரதமர் மோடி கூறி இருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு ஓசூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாpt web

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பல்லட்டத்தில் நடந்தது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு இன்று வந்த போது எம்.ஜி.ஆர் என் நினைவிற்கு வந்தார். நான் அவர் பிறந்த ஊரான இலங்கைக்கு சென்ற போது அவரது பிறந்த ஊரான கண்டிக்கு செல்லும் வாய்ப்பி கிடைத்தது. அங்கு மக்களிடத்தில் பேசினேன். இன்று அவர் பணியாற்றிய மண்ணுக்கு வந்துள்ளேன்.

எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வரவில்லை. அவர் திறமையின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு பின்னால் நல்லாட்சி கொடுத்தது ஜெயலலிதா

அதுமட்டுமல்ல, மிகப்பெரிய நல்லாட்சியை நடத்தியதன் மூலமாக எம்.ஜி.ஆர். தரமான கல்வியையும் நல்ல சுகாதாரத்தையும் தமிழக மக்களுக்கு கொடுத்துள்ளார். அதன் காரணமாக தமிழகத்தில் இளைஞர்களும் பெண்களும் அவரை மதித்துவந்தார்கள். அதனால் தான் ஏழை மக்கள் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என புகழ்கிறார்கள். எம்ஜிஆர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வரவில்லை. அவர் திறமையின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திமுகவால் எம்ஜிஆரை கேவலப்படுத்துவது போல ஆட்சி நடந்துகொண்டுள்ளது.

எம்ஜிஆருக்கு பிறகு யாராவது நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார்கள் என சொன்னால் அது ஜெயலலிதா என்று என்னால் சொல்ல முடியும். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்த பொதுநலனுக்காகவும் தமிழக மக்களது வளர்ச்சிக்காகவும் கொடுத்தார் என என்னால் சொல்லமுடியும். சில நாட்களுக்கு முன்புதான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ஆகவே, இன்று இந்த மண்ணில் இருந்து அவருக்கு மீண்டும் ஒருமுறை அஞ்சலி செலுத்துகிறேன்.

எம்ஜிஆருக்கு பிறகு யாராவது நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார்கள் என சொன்னால் அது ஜெயலலிதா என்று என்னால் சொல்ல முடியும்.

அதுமட்டுமல்ல ஜெயலலிதாவோடு பல்லாண்டுகாலம் பணியாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அதேபோல் தமிழக மக்களுடன் எப்படி தன்னை தொடர்புபடுத்திக்கொண்டார் என்பதை அத்தனை பேரும் அறிவோம். எம்.ஜி.ஆர் கொள்கைகளை கடைபிடித்து அதன்மூலம் மக்களின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக பணியாற்றினார். அதன்காரணமாகத்தின் இன்றும் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் நினைவு கூறுவதற்கு காரணமாக இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல ஜெயலலிதாவோடு பல்லாண்டுகாலம் பணியாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது

2016 ஆம் ஆண்டு பிரதமர் பேசியதென்ன?

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஓசூரில் பரப்புரை செய்த மோடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்து காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்.

பிரதமர் மோடி தமது பேச்சில், “இந்த முறை தமிழ்நாடு தேர்தல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஒவ்வொருமுறையும் என்ன நடக்குமென்றால், அம்மாவிடம் கோவித்துக்கொண்டால் ஐயாவிற்கு ஓட்டுபோடுவோம். ஐயாவிடம் கோவித்துக்கொண்டால் அம்மாவிற்கு ஓட்டுபோடுவோம். நம்மிடம் மாற்றுசக்தி எதுவும் இல்லை. ஒருமுறை கிணற்றில் விழுந்தால், ஒருமுறை ஏரியில் விழுவோம். தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக மூன்றாவது சக்தி வெளியில் வந்துள்ளது. அது பாஜக சக்தி.

அம்மாவிடம் கோவித்துக்கொண்டால் ஐயாவிற்கு ஓட்டுபோடுவோம். ஐயாவிடம் கோவித்துக்கொண்டால் அம்மாவிற்கு ஓட்டுபோடுவோம். நம்மிடம் மாற்றுசக்தி எதுவும் இல்லை

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள். எந்தவிதத்திலும் உங்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. நான் பார்த்தேன். சென்னையில் அந்த நேரத்தில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு வந்தது. அந்த பாதிப்பில் கூட பாஜக தொண்டர்கள் தான் மக்களுடன் உதவியாக இருந்தார்கள். ஒருகாலத்தில் இந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் எதாவது விஷயம் நடக்கும் என சொன்னால், மூன்று நான்கு மாதங்களுக்குப் பின்பே அப்பிரச்சனைகள் தெரியவரும். ஆனால் இன்றைக்கு சென்னையில் வெள்ளம் வருகிறது. நான் உங்களுக்காக ஓடோடி வந்து, உங்கள் உதவிக்காக வந்து நின்றேன்.

சென்னையில் அந்த நேரத்தில் மிகப்பெரிய வெள்ள பாதிப்பு வந்தது. அந்த பாதிப்பில் கூட பாஜக தொண்டர்கள் தான் மக்களுடன் உதவியாக இருந்தார்கள்.

ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இந்தியாவிற்கே பலம் கொடுக்கக்கூடிய மக்களாக இருந்துள்ளார்கள். ஆனால், இன்றைய தமிழ்நாட்டின் நிலை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் கீழே போய்க்கொண்டிருக்கிறோம்.

இப்போது நடக்கும் தமிழ்நாட்டு தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கும். எந்த எம்.எல்.ஏ ஜெயிப்பார் என்பதற்காக இந்த தேர்தல் இல்லை. ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவார்கள் என்ற ஒரு முக்கியமான விஷயத்தை வைத்து தான் தேர்தல் நடக்கிறது.

தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது

தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது. நீங்கள் இந்த தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாட்டு இளைஞர்களை வரும்காலத்தை முன்னேற்றத்தை நினைப்பீர்களானால் இம்முறை பாஜக உடன் இருக்க வேண்டும். இன்று நாடு லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக நின்றுகொண்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் லஞ்சத்தை அனுமதிக்க மாட்டோம். இன்று இருக்கும் அரசியல்வாதிகள் லஞ்ச லாவண்யத்தில் மூழ்கிபோயுள்ளார்கள்,. ஆனால் கொஞ்சம்கூட அதைப்பற்றி கவலைப்படுவதில்லை” என தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது

2016 ல் பிரதமர் மோடி பேசிய காணொளி...

முன்னதாக, 2014 மக்களவை தேர்தலில் மிகப்பெரிய அளவில் மோடியின் அலை இருந்த காலத்தில், மோடியா, லேடியா என்று சவால் விட்டு அந்த தேர்தலை எதிர்கொண்டார் ஜெயலலிதா. மொத்தமுள்ள 39ல் 37 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியையும் அந்த தேர்தலில் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com