இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இதற்கிடையே, நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இருவரும் இதுகுறித்து வெளிப்படையாகக் கருத்து சொல்லவில்லை.
இந்த நிலையில், புரமோஷன் பணிகளில் ’புஷ்பா 2’ படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், ”உங்களைத் திருமணம் செய்பவர் சினிமாத் துறையில் இருக்க வேண்டுமா அல்லது வேறு துறையைச் சேர்ந்தவரா. இதை நீங்கள் கொஞ்சம் தெளிவுப்படுத்தினால் அந்த பையன் யார் என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம்” என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அவர், ”அது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே” எனப் பதிலளித்தார். அவரது பதிலைக் கேட்டு மேடையில் இருந்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் அவர், “உங்களுக்கு என்ன பதில் வேண்டும் என்று எனக்குத் தெரியும்; அது எனக்கு நன்றாகவே தெரியும். அதை இப்போதே ஆராய வேண்டாம். தனிப்பட்ட முறையில் பிறகு சொல்கிறேன்" எனப் பதிலளித்தார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் டேட்டிங் பற்றிய வதந்திகள், கடந்த ஆண்டு ஜனவரி 2023இல் மாலத்தீவில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு, இருவரும் மதிய உணவு சாப்பிடும் புகைப்படங்கள்கூட இணையத்தில் வைரலாகின.
முன்னதாக விஜய் தேவரகொண்டா குறித்து பேட்டியொன்றில் கூறிய ராஷ்மிகா, ”நானும் விஜுவும் ஒன்றாகவே வளர்ந்தோம். அதனால் நான் இப்போது என் வாழ்க்கையில் எதைச் செய்தாலும், அதில் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. நான் எந்த விஷயத்திலும் அவருடைய ஆலோசனையைப் பெறுகிறேன். எனக்கு அவருடைய கருத்து தேவை” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல் விஜயதேவரகொண்டாவும், தான் சிங்கிள் இல்லை என்றும், ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆனால், அவர் ராஷ்மிகா பெயரைச் சொல்லவில்லை.