ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி எக்ஸ் தளம்
சினிமா

கன்னட தெய்வம் அவமதிப்பு.. ’காந்தாரா’ பட மிமிக்ரி சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்!

கோவா திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ’காந்தாரா’ பட மிமிக்ரி கிண்டலடிக்கும் வகையில் இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அவர் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Prakash J

கோவா திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ’காந்தாரா’ பட மிமிக்ரி கிண்டலடிக்கும் வகையில் இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அவர் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் `காந்தாரா சேப்டர் 1'. கன்னடத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இந்த நிலையில், அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் நிறைவு நாளில் மேடையில் ரன்வீர் சிங் செய்த செயலின் வீடியோ இணையத்தில் கண்டனத்தைக் குவித்தது.

அதாவது, ‘காந்தாரா’படத்தில் ரிஷப் செட்டி மற்றும் சாமியாடிகள் எழுப்பும் 'ஓ' என்ற ஒலியை ஆக்ரோஷமான முகபாவத்துடன் எழுப்பும் காட்சிகள், சிலிர்க்க வைக்கக்கூடிய வகையில் இருக்கும். இதை, மேடையில் முயன்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் செய்தார். அப்போது ரிஷப் செட்டியும் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டல் செய்வதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் ரன்வீர் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

ரன்வீர் சிங் இன்ஸ்டா

அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”படத்தில் ரிஷப்பின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நடிகருக்கு, அந்த குறிப்பிட்ட காட்சியை அவர் செய்த விதத்தில் நடிக்க எவ்வளவு தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும், அதற்காக அவர் எனது மிகுந்த பாராட்டுகளைப் பெறுகிறார். நமது நாட்டின் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையையும் நான் எப்போதும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்தியிருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.