பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் அலங்கு படத்தின் ட்ரெய்லரை, நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டிருக்கிறார்.
சங்கமித்ராவின் தாத்தாவும் பாமக நிறுவருமான மருத்துவர் ராமதாஸ் ஒருகாலத்தில் திரைத்துறையை கடுமையாக விமர்சித்து வந்தவர். குறிப்பாக, ரஜினிகாந்தின் பாபா படத்துக்கு எதிராக பாமக மிகப்பெரிய அளவில் போர்க்கொடி உயர்த்தியது வரலாறு. ஆனால், இன்று அவரின் பேத்தி, அதே ரஜினிகாந்த் மூலம் தன் முதல் பட ட்ரெயிலரை வெளியிட்டடுள்ளார்.
இது, ‘காலம் எவ்வளவு வேகமா சுழலுது பார்த்தீங்களா?’ என்கிற பிரபலமான மீம்ஸைப்போல சுவாரஸ்யமான விஷயமாக மாறியிருக்கிறது.
இந்த நேரத்தில் பாபா காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள், ஒரு குட்டி ரீவைண்ட் ஸ்டோரியாக...
2002 காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா திரைப்படம் வெளியானது. அதற்கு முன்பாக படத்தின் ஸ்டில்கள் வெளியாகின. அதில், ரஜினி சிகரெட் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “பாபா படத்தை யாரும் பார்க்கக் கூடாது” எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் கட்அவுட், பேனர்கள் கிழித்து, உடைத்து சின்னாபின்னப்படுத்தப்பட்டன.
படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது. வட மாவட்டத்தில் பல இடங்களில் படத்தை முடக்கும் வேலையில் பாமகவினர் இறங்கினர் “வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும்” என பெங்களூரில் நடந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அப்பு திரைப்பட வெற்றி விழாவில் ரஜினி பேசியதே இதற்குக் காரணம் என சொல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்திலும் ராமதாஸ் ரஜினியைக் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, 2004 தேர்தலில் பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் தோற்கடிக்க ரஜினி தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஆறு இடங்களிலும் பாமக வெற்றிபெற்றது.
காலப்போக்கில் அந்தப் பிரச்னை சரியானது. 2019-ம் ஆண்டு, கோவாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார் மருத்துவர் ராமதாஸ். கடந்த காலத்தில் திரைத்துறையை கடுமையாக விமர்சித்த மருத்துவர் ராமதாஸ், கொரோனா காலகட்டத்தில் பல திரைப்படங்களைப் பார்த்து அதுகுறித்த விமர்சனங்களை தன் சமூக வலைதளங்களைப் பக்கங்களில் ராமதாஸ் எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரின் பேத்தி சங்கமித்ரா சௌமியா அன்புமணி அலங்கு என்கிற திரைப்படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, நேரடியாக திரைத்துறையில் களமிறங்கியிருக்கிறார். உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' போன்ற திரைப்படங்களின் இயக்குநரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு'. உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து சமூக அக்கறையோடு இந்தப் படம் உருவாகியிருக்கிறது என்கிறார்கள்.
அந்தப் படத்தின் ட்ரெயிலரை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டிருக்கிறார். சங்கமித்ரா ரஜினியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு விழாவில், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுடன் சங்கமித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட, சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரின் மூன்று மகள்கள் பிரசாரம் செய்தனர். அவர்களில், சங்கமித்ராவின் பிரசாரம் வெகுவாகக் கவனிக்கபப்ட்டது. அப்போதும் சமூக வலைத்தள ட்ரெண்டிங்கில் இருந்தார் சங்கமித்ரா என்பது குறிப்பிடத்தக்கது