பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷெபாலி ஜெரிவாலா கடந்த ஜூன் 27ஆம் தேதி இரவு உயிரிழந்தார். 42 வயதான அவரது மரணம் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வந்தாலே அதுகுறித்து முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஷெபாலி ஜெரிவாலா சத்யநாராயண பூஜையின் ஒரு பகுதியாக ஒருநாள் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்துள்ளார்.
தவிர, இளமைத் தோற்றத்திற்காக தாம் தொடர்ந்து எடுக்கும் வழக்கமான மருந்துகளை உட்கொண்டுள்ளார். மேலும் குளுதாதயோன் ஊசியையும் செலுத்தியுள்ளார். இளமையான சருமத்தைப் பராமரிக்கும் நோக்கில் அவர் மல்டிவைட்டமின்கள் மற்றும் கொலாஜன் சப்ளிமெண்ட்களையும் எடுத்துக் கொண்டுள்ளார். சுய மருந்து மற்றும் உணவு விஷம் காரணமாக ஷெபாலி ஜெரிவாலாவின் மரணம் மாரடைப்பு மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது.
காவல்துறை வட்டாரங்களின்படி, நடிகை உண்ணாவிரதம் இருந்தபோது பழைய வறுத்த அரிசியை உட்கொண்டார் எனவும், சமீபத்தில் அவர் மருத்துவ மேற்பார்வை இல்லாமல் வயதான எதிர்ப்பு ஊசிகளையும் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேற்பார்வை செய்யப்படாத இந்தச் சிகிச்சைகள், குறிப்பாக உண்ணாவிரதம் இருக்கும்போது, ஆபத்தானவை மற்றும் இதய செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஷெபாலி கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக இளமையை தக்கவைப்பதற்கான மருந்துகளை தவறாமல் உட்கொண்டதாக வந்ததாகவும், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, மார்ச் மாதம்தான் அவர் கடைசியாக மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.