பிக் பாஸ் பிரபலம் திடீர் மரணம்.. காரணத்தை அலசும் மும்பை போலீஸ்! நள்ளிரவில் நடந்தது என்ன?
பிக்பாஸ் பிரபலம் Shefali Jariwala-ன் மரணத்தைத் தொடர்ந்து, இது இயற்கை மரணமா அல்லது உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகையின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு பணிபுரியும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான Shefali Jariwala வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். முதற்கட்டமாக அவரது மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து பிரபலமாகத் தொடங்கிய Shefali Jariwala, இந்தி பிக் பாஸ் சீசன் 13ல் பங்கேற்ற பிறகு பலராகும் கவனிக்கப்பட்டார். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை இரவில் வீட்டில் இருந்தபோது அவர் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனை கொண்டுசென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து Shefali Jariwala-ன் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. Shefali Jariwala-ன் மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என்று முதற்கட்டமாக தெரிவிக்கப்படும் நிலையில், சரியான காரணம் தெரியவரவில்லை. இந்த நிலையில்தான், Shefali Jariwala மரணத்தில் என்ன நடந்தது என்று மும்பை போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Shefali Jariwala-ன் வீட்டிற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் சோதனையையும் மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், Shefali உயிரிழந்ததாக கூறப்படும் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் என்ன நடந்தது? யார் பணியில் இருந்தது என்று பணியாட்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மும்பை போலீஸார் பேசுகையில், Shefali-ன் மரணம் குறித்து நள்ளிரவு 1 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மரணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டாலும், மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. இதனால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மூச்சுப்பேச்சின்றி கிடந்த Shefaliஐ அவரது கணவர் Parag Tyagiதான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
42 வயதாகும் Shefali-ன் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், வழக்கமான மரண விவகாரத்தை போல இல்லாமல், கூடுதல் கவனத்தோடு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரம், கடந்த 5 வருடங்களாக தன்னை இளமையாக வைத்துக்கொள்ள Shefali சிகிச்சை பெற்றதாகவும் நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்த பிறகே மரணத்திற்காக முழு காரணம் தெரியவரும் என்றாலும், இயற்கை மரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.