பராசக்தி தலைப்பு விவகாரம் புதிய தலைமுறை
சினிமா

முடிவுக்கு வந்த சிக்கல்? பராசக்தி ஹீரோவாகிறார் சிவகார்த்திகேயன்!

விஜய் ஆண்டனி தரப்பும் சிவகார்த்திகேயன் தரப்பும் சமாதானமானது உறுதியாகியுள்ளது. இதனால் பராசக்தி ஹீரோவாகிறார் சிவகார்த்திகேயன்

ஜெ.நிவேதா

விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கி வரும் படத்தின் தலைப்பு ‘சக்தித் திருமகன்’ என நேற்று (ஜனவரி 30) காலை அறிவிக்கப்பட்டது. தமிழில் விஜய் ஆண்டனி படத்திற்கு ‘சக்தித் திருமகன்’ என தலைப்பு இருந்தாலும், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டிருந்தது. விஜய் ஆண்டனிக்கு இப்படம் 25வது படமாகும்.

சக்தித் திருமகன் - பராசக்தி

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, சிவகார்த்திகேயனின் 25வது படத்துக்கும், ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

யார் பராசக்தி ஹீரோ என்பதில் ஏற்பட்ட குழப்பம்!

இரு படங்களும் தமிழில் மட்டும் வெளியாகும்பட்சத்தில் பெரிய சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், இரண்டு படங்களும் பல மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் தலைப்பு விஷயத்தில் ஒரு சின்ன உரசல் ஏற்பட்டது.

குறிப்பாக சிவகார்த்திகேயனின் 25-வது படத்துக்கு பராசக்தி தலைப்பா, விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கு பராசக்தி தலைப்பா என்ற விவாதம் எழுந்தது.

அடுத்தடுத்து வெளியான ஆதாரங்கள்!

இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி டைட்டில் டீசர் வெளியான சில மணி நேரத்துக்குப்பின், விஜய் ஆண்டனி தரப்பு, 2024-லேயே தாங்கள் அந்த டைட்டிலை பெற்றுவிட்டதாக ஆதாரத்தை வெளியிட்டது. அதில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி விஜய் ஆண்டனி தரப்பு பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்திருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

விஜய் ஆண்டனி ஆதாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பராசக்தி தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதியை, சிவாஜி நடிப்பில் கலைஞர் எழுத்தில் உருவான பராசக்தி படத்தை தயாரித்த ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து தாங்களே பெற்றிருப்பதாக கூறி அதன் ஆதாரத்தை வெளியிட்டது, சிவகார்த்திகேயன் தரப்பில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இதனால், இருதரப்பில் யாருக்கு பராசக்தி தலைப்பு என்ற சலசலப்பு ஏற்பட்டது.

விஜய் ஆண்டனி தரப்பு வெளியிட்ட அறிக்கை Vs சிவகார்த்திகேயன் தரப்பு வெளியிட்ட அறிக்கை

முடிவுக்கு வந்த சலசலப்பு

இந்நிலையில் இந்த சலசலப்புகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில், இன்றைய தினம் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் சந்தித்துள்ளனர். அப்போது விஜய் ஆண்டணியும் உடனிருந்துள்ளார். சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா படத்தை தயாரிக்கும் டான் நிறுவனம், அப்புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஒன்றுபட்டு இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளது. அதை விஜய் ஆண்டனியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதையடுத்து, இரு தரப்பும் சமாதானம் ஆனதாக சொல்லப்பட்டுகிறது.

நன்றி சொன்ன எஸ்.கே. பட தயாரிப்பாளர்!

இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்திலேயே, சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் தங்களுக்கு பராசக்தி தலைப்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில் அவர், பராசக்தி தலைப்பை தங்களுக்கு வழங்கியதற்காக ஏவிஎம் நிறுவனம், கலைஞர் குடும்பம் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி குடும்பம் என மூன்று தரப்பிற்கும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நன்றி தெரிவித்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கை

இதனால் இருதரப்புக்கும் சமாதானமானது உறுதியாகியுள்ளது. இருப்பினும் விஜய் ஆண்டனி படத்திற்கு பிற மொழிகளில் என்ன பெயர் மாற்றப்படும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. எது எப்படியாகினும்,

பராசக்தி ஹீரோவாகிறார் சிவகார்த்திகேயன்!