“Do not touch Students” “பெரும் சேனை ஒன்று தேவை” - சிவா, ரவி மாஸ்.. தீயாய் வெளியான ‘பராசக்தி’ டீசர்!
300 கோடிக்கும் மேல் வசூல்செய்த ’அமரன்’ போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் 25ஆவது திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படத்தின் புதிய டீசர் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஏற்கனவே வெளியான தகவலின்படி, படத்திற்கு ’பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
படம் 1960களின் காலத்தில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதைப் போன்றே தெரிகிறது. ’தீ பரவட்டும்’ என்ற வாசகத்துடன் நேற்று வெளியான போஸ்டரும் அதற்கு ஓர் உதாரணம். ஏனெனில், ’தீ பரவட்டும்’ என்பது மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தின் தலைப்பு. அன்றைய காலத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கிய வாசகம் அது.
டீசரைப் பொறுத்தவரை, துவக்கத்தில் சிவகார்த்திகேயன் கதவைத் திறந்துகொண்டு ஓர் அறைக்குள் நுழைகிறார். அந்த அறையின் சுவரில் ’Students do not touch’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது, மாணவர்கள் சுவரைத் தொடக்கூடாது என்று.
பின்னணியில், ‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா..’ என்ற பாடல் ஒலிக்க பச்சையப்பன் கல்லூரியின் முகப்பு காண்பிக்கப்படுகிறது. மேலும், ’once upon a time in madras’ என்ற வாசகமும் இடம்பெறுகிறது.
கல்லூரி அறைகளில் இருந்து மாணவர்கள் ஹாக்கி ஸ்டிக் உடன் வெளியே ஓடி வருகிறார்கள். அதர்வா ஹாக்கி ஸ்டிக் உடன் ஓடி வர, இன்னொரு காட்சியில் ரவி மோகன் துப்பாக்கியால் சிவகார்த்திகேயன் உருவத்தை துப்பாக்கியால் சுடுகிறார்.
கல்லூரியின் அறைகளுக்கு நடுவே உள்ள பகுதியில் மாணவர்கள் திரண்டிருக்க, சிவகார்த்திகேயன் மாடியில் நின்றவாறு, ’சேனை ஒன்று தேவை, பெரும் சேனை ஒன்று தேவை’ என்று உரக்கச் சொல்கிறார். மாணவர்கள் அதைப் பிரதிபலித்து முழக்கமிடுகிறார்கள்.
டீசரின் முடிவில், ’Students do not touch’ என்ற வாசகம் இருந்த சுவரில், ’Students’ என்பது மேலே அடிக்கப்பட்டு ’do not touch Students’ மாற்றி எழுதப்படுகிறது. மாணவர்கள் போராட்டம் பற்றிய கதைதான் என்பதை இந்த டீசர் அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே, ’பராசக்தி’ என்ற தலைப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
படத்தின் போஸ்டரின் ரவி மோகன் பெயர் முதலிலும், பின்னர் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா பெயர்களும் தலைப்புக்கு மேலே இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் ரவி மோகன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்றே தெரிகிறது. தெலுங்கிலும் ’பராசக்தி’ என்ற பெயரிலேயே படம் வெளியாகிறது.
’பராசக்தி’ என்ற பெயரில் படம் வெளியாவதும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறித்த கதை என்பதாலும் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் ஏற்கெனவே மறைந்த நடிகர் நாகேஷ் நடித்த ’எதிர்நீச்சல்’, கமல் நடித்த ’காக்கிச் சட்டை’, ரஜினி நடித்த ’வேலைக்காரன்’ மற்றும் ’மாவீரன்’, கார்த்திக் நடித்த ’அமரன்’ ஆகிய பெயர்களில் மீண்டும் நடித்திருந்த நிலையில் தற்போது மறைந்த நடிகர் சிவாஜி நடிப்பில் பட்டையை கிளப்பிய ’பராசக்தி’ படத்தின் பெயரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.