“தமிழ் தீ பரவட்டும்..” தலைப்பு கொடுத்த ஏவிஎம், கலைஞர், சிவாஜி தரப்பிற்கு ‘பராசக்தி’ குழு நன்றி!
‘அமரன்’ போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் 25ஆவது திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
படம் 1960களின் காலத்தில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகி அதனை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டிருப்பதும் அசுரபலமாக மாறியுள்ளது. செம்ம மாஸ்ஸாக வெளியான அறிவிப்பு டீசரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு திரைக்கதைக்கான மூன்று விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தி திணிப்பு எதிர்ப்பை உறுதிசெய்யும் விசயங்கள்..
குறிப்பாக ‘தீ பரவட்டும்’ - என்ற வாசகத்துடன் நேற்று வெளியான போஸ்டரும் இந்தி திணிப்பு எதிர்ப்பிற்கான ஓர் உதாரணம். ஏனெனில், ’தீ பரவட்டும்’ என்பது மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தின் தலைப்பு. அன்றைய காலத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கிய வாசகம் அது.
போலவே, ’அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ - அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா.. என்ற பாடல் ஒலிக்க பச்சையப்பன் கல்லூரியின் முகப்பு காண்பிக்கப்படுகிறது.
மேலும் மெட்ராஸ் - ’once upon a time in madras’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
‘பராசக்தி’ தலைப்புக்காக நன்றி சொன்ன தயாரிப்பாளர்..
சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கான தலைப்பு ‘பராசக்தி’ என உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவுக்கு டைட்டிலுக்கான உரிமையை வைத்திருந்த ஏவிஎம் நிறுவனம் வாழ்த்தை தெரிவித்திருந்தது.
அந்த வாழ்த்தில், "73 ஆண்டுகளைத் தாண்டியும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சரித்திரத் திரைப்படம் 'பராசக்தி'. தமிழ் சினிமாவில் சமூகநீதியை உரக்கப்பேசியத் திரைப்படம். அந்த சரித்திரத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பராசக்தி' திரைப்படமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வருங்கால சந்ததியை ஊக்கப்படுத்தும் திரைப்படமாக இது இருக்க வேண்டும். இயக்குநர் சுதாகொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி மணிமகுடத்தில் மற்றொரு வெற்றி இறகைச் சூட்டி அழகுபடுத்த ஏவிஎம் குடும்பம் வாழ்த்துகிறது" என்று தெரிவித்திருந்தது.
நன்றி சொன்ன தயாரிப்பாளர்!
இந்நிலையில் பராசக்தி டைட்டிலை வழங்க உதவிய ஏவிஎம் குடும்பம், கலைஞர் குடும்பம் மற்றும் சிவாஜி குடும்பம் என மூன்று தரப்பிற்கும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த அவருடைய பதிவில், “நூற்றாண்டு கடந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனித்துவம் மிக்கதும், இன்றளவும் பேசுபொருளாக நீடிப்பதுமான தலைப்பை எங்களுக்கு வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ள ஏ.வி.எம் நிறுவனத்தாருக்கும், திரு.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தலைப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள பெருந்தன்மையோடும், மகிழ்ச்சியோடும் அனுமதித்த பெரும் மதிப்பிற்குரிய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் குடும்பத்தினருக்கும், நடிகர் திலகம் செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தினருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
நெடும் புகழ் மிக்க இத்தலைப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள துணை நிற்கும் அனைவரின் நம்பிக்கைக்கும் வலுசேர்க்கும் வகையில் எங்கள் படைப்பு நிச்சயம் அமைந்திடும் என உறுதியளிக்கிறோம்” என நன்றி தெரிவித்துள்ளார்.
1952-ம் ஆண்டு வெளிவந்த ’பராசக்தி’ திரைப்படமானது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திரைக்கதையிலும், வசனத்திலும் உருவாக்கப்பட்டு சிவாஜி நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற வசனமானது கலைஞரின் சிறந்த வசனங்களில் ஒன்றாக இன்றளவும் பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.