பணப் பிரச்னையைச் சரிசெய்ய குறுக்கு வழியை தேர்வு செய்யும் இருவரின் கதை!
மகாதேவ் (விஜய் சேதுபதி) இறந்துபோன தன் தந்தையின் அரசு வேலையை பெறும் முயற்சி ஒருபுறம், உடல்நலம் சரியில்லாத தாயைக் கவனிப்பது மறுபுறம் என வாழ்க்கையை ஓட்டுகிறார். வேலையைப் பெற லஞ்சம் தர வேண்டும், எதிர்வீட்டு காதலியைக் கைபிடிக்கவும் பணம் வேண்டும் என்ற சூழ்நிலை. மற்றொரு பக்கம், பெரும் பணக்காரரான மோகன் போஸ்மேனின் (அரவிந்த்சாமி) சொத்துகள் திடீரென அரசியல் சூழ்ச்சி வேலைகளால் பறிபோவதோடு, கனவு ப்ராஜெக்டும் எரிந்து சாம்பலாகிறது. இவருக்கு கடன் கொடுத்த முதலீட்டாளர்கள் இவருக்கு நெருக்கடி தர, கடனில் சிக்கித் தவிக்கிறார். இந்த இருவரும் தங்களின் பணப் பிரச்னையை தீர்க்க குறுக்குவழியை திட்டமிடுகிறார்கள். அது என்ன திட்டம்? அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா? இதனூடாக அவர்களுக்குள் ஏற்படும் மாற்றம் என்ன என்பதெல்லாம்தான் `காந்தி டாக்ஸ்'.
மௌனப் படத்தில் ஒரு நீதிக்கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் கிஷோர் பாண்டுரங் பெலேகர். அதில் சில இடங்களில் காமெடிகளும் ரசிக்க வைக்கிறது.
வறுமை, பசி, பாசம், அவமானம், காதல், பேராசை எனப் பலவகை உணர்ச்சிகளை நடிப்பின் மூலமாக அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி. அதிதி ராவிடம் ஏமாற்றத்துடன் கைகொடுக்கும் இடம், அரிவாள் காட்டி சைக்கிள் பிடுங்கும் இடம், சீட்டாட்டத்தில் நாற்காலிக்குப் பின் நின்று நடனம் ஆடுவது என பல இடங்களில் அசத்துகிறார். ஒரு செல்வந்தரின் பகட்டை உடல்மொழிகளின் மூலம் நடிப்பை இயல்பாக கொண்டு வருகிறார் அரவிந்த் சுவாமி. பெரிய இழப்புக்குப் பின் உடைந்து அழும் காட்சிகளிலும் மனதை கணக்க வைக்கிறார். திருடராக வரும் சித்தார்த் ஜாதவ் காமெடி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதிதி ராவ் நாயகியாக இருந்தாலும், காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நேர்மையை நோக்கி நாயகனை நகர்த்தும் இடம் மட்டும் கவனிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத் குறுகிய குடியிருப்புகளுக்கு மத்தியில் நடக்கும் வாழ்க்கை, இரவு நேர சாலைகள், நகரத்தின் பரபரப்பு போன்றவற்றை இயல்பாக பதிவு செய்திருக்கிறார். சில காட்சிகளை, அடுத்து வரும் காட்சியோடு தொடர்புபடுத்தும் படத்தொகுப்பாளர் அஷிஷ் ஐடியாக்கள் சிறப்பு. வசனமே இல்லாத படத்தை தன் பின்னணி இசையால் உயிர்க்க செய்திருக்கிறார். சில இடங்களில் மட்டும் ஓவர் டோஸ் ஆக போகிறது ஸ்கோரிங். ஆனாலும் ஸாரா ஸாரா (தமிழில் 'ஏதோ ஏதோ') பாடலும், அது படமாக்கப்பட்ட விதமும் அத்தனை அழகு. மற்ற பாடல்கள் ஸ்கிப் மோடில் இருக்கிறது.
தீப்பற்றி எரியும் கட்டடம், எலி, நொறுங்கிய ஜன்னல் கண்ணாடி எனச் சொற்ப இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டாலும், அவை அத்தனையும் துருத்திக் கொண்டு தெரிவது உறுத்தல்.
பணம்தான் இந்த உலகின் பொதுவான பாஷை, அது பேசும் இடத்தில் மனிதர்கள் பேச்சுக்கு மரியாதையை இல்லை என கதை சொல்ல வரும் நியதி புரிகிறது. ஆனால், அதைச் சொல்லும் படத்தில், உரையாடல் தேவை இல்லை என்ற சூழலும் இயல்பாக இருந்திருக்கலாம். வலிந்து திணித்து இதனை ஒரு மௌனப்படமாக மாற்றியது அவ்வளவு பொருத்தமாக இல்லை. சைகைகளில் செய்திருக்கும் ஓரிரு காமெடிகள் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும், போகப்போகச் சோதிக்கிறது. மேலும் மெதுவாக துவங்கும் கதை, எதை நோக்கிப் போகிறது என்பதைச் சொல்லவே முதல் பாதி முழுக்க எடுத்துக் கொள்கிறது. ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் என இரண்டாம் பாதியில் ஒரு சுவாரஸ்யம் இருந்தும்கூட, அதை வைத்தும் எந்த ஆட்டமும் ஆடாமல், தேமே என கதையை நகர்த்துகிறார். எந்த இடத்திலும் கதை நகராமல் சொன்னதையே சொல்லிச்சொல்லி பெரிய அயர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.
மொத்தத்தில் வித்தியாசமான ஒரு மௌனப்படம், அதில் சுவாரஸ்யமும் சேர்ந்திருந்தால் பேசப்பட்டிருக்கும் இந்த `காந்தி டாக்ஸ்'.