கொரோனா ஊரடங்கும்.. ஒரு பெண்ணின் சிக்கலும்! | Lockdown Review | Anupama Parameswaran
கொரோனா ஊரடங்கும்... ஒரு பெண்ணின் சிக்கலும்! (1 / 5)
கொரோனா ஊரடங்கில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவாலே `லாக்டவுன்'.
அனிதா (அனுபமா பரமேஸ்வரன்) வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஆனால், அவருக்குக் கிடைக்கும் பணிகள் எல்லாம் இரவுநேர வாய்ப்பாக மட்டுமே அமைய, அதை மறுக்கச் சொல்கிறார்கள் அவரது தாய், தந்தை (நிரோஷா, சார்லி). தோழி சௌமியா (ப்ரியா கோதை வெங்கட்) மட்டுமே அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தச் சூழலில் வேலை விஷயமாக ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளும் அனிதா, நண்பர்கள் வற்புறுத்த முதன்முறையாக மது அருந்துகிறார்.
போதை அதிகமாகி இரவு அங்கு தங்கி மறுநாள் வீடு செல்கிறார். சில தினங்கள் கழித்து அவர் வாழ்வில் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதேசமயம், கொரோனா பாதிப்பால் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. அனிதாவின் பிரச்னை தீர வேண்டும் என்றால், அவர் வெளியே சென்றுதான் ஆக வேண்டும். இந்தச் சூழலில் அனிதா என்ன செய்கிறார்? என்ன பிரச்னை? எப்படி இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வருகிறார் என்பதெல்லாம்தான் இப்படத்தின் மீதிக்கதை.
நமக்கு ஒரு பிரச்னை வந்தது என்றால், அதனை பெற்றோரிடம் சொல்லி, அவர்களின் துணையோடு வெளியே வருவதன் அவசியத்தைச் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். ஜீவா. ஆனால், அதனைச் சொன்ன விதம்தான் ஆடியன்ஸைச் சோதிக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன், பிரச்னையில் சிக்கித் தவிப்பது, பெற்றோரிடம் கடுமையாக நடந்துகொள்வது என படம் முழுக்க சீரியஸ் முகம் காட்டுகிறார். படத்தை ஓரளவு காப்பாற்றுவது இவரது அழுத்தமான நடிப்புதான். அவரது தோழியாக வரும் ப்ரியா கோதை வெங்கட் நடிப்பும் சிறப்பு. பெற்றோர்களாக வரும் சார்லி, நிரோஷா இயல்பாக நடிக்க நினைத்து டெம்ப்ளேட் ஓவர் ஆக்டிங்கைக் கொடுக்கிறார்கள். கெஸ்ட் ரோலில் லிவிங்ஸ்டன் வந்து போகிறார். ஹீரோயின் பின்னால் சுத்தும் ஸ்டாக்கர் ரோலில் ராஜ்குமார், முடிந்த அளவு நன்றாக நடிக்க முயல்கிறார்.
சக்திவேலின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை எங்கும் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ரகுநந்தன், சித்தார்த் விபின் என இருவர் இசை என்றாலும் பாடல்களோ, பின்னணி இசையோ கவரவில்லை. பல எமோஷனல் காட்சிகளுக்கு சீரியல் தன்மையைத்தான் பின்னணி இசை கொடுக்கிறது.அனிதாவுக்கு எதனால் வேலை அவசியம் என்ற எந்த காரணமும் படத்தில் இல்லை. எனவே, அவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்களுக்குத் துளியும் ஏற்படவில்லை. வீட்டில் சொன்னால் மிகச் சுலபமாக தீரக்கூடிய பிரச்னையை மேலும் சிக்கல் ஆக்க வேண்டும் என லிவிங்ஸ்டன் பாத்திரத்தை வைத்து ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அதுவும் சுத்தமாக லாஜிக் இல்லாமல் இருக்கிறது. அனிதா, தன் வேலை நடக்க என்ன வேண்டுமானாலும் செய்வார் என்ற நிலைக்கு கதை நகரும் போது, அந்தப் பாத்திரத்தின் மேல் நமக்குச் சுத்தமாக எமோஷன் விட்டுப்போகிறது.
ஒரு படமாக, கதை சொல்லாக, உருவாக்கமாக என பல குறைகள் படத்தில் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி இந்தப் படம் சொல்ல நினைக்கும் மறைமுக கருத்து பெரிய அபாயமாக இருக்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்னால் வைத்துவிட்டு, அதன் பின்னால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது, சென்றால் பல விபரீதங்கள் நடக்கும் என்ற விஷ கருத்து சொல்லப்படுகிறது. எதனால் இந்த மாதிரி தொனியில் ஒரு படம் என்பது சுத்தமாக புரியவில்லை.
மொத்தத்தில் தவறான ஒரு கருத்தை, மிகச் சுமாரான படமாக முன்வைக்கிறது `லாக்டவுன்'.

