ஓர் இரவை கடக்க முயலும் திருமண வீட்டினரின் பதைபதைப்பை கூறுவதே `நீளிரா'
1988ல் இலங்கையின் வடக்கில் ஒரு வீடு திருமணத்திற்கு தயாராகிறது. மணப்பெண்ணின் தாத்தா அத்திருமணத்திற்காக இந்திய இராணுவத்திடமும், இலங்கை ராணுவத்திடமும் அனுமதி பெறுகிறார். அவ்வீட்டு இளைஞர்கள் வீடியோ டெக்கும், விஜயகாந்த் பட கேசட்டும் வாங்கி வருகிறார்கள். மூத்த உறுப்பினர்கள் பலகாரம் சுடுவது ஒரு பக்கம், சிறுவர்களின் விளையாட்டு மறுப்பக்கம் என களைகட்டுகிறது வீடு. மணப்பெண் வாசுகி (சிந்து குமரேசன்) புடவை, நகை அணிந்து ஒத்திகை பார்க்கிறாள். பொழுது சாய, மெல்ல மெல்ல அமைதியாகிறது அந்த வீடு. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நாய்கள் குறைக்கும் சத்தம் எழ வீட்டில் உள்ள அனைவரும் பதற்றமாகிறார்கள். அந்த வீட்டின் முன் முகாமிடுகிறது ராணுவப்படை. இயக்கத்தினரை தாக்குவது அவர்கள் திட்டம். ஒருபக்கம் ராணுவம், மறுபக்கம் இயக்கத்தினர் நடுவே இந்த திருமண வீடு. அந்த இரவை எப்படி கடக்கிறது இந்தக் குடும்பம்? அதுவே நீளிரா பட மீதிக்கதை.
போரின் தாக்கத்தை பல கோணங்களில் இருந்து உலகம் முழுக்க பல சினிமாக்கள் காட்டி இருக்கின்றன. ஆனால் ஒரு திருமண வீட்டை பின்னணியாக வைத்து போரின் கோரா முகத்தை காட்டி இருக்கிறார் இயக்குநர் சோமீதரன். தலைமுறையாக தொடரும் போரின் அச்சத்தையும், அது வாழ்வுடன் கலந்துவிட்ட இயல்பையும் ஒரு சேர இப்படத்தில் பிரதிபலிக்கிறார். மிக சாதாரணமாக துவங்கும் இப்படம் ஒரு கட்டத்தில் த்ரில்லர் திருப்பம் எடுத்ததும், அதன் பின் வரும் ஒவ்வொரு காட்சியும் திகிலூட்டுகிறது.
மணப்பெண்ணின் தாயாராக வரும் கபிலா வேணு இயல்பான நடிப்பால் கவர்கிறார். போராளிகளுக்கு உணவு தருவது, இராணுவத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி நடிங்கிக் கொண்டே கத்துவது, மகளுக்காக கலங்குவது என நிறைய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். இறுகிப்போன முகத்துடன் போரின் தாண்டவத்தை எதிர்கொள்ளும் நமசிவாயம் தம்பிப்பிள்ளையும் கவனிக்க வைக்கிறார். சிந்து குமரேசன், சுவாதி கிருஷ்ணன், நவயுகா, தார்மீகா மணிமாறன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை செய்கின்றனர். தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் இராணுவ வீரராக நவீன் சந்திரா, அவரின் குழுவில் இருக்கும் முரட்டுத்தனமானவராக ரோஹித் கோகடே, மொழிபெயர்ப்பாளராக வரும் விது ஆகியோரும் சிறப்பு.
படம் முழுக்க போர் மற்றும் அமைதி பற்றிய உரையாடல்கள் அத்தனையும் மிக கூர்மையாக இருக்கின்றன. `போர் என்றால் போர் தான், அதில் அமைதி எங்கே இருக்கிறது?', `எப்போதுமே போரில் வெற்றி என்பது கிடையாது' என்ற வசனங்கள் மிக முக்கியமானவை. மேலும் இதில் ஒரு தரப்பினரை புனிதப்படுத்தும் வேலை எதுவும் செய்யாமல், போலவே ஒரு தரப்பினரை மோசமானவர்கள் என்ற பிம்பமும் இல்லாமல் ஒரு போர் சூழல் மனிதனை எப்படி எல்லாம் மாற்றும் என்பதை கொண்டு வந்திருந்த விதம் குறிப்பிட்டு பாராட்ட வேண்டியது.
செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவு மிக கச்சிதமாக அந்த இரவை காட்சிபடுத்தி இருக்கிறது. அவ்விடத்தில் நிகழும் பரபரப்புகளை அப்படியே பார்வையாளனுக்கு கடத்துவதில் அவரது பங்கு முக்கியமானது. கே-யின் பாடல்கள் பின்னணி இசையும் மிக சிறப்பு. எங்கேயும் துருத்திக் கொண்டு தெரியாமல் தேவையான இடங்களில் மட்டும் உணர்வை கூட்டுகிறது. கிட்டத்தட்ட 101 நிமிடங்கள் ஓடக் கூடிய படத்தில் எங்கும் தொய்வில்லாமல் நகர்கிறது படம். படத்தை எங்கும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் மிக செம்மையாக படத்தை சுருக்கமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். நீளிரா என்றால் நீண்ட இரவு எனப் பொருள். அந்த நீளமான இரவு என்ற உணர்வை கொடுக்க தொழில்நுட்ப குழு முழுமையாக உழைத்துள்ளது.
போரின் கோரத்தை தாண்டி, அதன் உளவியலை பதிவு செய்வதை இப்படம் பிரதானமாக கையில் எடுத்திருக்கிறது. கதவு தட்டப்பட்டதும், சட்டைக்கு மேல் சட்டை அணியும் பெண்கள், எந்த நேரமும் ஒரு ஆபத்தை எதிர்நோக்கியே கடத்தப்படும் நாட்கள், இன்னும் சொல்லப்போனால் துப்பாக்கி இல்லாமல் என்ன விளையாட்டு எனக் கேட்கும் சிறுவர்கள் என போர் அந்நிலத்து மக்களின் உளவியலில் ஒன்றி போனதன் வழக்கத்தை பேசுகிறது. அதுதான் இந்த சினிமாவின் நோக்கம் என்றால், அதனை மிக அழுத்தமாகவே செய்து முடித்திருக்கிறது.
ஒட்டு மொத்தமாக இப்படம் மிக விறுவிறுப்பும், அதேநேரம் அது பேச வந்த கருத்தை தாக்கத்தோடும் பேசி இருக்கிறது. கண்டிப்பாக தவறவிடக் கூடாத சினிமா. படத்தின் இறுதியில் ஒரு கதாபாத்திரம் மன்னிப்பு கேட்கையில், எதிரிலிருப்பவர் "எல்லோரிடமும் சென்று மன்னிப்பு கேட்பீர்களா?" என்பார். உண்மையில் போர் நிகழும் ஒவ்வொரு நிலத்தில் பாதிக்கப்படும் மக்களின் கேள்வியும் இதுவே.