Jalmari Helander Sisu Road to Revenge
திரை விமர்சனம்

சாவே இவன பார்த்தா செத்திடும்... மிரட்டும் சிசு! | Sisu: Road to Revenge Review | Jalmari Helander

கிட்டத்தட்ட Tom இடமிருந்து தப்பிக்கும் Jerry, நரியிடம் இருந்து தப்பிக்கும் Road Runner பறவை போல தான், தன் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் Aatami Korpi.

Johnson

தன்னை துரத்தும் பகையை, விரட்டி விரட்டி அடிக்கும் ஹீரோவின் கதையே `சிசு'

2022ல் வெளியான Sisu படத்தின் சீக்குவல் தான் இந்த `Sisu: Road to Revenge'. முதல் பாகத்தின் கதை தெரிந்தால் தான் புரியும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. ஆனாலும் ஒரு முழுமை கிடைப்பதற்காக இந்த சுருக்கமான முன்கதை. 1944ல் துவங்கும் Sisu படத்தில், கதையின் நாயகன் Aatami Korpi (Jorma Tommila) தங்கத்தை தேடிய பயணத்தில் வெற்றி பெற்று நிறைய தங்கத்தை பை நிறைய அள்ளி நகரத்தில் இருக்கும் வாங்கி நோக்கி புறப்படுகிறார். அப்போது ஜெர்மானிய படையினர் அவரை சீண்ட, மாணிக்கமாய் இருந்தவர் பாட்ஷாவாய் மாறுகிறார். அவர் ஒரு முன்னாள் பின்லாந்து இராணுவ வீரர் என்பதும், 300 ரஷ்ய வீரர்களை தனி ஆளாய் கொன்றவர் என்றும், அவரது செல்ல பேரே Koshchei (சாவே இல்லாதவர்) என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியே இந்த பாகத்துக்கு வந்தால், ஜெர்மானிய வீரர்களுடன் மோதி தன் தங்கவேட்டையை வெற்றிகரமாக முடித்த Aatami Korpi, ரஷ்யா எல்லையில் இருந்த தன் வீட்டுக்கு வருகிறார். இங்கு வைத்துதான் Soviet Red Army படையினரால் அவரது குடும்பம் கொல்லப்பட்டது. அந்த மர வீட்டை பிரித்து கொண்டு தன் தாய் நாடான பின்லாந்துக்கு செல்வது Korpiயின் திட்டம், இவர் ரஷ்யாவுக்குள் வந்ததையும் அவரை அழிக்கவே முடியவில்லை என்ற அவமானத்தையும் துடைப்பது KGB அதிகாரியின் (Richard Brake) திட்டம். இந்த வேலையை முடிக்கும் பொறுப்பை சிறையில் இருக்கும் Soviet Red Army அதிகாரியும், Korpiயின் குடும்பத்தை கொலை செய்தவருமான Igor Draganovக்கு (Stephen Lang) கொடுக்கப்படுகிறது. இந்த சதித்திட்டத்தில் இருந்து Aatami Korpi எப்படி தப்புகிறார்? என்ற அதிரடி ஆக்ஷனே படம்.

Jorma Tommila

முதல் பாகத்தைப் போலவே இந்த பாகமும் லாஜிக்கை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, வெறும் ஆக்ஷன் மற்றும் வன்முறையை மையமாக வைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் Jalmari Helander. 6 சீகுவென்ஸ் தான், எல்லாமே சண்டை காட்சிகள் இதனை வைத்துக் கொண்டு ஒரு மாஸ் படத்தை விறுவிறுப்பாக கொடுக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட Tom இடமிருந்து தப்பிக்கும் Jerry, நரியிடம் இருந்து தப்பிக்கும் Road Runner பறவை போல தான், தன் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் Aatami Korpi. ஆனால் இது சாத்தியமா என நினைக்க வைக்காதபடி, ஒவ்வொரு வன்முறை காட்சிகளையும் சுவாரஸ்யமாக வடிவமைத்து இருக்கிறார்கள். Aatami Korpi பாத்திரத்தில் நடித்திருக்கும் Jorma Tommilaக்கு இந்த முறையும் வசனங்களே இல்லை. உக்கிரமாக எதிரிகளை முறைப்பது, வலியில் துடிப்பது, அவ்வப்போது குடும்பத்தை நினைத்து எமோஷனல் ஆவது என லிமிட்டட் எமோஷனிலேயே மாஸ் காட்டுகிறார். Igor Draganov ரோலில் வரும் Stephen Lang கடந்த பாகத்தில் வரவில்லை என்றாலும், இந்தக் கதைக்குள் இவர் இருந்திருப்பார் என்ற அளவில் மிக அழுத்தமாக தன் வில்லத்தனத்தை பதிய வைக்கிறார். Korpiயின் குடும்பத்தை கொலை செய்தது பற்றி சொல்லும் காட்சியில் அத்தனை மிரட்டல்.

Mika Orasmaa ஒளிப்பதிவு, Juri Seppä, Tuomas Wäinölä பின்னணி இசை, Juho Virolaine படத்தொகுப்பு, Roman Neso Laupmaa, Lauren Okadigbo சண்டை வடிவமைப்பு என தொழில்நுட்ப ரீதியாக எல்லாத்துறையும் அட்டகாசமாக பணியாற்றி இருக்கிறார்கள்.

Stephen Lang

இந்தப் படத்தின் குறைகள் என்றால், கடந்த பாகம் போலவே இதிலும் ஹீரோவுக்கு எந்த ஆபத்து வந்தாலும், அதிலிருந்து தப்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால், நம்மை திடுக்கிட செய்யும் திருப்பங்கள் குறைவு. மேலும் இந்தப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது தான் என்றாலும், சில காட்சிகளை பார்க்கும் போது 'Korpi உனக்கு அவ்வளோ தா லிமிட்டு' என்ற ரியாக்ஷன் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட சாவே இவன பார்த்தா செத்திடும் என்ற லெவலுக்கு போய்விட்டார். அடுத்த பாகங்களில் ஹீரோவின் இந்த சூப்பர் ஹீரோ தன்மையை மனிதப்படுத்தினால் இன்னும் கூடுதலாக கனெக்ட் ஆகும். மேலும் இது முழுக்க முழுக்க வன்முறை விரும்பிகள் மட்டுமே பார்க்கும் படம் என்பதால், இளகிய மனம் படைத்தவர்களும், அதெப்படி இது நடக்கும் என லாஜிக் விரும்பிகளும் இதனை தவிர்ப்பது நலம்.


மற்றபடி பரபரவென ஒரு ஆக்ஷன் படம் பார்க்க நினைப்பவர்களை ஏமாற்றாது இந்த சிசு.