”மதத்தின் பெயரால் மனிதன் கொல்லப்படுவது பிரச்னைக்குரியது” - ஏ.ஆர்.ரஹ்மான் | A R Rahman
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. அந்தப் பேட்டியில் AIயை எப்படி கையாளுவது, ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவது, மதங்கள் பற்றி இறை நம்பிக்கை பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் AI தொழில்நுட்பத்தை எப்படி கையாள்வது என்பது பற்றி கூறுகையில் "AI வல்லுநர்களிடம் நான் முதலில் சொன்ன விஷயமே `மக்களின் வேலைகளை இழக்கும்படி செய்யாதீர்கள், தலைமுறைகளாக தொடரும் சாபங்களான, ஏழ்மை நீக்க, தவறான தகவல்களை கண்டுபிடிக்க, கதை சொல்ல புது கருவிகளை உருவாக்க என போன்றவற்றுக்கு உதவுமாறு செய்யுங்கள். ஒரு துப்பாக்கி செய்கிறோம் என்றால், அதற்கென வழிமுறைகள் வகுப்போம்தானே, எல்லோருக்கும் கொடுக்க மாட்டோமல்லவா. அதுபோல AI வேலைவாய்ப்புகளைப் பறிக்கவும், குடும்பங்களை ஏழ்மையில் தள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஒருவர் கல்லூரியில் 4 வருடங்கள் படித்து கற்றுக்கொண்டு வந்து செய்யும் ஒரு விஷயத்தை AI சில நொடிகளில் செய்யும் என்றால், அது சரியானது அல்ல. எனவே, அதை சார்ந்து நாம் நகரும் முன்பு சரியான வழிகளையும் கண்டறிய வேண்டும். மனித அனுபவம் என்பதை AIயால் கொடுக்கவே முடியாது. எனவே லைவ் கான்செர்ட், லைவ் டான்ஸ், சிம்பொனி போன்றவை இன்னும் அதிக மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டும். லைவ் என்பது ஒரு சமூக அனுபவத்தை கொடுக்கும். உங்கள் மகிழ்ச்சியை மற்றவருடன் நேரில் பகிர்ந்துகொள்ள உதவும்" என்றார்.
மேலும் இந்தியாவில் செல்ஃபி எடுக்கும் கலாசாரம் பற்றி பேசியவர் "நான் அடிக்கடி எல்லாம் வெளியே செல்ல மாட்டேன். அப்படி நான் வெளியே செல்லும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகத் தான் இருப்பேன். ஆனால் விமானங்களில் நீண்ட நேரம் பயணம் செய்துவரும் சமயத்தில் செல்ஃபி கேட்டால் மட்டும் சிரமமாக இருக்கும். இதுவும் ஒரு பார்ட் ஆஃப் தி கேம்தான். ஒரு திருமணத்திற்கு சென்றால்கூட எல்லோரும் வந்து என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பார்கள், அங்கு யாரும் என்னை சாப்பிட விடமாட்டார்கள்.
அதனால் தற்போது நான் திருமணங்களில் சாப்பிடுவதே இல்லை. வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்துவிடுவேன். இதுபோன்ற சம்பவங்கள் ஹாலிவுட்டில் நடப்பதில்லை. அங்குள்ள நட்சத்திரங்கள் 'மன்னிக்கவும் நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டேன்' என்று ஓப்பனாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள், அப்படிச் சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் கனிவானவர்கள்" எனக் கூறினார்.
தொடர்ந்து மதங்கள் பற்றியும் இறைநம்பிக்கை மற்றும் சூஃபியிஸம் பற்றி பகிர்ந்தபோது "மதம் சார்ந்த எனது தேடல் ஆன்மீகம்தான். எனக்கு எல்லா மதங்களும் பிடிக்கும். இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்றவை பற்றி நான் படித்திருக்கிறேன். என்னுடைய பிரச்னை என்னவென்றால் மதத்தின் பெயரால் சக மனிதன் துன்புறுத்தப்படுவது, கொல்லப்படுவது ஆகும். மதம் மேன்மையான விஷயங்களை கண்டறியும் கருவி, அப்படிச் செல்வதுதான் மனிதம்.
எனக்கு இசை பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று, நான் இசை பாடும்போது ஒரு புனித தளத்தில் அனைவரும் ஒன்று என்பதை ருசிப்பதைப்போல் உணர்வேன். அரங்கத்துக்கு வரும் நபர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் வருவார்கள். பல நாடுகளில் இருந்து, பல மொழி பேசும் மக்கள் வருவார்கள். ஆனால் ஒரு சப்தம், ஒரு மகிழ்ச்சி, ஒரு பரவசம் என்பது அழகானது. சூஃபியிஸம் என்பது உங்களைப் பற்றிய எளிமையான விஷயங்களை நீங்களே கண்டடைவது. உங்கள் சுயத்தை நீங்கள் பிரதிபலிக்க பல்வேறு திரைகளை அகற்றி நீங்கள் அழிய வேண்டும். அதன்மூலம் இந்த ஒளியில் ஓர் அங்கமாக நீங்கள் மாறலாம். அது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. அந்த இறப்பு என்பது உங்களுக்குள் இருக்கும் காமம், பேராசை, பொறாமை, மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் மனப்பான்மை அனைத்தும் மடிவது. இதை எல்லாம் கலைவதால் நீங்கள் பெரும் கடலில் ஒரு துளியைப்போல கலப்பீர்கள். அது நிகழும்போது உங்கள் குரல் கடவுளின் குரலாக மாறும். உங்கள் செயல்கள் கடவுளின் செயலாக மாறும். உங்கள் அகந்தை அழிந்தால், நீங்கள் தூய்மையானவராக மாறலாம்" எனக் குறிப்பிட்டார்.

