விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லரா இந்த `மாஸ்க்'? | Mask Review | Kavin | Andrea
விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லரா இந்த `மாஸ்க்'?(2 / 5)
ஹீரோ மற்றும் வில்லியின் வாழ்க்கை ஒரு கொள்ளையினால் எப்படி மாறுகிறது என்பதே `மாஸ்க்'
தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தி வருகிறார் வேலு (கவின்). அதில் சில குறுக்கு வழிகளை பிடித்து பெரிய லாபம் சம்பாதிக்க நினைப்பது, அதனை நோக்கி காய் நகர்த்துவது என சாதுர்யமாக செயல்படுகிறார். இன்னொருபுறம் பூமி (ஆண்ட்ரியா), அரசியல்வாதி பவனை பகடையாக வைத்துக் கொண்டு பாலியல் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பி புது அடையாளத்துடன் வெளிநாடு செல்லும் முயற்சியில் இருக்கும் பூமிக்கு கோடிக்கணக்கான தொகையை கைமாற்றும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. இதை முடித்தால் புது அடையாளத்துடன் வெளிநாடு தப்பிக்கலாம் என ஒப்புக் கொள்கிறார். ஆனால் அந்த தொகை கொள்ளை அடிக்கப்படுகிறது. கொள்ளை போன பணத்தை கண்டுபிடிக்க வேலுவின் உதவியை நாடுகிறார் பூமி. கொள்ளையடித்தது யார்? கவின் கண்டுபிடித்தாரா? பின்பு நடப்பவை என்ன என்பதெல்லாம் தான் மீதிக் கதை.
ஒரு ஹெய்ஸ்ட் கதையை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக். அதற்குள் எல்லாவற்றிலும் ஒரு எதிக்ஸ் + லாபம் பார்க்கும் ஹீரோ. கெடுதல் செய்தாலும் அதில் ஒரு லிமிட் வைத்திருக்கும் வில்லி இடையேயான மோதல் என்ற ஆட்டத்தை இணைத்திருந்தது சிறப்பு. படத்தின் வன்முறையை நகைச்சுவை கலந்து சொன்ன விதமும் கவனிக்க வைக்கிறது.
ஹீரோ கவின், தனது நக்கலான மேனரிசம், அலட்டிக் கொள்ளாத உடல்மொழி போன்றவற்றை இதிலும் தொடர்கிறார். அது படத்திற்கு ஓரளவு கை கொடுக்கிறது. ஆனால் ருஹானியிடம் வழிவது, ஆண்ட்ரியாவை டீல் செய்வது, மாமனாரை உதாசீனப்படுத்துவது என எல்லா காட்சியிலும் அதே அளவிலான நடிப்பை தொடர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்ட்ரியா கொடூரமான வில்லியாக தன்னை காட்டிக் கொள்ள முயல்கிறார். நடிப்பிலும் அதை ஈடு செய்கிறார். ஆனால் அவரது பாத்திரத்தில் அந்த அழுத்தம் இல்லை என்பதால் அது பெரிதாக எடுபடவில்லை. ருஹானி, சார்லி, அர்ச்சனா, பவன், சுப்ரமணியம் சிவா, கல்லூரி வினோத், கிங்ஸ்லி என ஏகப்பட்ட நடிகர்கள். ஆனால் யாரும் மனதில் நிற்கவில்லை.
ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கான டார்க் காமெடி டோனை தருகிறது. ஜி வி பிரகாஷ் இசை படம் முழுக்க கேப்பே இல்லாமல் பாடலாகவோ, பின்னணி இசையாகவோ ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுமுழி பாடல் மட்டும் அதில் ஈர்க்கிறது.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படத்தின் திரைக்கதை தான். நிச்சயமாக இது ஒரு சுவாரஸ்யமான ஹெய்ஸ்ட் படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இதில் இருந்தன. ஆனால் அதனை சொல்ல விதம் மிகவும் படத்தை சுவாரஸ்யம் அற்றதாக மாற்றுகிறது. மொத்த படத்தையும் எடுத்துவிட்டு, எடிட் டேபிளில் படத்தை தேற்றி, அதனை நெல்சனின் வாய்ஸ் ஓவரை வைத்து மேட்ச் செய்த உணர்வு படம் முழுக்க இருந்தது.
மேலும் இதில் மைய கதாபாத்திரங்களான கவின், ஆண்ட்ரியா ஆகிய இருவரின் பாத்திரங்களை விவரித்த அளவு அவர்களின் தேவை தெளிவாக சொல்லப்படவில்லை. ஆண்ட்ரியா பாத்திரமாவது தன் குற்றங்களில் இருந்து தப்பித்து வெளிநாடு தப்ப நினைக்கிறார். அதற்கு அவர் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் கவின் பாத்திரத்தின் நோக்கம் என்ன? அவர் இந்தக் கதைக்குள் செய்வது என்ன? என்பதில் எந்த அழுத்தமோ, தெளிவோ இல்லை.
கதைக்கு தேவையே இல்லாமல், ஹீரோவை பற்றி விவரிப்பதும், வில்லி கொடூரமானவர் என விவரிப்பதும் ஏன்? இந்தப் படம் சொல்ல நினைக்கும் விஷயத்தை பிரதானப்படுத்தாமல், அதனை க்ளைமாக்ஸ் காட்சியில் கொண்டு வந்து ட்விஸ்ட்டாக சேர்த்திருந்ததும் பொருத்தமாகவே இல்லை.
மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் ஹெய்ஸ்ட் த்ரில்லர் படமாக இருந்தது. எழுத்தில் இன்னும் மெனெக்கெட்டிருந்தால் அசத்தலான படமாக வந்திருக்கும் இந்த `மாஸ்க்'.

