Selvaraghavan Manithan Deivamagalam Review
திரை விமர்சனம்

அழுத்தமான படமாக ஈர்க்கிறதா `மனிதன் தெய்வமாகலாம்'? | Manithan Deivamagalam Review | Selvaraghavan

கணவனை மிக அன்பாக பார்த்துக் கொள்ளும் மனைவி வேடத்தில் குஷி ரவி. டப்பிங் சிங்க் ஆங்காங்கே தவறினாலும் நடிப்பில் குறை ஏதும் இல்லை.

Johnson

தூக்குத் தண்டனை கைதிக்கு பின்னிருக்கும் மர்மம் என்ன என்பதே `மனிதன் தெய்வமாகலாம்'

பொன்வயல் கிராமத்தில் ராகவனும் (செல்வராகவன்) அவரது நண்பர் குமாரசாமியும் (ஆர் எஸ் சதீஸ்) நுங்கு விற்கும் வேலையை பார்த்து வருகிறார்கள். ஊரில் அடிப்படை சாலை வசதி கூட இல்லை என்றாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்கிறார் ராகவன். செல்வி (குஷி ரவி) ராகவனை விரும்புவதால் அவரை திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் இனிமையான வாழ்க்கையை துவங்குகிறார்கள், மெய்ன் ரோட்டு அருகே தாபா போட்டு நல்ல வருமானமும் வருகிறது. இவர்களின் வாழ்க்கைக்குள் எதிர்பாராத ஒருவரின் வருகையால் எல்லாம் தலைகீழாக மாறுகிறது. அது யார்? என்ன நடந்தது? ராகவன் ஏன் சிறையில் இருக்கிறார்? என்பதை எல்லாம் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

Manithan

லீட் ரோலில் செல்வராகவன் இயல்பான நடிப்பை கொடுக்க முயல்கிறார். எளிமையான வாழ்க்கைக்கு பழகி இருக்கும் ஒருவர் தயக்கத்துடனே எதையும் எதிர்கொள்வது, மனைவி வந்த பின் அவர் சொல்லும் படி நடப்பது என அளவாக நடிக்கிறார். கணவனை மிக அன்பாக பார்த்துக் கொள்ளும் மனைவி வேடத்தில் குஷி ரவி. டப்பிங் சிங்க் ஆங்காங்கே தவறினாலும் நடிப்பில் குறை ஏதும் இல்லை. நண்பர் வேடத்தில் ஆர் எஸ் சதீஸ் நடிப்பு அத்தனை உவப்பாக இல்லை. மிகவும் செயற்கையான நடிப்பை கொடுக்கிறார். கௌசல்யாவுக்கு வழக்கமான கிராமத்து பெண் வேடம். மைம் கோபிக்கு அதை விட வழக்கமான வில்லன் வேடம். இருவரும் தேவையானதை செய்கிறார்கள். கெஸ்ட் ரோலில் ஒய்.ஜி.மகேந்திரன் வருகிறார்.

Manithan

பிரியன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அத்தனை ஈர்ப்பாக இல்லை. ரவிவர்மா தன் ஒளிப்பதிவு மூலம் முடிந்த வரை காட்சிகளில் சுவாரஸ்யம் சேர்க்க முயன்றிருக்கிறார். மான்ஸ்டர் முகேஷின் சண்டை காட்சிகளும் அத்தனை அதிரடியாக இல்லை.

இப்படத்தின் பெரிய பிரச்சனையே, இந்தக் கதைக்குள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை என்பதுதான். வெறுமனே க்ளைமாக்சில் வரும் அதிர்ச்சியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எடுத்ததை போல இருக்கிறது. படத்தில் வரும் ஒரு சிறுமிக்கு நிகழும் விஷயம், ஒருவருக்கு தெரிந்திருந்தும் அதனை ஆரம்பத்திலேயே சொல்லாமல் மறைப்பது ஏன்? சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சனைக்கு ஒரு பாத்திரம் கிளம்பி சென்று சிக்கலில் மாட்டுவது ஏன்? என சில விஷயங்களுக்கு லாஜிக் இல்லை. இஷ்டத்துக்கு கதையை வளைத்தது போல இருக்கிறது. மேலும் இந்தக் கதையில் முக்கியமான பாத்திரம் எதற்காக இறந்து போகிறது என்று சொல்லும் காரணமும் மிக அபத்தமாகவும், பிற்போக்குத் தனத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து, கருத்திலும் தெளிவு இருந்திருந்தால் நல்ல படமாக வந்திருக்கும்.