விஜய் சாரின் கடைசிப் படத்தை பெரிய திரையில் கொண்டாட வேண்டாமா? - பூஜா ஹெக்டே | Pooja Hegde
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்துக்கு CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் சில காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது மேலும், சில மணிநேரங்களில் முழுப்படமும் வெளியானது.
இது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட திரைத்துறையினர் பலரும் இதற்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தனர். இப்போது இப்படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே இது குறித்து இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் "என் அன்பான ரசிகர்களே, ஒரு திரைப்படம் என்பது எண்ணற்ற மணிநேர உழைப்பு, படைப்பு சார்ந்த துணிச்சலான முயற்சிகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உங்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் உழைத்த ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் விளைவாகும். நமது திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது எனக்கு மட்டுமல்ல, அதில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் மன வருத்தத்தை அளிக்கிறது.
அது சட்டவிரோதமாகக் கசிந்துப் பகிரப்படுவதைப் பார்ப்பது கடினமானது - எண்ணிக்கையின் காரணமாக அல்ல, மாறாக அது அப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் தொழில்நுட்ப கலைஞருக்கும் கிடைக்க வேண்டிய மரியாதையைப் பறித்துவிடுகிறது. மேலும், விஜய் சாரின் கடைசிப் படத்தை, கடைசி முறையாக, சரியான முறையில் பெரிய திரையில் கண்டு கொண்டாடவும் பார்க்கவும் நாம் அனைவரும் ஒன்று கூடத் தகுதியானவர்கள் அல்லவா? ஆகவே, அதைச் சரியான முறையில் பார்ப்போம்.. காத்திருப்போம். அது உரிய நேரத்தில் வெளியாகும். திருட்டுத்தனத்தை நாம் ஊக்குவிக்க வேண்டாம். அப்போதுதான் சினிமாவும் கலையும் நிலைத்து நிற்கும். அன்புடன், கலையுடன். கலைஞர்களுடன். தொழில்நுட்ப கலைஞர்களுடன், பூஜா ஹெக்டே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

