அம்மாவின் உயிரை காக்க மகன்களின் போராட்டமும், அதன் பின்னிருக்கும் திட்டமுமே `தாய் கிழவி'
பவுனுத்தாயி (ராதிகா) காடுபட்டி ஊரையே நடுங்கவிடும் மூதாட்டி. வட்டிக்கு விட்ட காசை கேட்டு ஊர்வாசிகளை மிரட்டுவது, சொத்து பிரித்து தர சொல்லி சலம்பும் மகன்களை அதட்டி துரத்துவது, வரதட்சணை பிரச்சனை காரணமாக மகளும் பேரனும் தன் வீட்டுக்கு வர, மகளை வீட்டு வேலைகள் பார்க்க சொல்வது, பேரனை கூட டிவி பார்த்து கரண்ட் பில் கூட்டுகிறாயா என அதட்டுவதுமாக அதிரடி லேடியாக வாழ்கிறார் பவுனு. ஆனால் எதிர்பாரா விதமாக அவர் படுத்த படுக்கையாகி உயிருக்கு போராட, ஒன்று கூடுகிறது ஊரும், சொந்தமும். ஒரு பக்கம் பவுனுத்தாயின் தொல்லை ஒழியட்டும் என அவர் சாவை எதிர்நோக்கி நிற்கிறது ஊர், ஆனால் அவர் உயிரை காப்பாற்ற நினைக்கின்றனர் அவரின் மூன்று மகன்கள்.
ஊரின் வேண்டுதல் பலித்ததா? சொத்து பிரிக்க சொல்லி கேட்ட மகன்களுக்கு அம்மா மேல் திடீர் பாசம் ஏன்? உண்மையில் எல்லோரிடமும் பவுனுத்தாயி கடுமையாக நடப்பது ஏன்? என்பதை எல்லாம் சொல்கிறது மீதிக்கதை.
ஒரு பொழுதுபோக்கான படத்தில் அதன் சுவை கொஞ்சமும் குறையாமல் அதற்குள், தான் பேச நினைத்த அரசியலையும் அழகுபட பேசி இருக்கும் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு பெரிய வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் பெரிய பலம் படம் எழுதப்பட்ட விதமும், அதற்கு சளைக்காமல் ஈடு கொடுத்திருக்கும் நடிகர்களின் பங்களிப்புமே. பவுனுதாயாக ராதிகா, சாமி கூப்பிட்டு விபூதி பட்டையடித்து தோரணையாக குடையை தூக்கிக் கொண்டு கிளம்புவது முதல், தன் குடும்பத்து பெண்களிடம் பேசுவது வரையில் பல காட்சிகளில் தன்னுடைய மொத்த சினிமா அனுபவத்தையும் காட்டுகிறார். முதுமையை காட்டுவதனாலும் சரி, ஸ்டைலாக டொரினோ குடிப்பதானாலும் சரி எல்லாவற்றிலும் மாஸ் தான். மகன்களாக வரும் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். கமலின் வெறித்தன ரசிகராக சிங்கம் புலி செய்யும் ஒவ்வொரு சேட்டையும் பட்டாசு, செலவுகளுக்கு கஞ்சம் பிடிக்கும் அருள்தாஸ், பெபிக்கால் போட்டு பூமாலை கட்டும் பாலசரவணன் என்ற கதாபாத்திர வடிவமைப்பு படத்தை மிகவும் சுவாரஸ்யப்படுத்துகிறது. திருமணம் ஆகாத முதிர் கண்ணன் பென்னி குயிக் பாத்திரத்தில் முனீஸ்காந்த் தன் பங்குக்கு பட்டையை கிளப்புகிறார்.
கணவர்களின் திட்டம் தெரிந்ததும் பல்டி அடித்து பாசத்தை கொட்டும் பவுனுத்தாயி மருமகள்கள் முத்து லட்சுமி, நிரோஷா, அபிநயா, வரதட்சணைக்காக காத்திருக்கும் முத்துக்குமார், படம் முழுக்க அமைதி காத்து ப்ரீ க்ளைமாக்சில் மொத்த க்ளாப்ஸையும் அள்ளும் ரெபேக்கா என அனைவரும் அட்டகாசம். மைய கதாபாத்திரங்கள் தவிர, கோவிலில் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ளும் ஆத்தாடி குமரன், ராஜீவ் காந்தி பாத்திரத்தில் வரும் விஜய கணபதி, அவரது முறைப்பெண் ஸ்ருதிஹாசனாக வரும் ருக்மிணி, நகைக்கடைக்காரராக வரும் இளவரசு என சின்ன சின்ன ரோலில் வரும் பாத்திரங்கள் கூட நம் மனதில் நிற்கிறது. அந்த பாத்திரங்களுக்கு என ஒரு நல்ல தருணங்கள் படத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒரு காமெடி படம் என்றாலும், அதற்குள் மொழி திணிப்பு பற்றி பேசுவது, பெண்கள் சுயமாக இயங்க வேண்டியதன் அவசியம் பற்றி சொல்வது, பெற்றோர்களிடம் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுவது என முடிந்த வரையில் திணிப்பாக இல்லாமல் போகிற போக்கில் நல்ல கருத்துக்களை சேர்த்திருப்பதும் மிகச் சிறப்பு.
கிராமத்து வாசத்தை இசை மூலம் கடத்துகிறார் நிவாஸ் கே பிரசன்னா. `தாய் கிழவி லோக்கல் டானுடா, இவ சுங்கிடிச்சீல கட்டிவந்த சூப்பர் மேனுடா' என மணிமாறனும், `கிழக்கு சீம கிழவி, இவ வாய தொறந்தா கொளவி' என ஜெகனும் மண் மனம் பறக்க பாடல்களை அழகாக்க, அருண் ராஜா காமராஜின் டிஸ்க்கோ ஸ்டைல் `மாட்டிக்கிட்டான் மைனர்' என ஆல்பம் மொத்தமும் அட்டகாசம். விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அந்த ஊரையும், பவுனுத்தாயி வீட்டையும், அதன் சுற்றுப்புறத்தையும் நம் மனதில் பளிச்சென பதியும்படி காட்டுகிறது. ஷான் லோகேஷ் படத்தொகுப்பு கதை நகரும் வேகத்துக்கு ஏற்ப சுவாரஸ்யமான கட்களை கொடுத்திருக்கிறது. ராதிகாவின் தந்தட்டி சுமக்கும் காது, சுருக்கம் விழுந்த முகம், தொப்பை விழுந்த வயிறு என மூதாட்டி தோற்றத்தை புராஸ்தடிக் மேக்கப் மூலம் கொண்டு வந்திருக்கும் வினீஷ் மற்றும் மேக்கப் செய்த செல்லத்துரை குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
இப்படத்தின் எழுத்து, நடிப்பு தாண்டி இன்னொரு ஸ்பெஷல் இருக்கிறது என்றால் அது இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிற படங்களின் பாடல்கள். அதிலும் குறிப்பாக கமல் பாடல்களை கதையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தி இருந்த விதம் அதகளம். அதிலும் இடைவேளையின் போது வரக்கூடிய பாடல் எல்லாம் மாஸ்ஸுக்கெல்லாம் பாஸ். படத்தின் குறை என சொல்வதென்றால், மிக இயல்பாக நகர்ந்து கொண்டிருக்கும் கதையில், அம்மா செண்டிமெண்ட் மற்றும் திருமணம் குறித்து முனீஸ்காந்த் பேசும் காட்சி இரண்டையும் சொல்லலாம். இந்த இரண்டும் தனி காட்சிகளாக சிறப்பானது தான். ஆனால் கதைக்குள் திணிப்பாக இன்னும் இயல்பாக வந்திருக்கலாம்.
மொத்தமாக பார்த்தால் இது குடும்பத்தோடு பார்த்து ரசித்து மகிழக் கூடிய பிளாக்பஸ்டர் என்டர்டெய்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.