Mohan G Draupathi 2
திரை விமர்சனம்

சுல்தானுக்கும், தளபதிக்குமான மோதல்! | `திரௌபதி 2' விமர்சனம் | Draupathi 2 | Mohan G

இப்படத்தின் பலம் எனக் கூறுவது என்றால் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் பாடல்களை கூறலாம். கோனே பாடல் கேட்க மிகவும் சிறப்பாக இருக்கிறது.

Johnson

இஸ்லாமிய படையெடுப்புக்கு பின் இந்தியாவில் நடந்த விஷயங்களை கற்பனை கலந்து சொல்கிறது `திரௌபதி 2'.

ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) வக்பு வாரியத்தால் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து போராடுவதில் துவங்குகிறது கதை. இந்த பிரச்சனையை சரி செய்யும் ஒரு முயற்சியின் போது 14ஆம் நூற்றாண்டில் இருந்த வீரசிம்ம கடாவராயன் (ரிச்சர்ட் ரிஷியே தான்) பற்றிய கதையை அறிந்து கொள்கிறார். முகமது பின் துக்ளக் (சிராக் ஜானி) இந்தியாவில் உள்ள இந்துக்களை, இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அவர் மிரட்டலின் பெயரில் பலரும் மதம் மாறுகிறார்கள், மறுப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை எதிர்த்து நிற்கிறார் வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்), அவரின் விசுவாசி மற்றும் தளபதியான வீரசிம்ம காடவராயன். ஒரு கட்டத்தில் வல்லாள மகாராஜா முக்கியமான பொறுப்பு ஒன்றை காடவராயனுக்கு கொடுக்கிறார். அதை நிறைவேற்றும் முயற்சியில் பல சவால்களை எதிர்கொள்கிறார். அது என்ன பொறுப்பு? துக்ளகை எதிர்த்து வெல்ல முடிந்ததா? என்பதை எல்லாம் சொல்கிறது இந்த `திரௌபதி 2'.

Draupathi 2

நடிகர்கள் பொறுத்தவரை லீட் ரோலில் ரிச்சர்ட் ரிஷி தன்னால் முடிந்த ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அதில் எந்த உயிரோட்டமும் இல்லாததால் பெரிய அளவு கவரவில்லை. அரசராக வரும் நட்டி நடிப்பு பரவாயில்லை. ஆனால் சூப்பர்ஸ்டார் ஸ்டைலில் நடிப்பதை சற்று குறைத்துக் கொள்ளலாம். நாயகியாக ரக்ஷனா முடிந்த அளவு லிப் சிங் கொடுத்து டயலாக் பேச முயல்கிறார். சில எமோஷனல் காட்சிகளில் சொல்லிக் கொள்ளும்படி நடிக்கிறார். சிராக் ஜானி மிக வழக்கமான ஒரு வில்லனாக வந்து போகிறார்.

Richard Rishi

இப்படத்தின் பலம் எனக் கூறுவது என்றால் ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் பாடல்களை கூறலாம். கோனே பாடல் கேட்க மிகவும் சிறப்பாக இருக்கிறது. 14ம் நூற்றாண்டுக்கு வலிந்து திணிக்கப்பட்ட கதை சென்றாலும், அதன் பின்பு ஓரளவு பரபரப்பாக கதை நகர்கிறது. அரண்மனை, சண்டைகாட்சி, சிஜி போன்றவற்றை கிடைத்த பட்ஜெட்டுக்குள் எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவு கொண்டு வந்திருக்கிறது படக்குழு.

இப்படத்தின் மைனஸ் என சொல்வதென்றால், ஒரு சினிமாவாக சுவாரஸ்யமான திரைக்கதையோ, புதிதான விஷயங்களோ படத்தில் எதுவும் இல்லை. படத்தில் நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் எந்த பாத்திரமும் அழுத்தமாக இல்லை. வசனங்களில் கூட அத்தனை பிழைகள், ஒரு காட்சியில் ஹீரோ "எவ்வளவு பெரிய விஷயத்தை, இவ்வளவு அசாதாரணமாக சொல்லிவிட்டாய்" என்பார். சாதாரணம் என்ற வார்த்தை தான் அங்கு வந்திருக்க வேண்டும். படம் நெடுக வரும் உரையாடல்கள் மொத்தமும் இப்படி மிக மெத்தனமாக எழுதப்பட்டதாகவே இருந்தது.

Draupathi 2

இது ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்ட கதை என்றும், இது துல்லியமான வரலாறு இல்லை என்றும் படத்தின் துவக்கத்தில் போடப்படுகிறது. எனவே இதில் சொல்லப்படுவதில் எது உண்மை எது கற்பனை என்ற தெளிவு பார்வையாளர்களுக்கு கிடைக்காது. வெறுமனே இஸ்லாமியர்கள் மோசமானவர்கள் என்ற தொனி மேலோங்கி இருப்பது படத்தின் சிக்கல். மேலும் இந்தக் கதையை சொல்வதென்றால் நேரடியாக 14ம் நூற்றாண்டு கதையையே சொல்லி இருக்கலாம், இந்தப் படத்துக்குள் நிகழ்கால கதையும், அதில் வக்பு வாரிய - நில சிக்கல் பேசப்படுவது ஏன்? அந்தக் கதை இப்படத்திற்கு ஏன் தேவை என்பதும் புரியவில்லை.

மொத்தத்தில் வரலாற்று பின்புலத்தில் சுமாரான விதத்தில் வந்திருக்கும் மற்றும் ஒரு படம் என்ற அளவிலேயே தேங்குகிறது இந்த `திரௌபதி 2'.