ஷூட்டை நிறுத்திவிட்டு `மங்காத்தா' பார்க்க வந்த சிம்பு - வைரலாகும் பழைய வீடியோ! | Simbu | Mankatha
அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி 2011ல் வெளியான படம் `மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது இப்படம் நாளை (ஜன 23) ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இதனையொட்டி `மங்காத்தா' படம் வெளியான சமயத்தில் நடந்த விஷயங்கள் பலவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்படி `மங்காத்தா' படம் பார்ப்பதற்காக மைசூரில் `ஒஸ்தி' படப்பிடிப்பில் இருந்த சிம்பு, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்ததை 2011ல் டிவிட் செய்த வெங்கட்பிரபுவின் பதிவு வைரலானது.
அதனை தொடர்ந்து படம் பார்த்த அனுபவம் பற்றி சிம்பு சொன்ன வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் "அஜித் சாருக்கு நன்றி சொல்லணும், ஒரு அஜித் சார் ரசிகனாக அவரது 50வது படத்தை சத்யம் திரையரங்கில் 8 மணி காட்சி பார்த்துவிட்டு, அதன் பிறகு மீண்டும் ஒரு காட்சி பார்க்க நினைத்தேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. படிக்கட்டில் நின்றுகொண்டே படம் பார்த்தேன். அப்படி எல்லாம் நான் படம் பார்த்ததே இல்லை. அப்படி இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என தோன்றும் அளவுக்கு படம் இருந்தது. நெகட்டிவ் ரோலில் அஜித் சார் அட்டகாசமாக நடித்திருந்தார். ஒரு ரசிகராக தன் நட்சத்திரத்தின் படம் பெரிய ஹிட்டாக வேண்டும், நன்றாக நடித்திருக்க வேண்டும் என ஆசை இருக்கும். அதை திருப்திகரமாக செய்திருந்தார்கள்.
வெங்கட்பிரபு மற்றும் குழுவினராக பிரேம் ஜி, மஹத், வைபவ், த்ரிஷா என அனைவரும் சிறப்பு. அர்ஜுன் சார் மிக சிறப்பாக செய்திருந்தார். ஆக்ஷன் கிங் என அவர் சொல்லும் இடமெல்லாம் அற்புதமாக இருந்தது. யுவன் இசை, சில்வாவின் சண்டைக்காட்சிகள் எல்லாமே சிறப்பு. நல்ல ஒரு 50வது படத்தை அஜித் சாருக்கு கொடுத்ததற்காக மொத்த குழுவுக்கும் என் நன்றி" என பேசி இருந்தார்.

