"இப்பவும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா?" - நிதானமாக பதில் சொன்ன அஷ்வின் | Ashwin Kumar
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சஞ்சனா திவாரி, பவானி ஸ்ரீ, அஷ்வின்குமார் எனப் பலரும் நடித்துள்ள `ஹாட்ஸ்பாட் 2 மச்' படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.
இதில் நடித்துள்ள அஷ்வின்குமார் சில வருடங்களுக்கு முன் `என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் "எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகள் கேட்டு தூங்கி இருக்கிறேன். நான் தூங்காத ஒரே கதை ஹரி (என்ன சொல்லப் போகிறாய் இயக்குநர்) சொன்ன கதை" என்று பேசி இருந்தார். அப்போது அந்தப் பேச்சு மிகப்பெரிய சர்ச்சையானது. அந்தப் பேச்சைக் குறிப்பிட்டு "இப்பவும் நீங்கள் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா, விழித்துக் கொள்கிறீர்களா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அஷ்வின்குமார், "40 என்பது பொதுவாக சொன்ன ஒரு நம்பர். நான் அதற்கு மேலும் கேட்டிருக்கலாம், கம்மியாகவும் கேட்டிருக்கலாம். கதை கேட்கும்போது தூங்காதவர்களே இல்லையா, தியேட்டரில்கூட பார்க்கிறோம் அத்தனை பேர் தூங்குகிறார்கள். யாரையும் புண்படுத்துவதற்காக பேசியது கிடையாது.
அதற்கு தெளிவான விளக்கமும் பேசி வீடியோவாக வெளியிட்டேன். திரும்பத்திரும்ப அதைப் பற்றி கேட்கும்போது, நீங்கள்தான் அதைக் குத்திக் காட்டுவதுபோல இருக்கிறது. இன்னும்கூட நான் கற்றுக் கொள்ளும் ஒரு நடிகனாகத்தான் இருக்கிறேன். ஓவ்வொரு இயக்குநரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறேன், விக்னேஷ் கார்த்திக்கிடம் இருந்தும் கற்றுக் கொள்கிறேன். அது முடிவில்லாத ஒரு விஷயம்" என்றார்.

