Kiss படம், Preethi Asrani, Kavin, எக்ஸ் தளம்
திரை விமர்சனம்

காதல் + ஃபேண்டசி.. என்ன சொல்கிறது கவின் நடித்துள்ள கிஸ்? | Kiss Review | Kavin | Preethi Asrani

காதல் ஜோடி, அவர்களுக்கு இடையே நடக்கும் சின்ன மோதல், ஊடல் கடந்து மீண்டும் கூடல் என மிகப் பழக்கப்பட்ட ஒரு காதல் கதையில், கிஸ் மூலம் ஒரு ஃபேண்டசி எலெமென்ட் சேர்த்து புதுமையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன்.

Johnson

காதல் ஜோடி, அவர்களுக்கு இடையே நடக்கும் சின்ன மோதல், ஊடல் கடந்து மீண்டும் கூடல் என மிகப் பழக்கப்பட்ட ஒரு காதல் கதையில், கிஸ் மூலம் ஒரு ஃபேண்டசி எலெமென்ட் சேர்த்து புதுமையாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன்.

தன் காதலின் எதிர்காலத்தைத் தெரிந்துகொண்ட இளைஞன், காதலை கைவிடுகிறானா? காப்பாற்ற முயற்சிக்கிறானா என்பதே கிஸ் படத்தின் கதை ஆகும்.

நெல்சன் (கவின்) இசைக் கலைஞனாக முயற்சி செய்வதை பார்ட் டைம் ஆகவும், காதல் மீது தனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்பதால், மற்றவர்கள் காதலுக்கு உலை வைப்பதை ஃபுல் டைமாகவும் செய்துகொண்டிருக்கும் இளைஞனாக வலம் வருகிறார். எதிர்பாராத ஒருநாள் சாரா (ப்ரீத்தி அஸ்ராணி) மூலமாக, நெல்சன் கைகளுக்கு வந்து சேர்க்கிறது ஒரு மர்மமான புத்தகம். அது வந்ததில் இருந்து, ஏதாவது ஒரு காதல் ஜோடி கிஸ் அடிப்பதைப் பார்த்தால், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம் என எல்லாம் பார்க்க முடியம் என்ற வினோத சக்தி நெல்சனுக்கு வருகிறது. இதைச் சரி செய்யும் முயற்சியாக, புத்தகத்தைக் கொடுத்த சாராவைப் பற்றி தெரிந்துகொள்ள அவரிடம் பழக ஆரம்பிக்கிறார் நெல்சன். இருவருக்குமான நட்பு மெல்லமெல்ல காதலாக தலை எடுக்க, நெல்சனின் கிஸ் ஜோசியம் அவருடைய காதலுக்குச் சொல்வதென்ன? இந்த ஜோடி சேர்ந்ததா? என்பதெல்லாம் தான் `கிஸ்'

Kavin, Preethi Asrani

காதல் ஜோடி, அவர்களுக்கு இடையே நடக்கும் சின்ன மோதல், ஊடல் கடந்து மீண்டும் கூடல் என மிகப் பழக்கப்பட்ட ஒரு காதல் கதையில், கிஸ் மூலம் ஒரு ஃபேண்டசி எலெமென்ட் சேர்த்து புதுமையாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன். நடன இயக்குநர் - சினிமா இயக்குநர் என்ற வருகைக்கு வாழ்த்துகள் ப்ரோ.

கவின் எதையும் அசட்டையாய்க் கையாளும் இளைஞனாக, தனக்கு வந்திருக்கும் சக்தியைப் பற்றிப் புரியாமல் தவிப்பது, ப்ரீத்தி மேல் வரும் காதலை மறைப்பது, தந்தை மீது காட்டும் வெறுப்பு என பல உணர்வுகளை மிக எளிதில் நடிப்பில் கொண்டு வருகிறார். ப்ரீத்தி அஸ்ராணி, படம் முழுக்க க்யூட். கவின் தன்னிடம் காதலைத்தான் சொல்லப் போகிறார் என ஒவ்வொரு முறை புருவம் விரிய அவரை எதிர்பார்ப்புடன் தவிப்பதும், காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும் அவரைத் தவிர்ப்பதும் என நடிப்பு சிறப்பு. ஹீரோ நண்பனாக மிர்ச்சி விஜய், தம்பியாக சக்தி ராஜ் காமெடிக்கு உதவுகின்றனர். ஆனால் இவர்களைவிட டாக்டராக வரும் விடிவி கணேஷ் சொல்லும் கவுண்டும், செய்யும் காமெடியிலும் தியேட்டரில் சிரிப்பலையை தெறிக்க விடுகின்றன. அதிலும் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயலும் இளைஞனை, அவர் கையாளும் காட்சி ஃபுல் ஃபன் மோட். தேவயானி, ராவ் ரமேஷ், கல்யாண், கௌசல்யா மற்றும் கெஸ்ட் ரோலில் பிரபு ஆகியோர் கொடுத்த வேலையைச் சிறப்பாக முடித்திருக்கிறார்கள்.

Kavin, Preethi Asrani

ஜென் மார்ட்டின் பின்னணி இசை படத்தின் பெரும் பலம். காதல், குடும்ப சென்டிமென்ட் என ஒவ்வொன்றிலும் அழகாக எமோஷன் சேர்த்திருக்கிறார். பாடல்கள் மட்டும் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஹரீஷ் கண்ணா ஒளிப்பதிவு படத்தை கலர் ஃபுல்லாகக் கொடுத்திருக்கிறது. ஆர்.சி.பிரணவ் படத்தொகுப்பு காதல் ஜோடிகளின் ஃபிளாஸ்பேக், நிகழ்கால கதை என இரண்டையும் முடிந்த வரை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறது.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகளைச் சொல்லலாம். மன்னர் காலத்து கதை முடிந்து நிகழ்கால கதைக்கு வந்து படத்தில் ஹீரோவுக்கான பிரச்னைக்கு வர இடைவேளை ஆகிவிடுகிறது. இதற்கிடையேயான காட்சிகள் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லை. இரண்டாம் பாதியில் இருக்கும் சில சுவாரஸ்ய காட்சிகள், காமெடிகள்போல முதல் பாதியிலும் இருந்திருக்கலாம். ராவ் ரமேஷ் வைத்து சொல்லப்படும் ட்விஸ்ட், அத்தனை அழுத்தமானதாக இல்லை என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Preethi Asrani, Kavin

மேலும், அவரை வைத்துச் சொல்லப்படும் கதை இல்லை என்றாலும் மையக் கதையில் பெரிய மாற்றம் ஏதும் இருந்திருக்காது. காதலோ, திருமணமோ எந்த உறவாக இருந்தாலும் அதற்குள் உள்ள புரிதல்களே அந்த ஜோடியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்ற கருத்தைச் சொல்ல வந்து, ஆனால் அதைப் பாதியிலேயே அம்போ என விட்டுவிட்டுச் சென்றது உறுத்தல். படத்தின் ஃபேண்டசி மீது கவனத்தைச் செலுத்தி படத்தின் எமோஷனை கோட்டைவிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு ஜாலியான படம். சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தின் காமெடிகள் கை கொடுக்கிறது. சில குறைகளைச் சரி செய்திருந்தால் மிஸ் ஆகாமல் அழுத்தமாக பதிந்திருக்கும் இந்த ’கிஸ்’.