மிஷ்கின் சாரின் `கிஸ்' டைட்டில், ஓப்பனிங் வாய்ஸ் VJS... கவின் சொன்ன சம்பவம் | Kavin | Kiss | Mysskin
கவின் நடிப்பில் சதீஷ் இயக்கியுள்ள `கிஸ்' படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய கவின் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் "அனிருத் சாருக்கு நன்றி, அவர் இருக்கும் பரபரப்புக்கு நடுவில், இந்தப் படத்தின் முதல் பாடல் அவரது குரலில் இருந்தால் நன்றாக இருக்கும் என நாங்கள் கேட்டவுடன் பாடல் பாடிக்கொடுத்தார். மேலும் படத்தில் பாட்டு எழுதியிருக்கும் விக்கி அண்ணன், விஷ்ணு இடவனுக்கு நன்றி. எல்லோரிடமும் கடைசி நேரத்தில் சென்று தான் கேட்கும்படி சூழல் அமைந்தது. ஆனாலும் எங்களுக்காக அவர்கள் செய்து கொடுத்தார்கள்.
`கிஸ்' என்ற டைட்டில் மிஷ்கின் சாரிடம்தான் இருந்தது. எல்லோரும் அவருக்கு சொந்தமான ஒன்று என்றால், இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பது பெரிய விஷயம். எங்கள் கதைக்கு இந்த டைட்டில் தான் பொருத்தம் என புரிந்து கொண்டு டைட்டில் கொடுத்த மிஷ்கின் சாருக்கு நன்றி.
விஜய் சேதுபதி அண்ணனை, படத்தில் வாய்ஸ் ஓவர் தேவை என கடைசி நேரத்தில்தான் அணுகினோம். முதலில் இந்த வாய்ஸ் தேவை என்ற சூழல் வந்ததும், யார் பேசினால் பொருத்தமாக இருக்கும் என யோசித்தோம். எங்கள் எல்லோருக்குமே தோன்றியது விஜய் சேதுபதி அண்ணன்தான். யதார்த்தமான ஒரு மனிதர், யதார்த்தமான ஒரு கதை சொல்லும் போது கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அவருடனான சந்திப்பு வெறும் அரை மணிநேரம் தான் நடந்தது, உடனடியாக வந்து எங்களுக்காக 10 நிமிடத்தில் டப்பிங்கை முடித்துக் கொடுத்தார்" எனத் தெரிவித்தார்.
படத்தில் விஜய் சேதுபதி பேசியது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கவின், "முதலில் நான் வாய்ஸ் ஓவர் பேசி இருப்பதை வெளியில் சொல்லாமல் இருங்கள், அப்போதுதான் படத்தில் வந்து பார்ப்பவர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் எனக் கூறினார் விஜய் சேதுபதி. ஆனால் நீங்க பேசி இருக்கீங்கன்னு சொல்றதே சர்ப்ரைஸ்தான் அண்ணே எனக் கூறி அறிவித்தோம்" என்றார்.