GAME CHANGER X Page
திரை விமர்சனம்

GAME CHANGER Review | யானை புகும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள்... Out of Fashion-ல் கேம் சேஞ்சர்?

நேர்மை தவறாத அரசு அதிகாரி வெர்சஸ் தவறுகள் செய்யும் அரசியல்வாதி. இவர்களுக்குள் நடக்கும் யுத்தமே இந்த கேம் சேஞ்சர்.

karthi Kg

நேர்மை தவறாத அரசு அதிகாரி Vs தவறுகள் செய்யும் அரசியல்வாதி. இவர்களுக்குள் நடக்கும் யுத்தமே இந்த கேம் சேஞ்சர்.

ஆந்திர மாநிலத்தில் ஒரு பெரும் விபத்து நேர்கிறது. அதில் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பிக்கும் முதல்வர், மீதியிருக்கும் ஆட்சிக் காலத்தில் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். ஆனால், ஊழலில் ஊறிப்போன அரசியல்வாதிகளால் அவ்வளவு எளிதாக மாற முடியுமா..? அதனால் திரைமறைவில் எல்லா ஊழல்களும் தொடர்கிறது.

ராம்சரண்

இன்னொரு பக்கம் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று ஊரையே சுத்தமாக்குகிறார் ராம் சரண். ராம் சரணுக்கும், ஊழல் அரசியல்வாதியும் வருங்கால முதல்வருமான எஸ் ஜே சூர்யாவுக்கும் கண்டதும் மோதல். இருவரும் மோதிக்கொண்டே இருக்கே, இறுதியில் யார் வென்றார்கள் என்பதே மீதிக்கதை.

ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, தலைமை தேர்தல் ஆணையர், அரசியல்வாதி என ராம்சரணுக்கு பல பொறுப்புக்கள், பல வேடங்கள். இதில் அரசியல்வாதி வேடம் பக்கா. தேர்தல் ஆணையர் ஓக்கே.. மத்தது ம்ஹூம். ராம்சரணின் காதலியாக கியாரா அத்வானி. பாடல்கள் போகவும் சில காட்சிகளுக்கு வருகிறார். அவ்வளவுதான். காமெடி காட்சிகளுக்காக சுனில், பிரியதர்ஷி, பிரமானந்தம் என பலரை ஓவர்டைம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், 12த் மேனாக வந்து காமெடி போர்சனில் கலக்கியது ஜெய்ராம்தான். சின்ன சின்ன மாடுலேசன், நக்கல், நையாண்டி என தூள் கிளப்பியிருக்கிறார்.

எமோஷனல் காட்சிகளில் தானொரு பெர்பார்மர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் அஞ்சலி.
அஞ்சலி

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்... பொதுவாகவே அவரின் படங்களில் பாடல்கள் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்படும். அதேபோல இந்தப் படத்திலும் ஜருகண்டி பாடலை மிகப்பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். Infra red கேமராவில் எடுக்கப்பட்ட லைரான்னா பாடல் இன்று திரையரங்கில் ஒளிபரப்பாகவில்லை. தொழில்நுட்ப கோளாறாம். ஜனவரி 14ம் தேதி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகுமாம்.

அப்படியெனில் இந்த நான்கு நாட்கள் படம் பார்ப்பவர்கள் என்ன மனநிலையில் இதை அணுக வேண்டும்.? இதெல்லாம் தாண்டி, படத்தின் கதைக்கேற்பதான் இப்போதெல்லாம் பிரமாண்ட செட் போடப்படுகிறது. ஆனால், வெறுமனே பாடல்களுக்கு 50 கோடி செட் போட்டு எடுப்பது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது. ஷங்கர் என்று இதை புரிந்துகொள்வார் என்றுதான் தெரியவில்லை. தமனின் பாடல்களும், பின்னணி இசையும்தான் படத்தை ஓரளவு தாங்கிப்பிடிக்கிறது. ஆனால், அதுவும் தமனின் மற்ற ஹிட் பாடல்களின் தரத்தில் இல்லை.

ராம்சரண் - கியாரா

சினிமாட்டிக் லிபர்ட்டி என சொல்லப்படும் காட்சிகளுக்கு எல்லாம் வலிந்து லாஜிக் ஓட்டையை நிவர்த்தி செய்திருக்கிறார்கள். ஆனால், துண்டு துண்டாய் நிற்கும் காட்சிகளில் எல்லாம் யானை புகும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். ஊழல்தான் ஷங்கரின் பிரதான எதிரி. ஆனால், அந்த எதிரியைக்கூட ஷங்கரால் சரிவர கையாள முடியவில்லை. அதனாலேயே இரண்டாம் பாதி டல்லடிக்க ஆரம்பிக்கிறது. காதல் காட்சிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 'சைடு' கதாபாத்திரத்தில் சுனில் செய்யும் சேஷ்டைகளுக்கு எல்லாம், யாரேனும் சிரித்திருந்தால் ஆச்சர்யமே. அதை படம் முழுக்க வேறு ஓடவிட்டிருக்கிறார்கள்.

சமயங்கள்ல நாம் சுடும் தோசை சரியா வராது. எப்போதும் ஊற்றுவது போலத்தான் ஊற்றியிருப்போம். ஆனால், கல்லோடு ஒட்டிக்கொள்ளும். சுரண்டி எடுப்பது போல் ஆகிவிடும். எடுத்தாலும் ஒரு சைடு பிய்ந்து போய், இன்னொரு பாதி மாவு மாவாக இருக்கும். ஒன்று அதை தூக்கி போட்டுவிட வேண்டும். இல்லையெனில் மனதை கல்லாக்கிட்டு மீதிய சாப்பிட வேண்டும். அதை விடுத்து, அதை மிக்ஸில் போட்டு அரைத்து, பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நியூ டிஷ் என கொடுக்கக் கூடாது. கேம் சேஞ்சர் படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜாம். ஏனோ இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது.

கார்த்திக் சுப்புராஜ் - ராம்சரண் - சங்கர்

ஒரேயொரு ஆறுதலான விஷயம், படம் இந்தியன் 2வை விட நன்றாக இருக்கிறது என்பதுதான். ஆனால், அதை பெஞ்ச் மார்க்காக வைக்க முடியாதே.

திரையரங்கில் ஒருவேளை கேம் சேஞ்சர் போரடித்தால், மொபைலை ஆன் செய்து நெட்பிளிக்ஸில் இந்தியன் 2 பார்க்கவும். கேம் சேஞ்சர் நல்லதொரு அனுபவமாக நிச்சயமாக இருக்கும்.

Game Changer படத்தின் வீடியோ ரிவ்யூவை, கீழுள்ள வீடியோவில் காணலாம்...