“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் கவலைப்படாமல், நேர்மையாக உழைக்க வேண்டும்” - நடிகை நயன்தாரா
செய்தியாளர்: செ.சுபாஷ்
பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து அவர் விழாவில் பேசுகையில், “என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று தன்னம்பிக்கை. மற்றொன்று சுயமரியாதை. இது இரண்டும் இருந்தால் போதும். என்ன நடந்தாலும், யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் நாம் விட்டுவிடக்கூடாது. இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது.
இந்த தன்னம்பிக்கை நம்மிடையே வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மளை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை வரும்.
இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும், உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்” என்றார். நிகழ்ச்சியில் நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார்.