“அக்டோபர் வரை படங்களில் நடிக்க மாட்டேன்..” கார் ரேஸில் கவனம் செலுத்த விரும்பும் அஜித்குமார்!
விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்த நடிகர் அஜித்குமார், இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும், டப்பிங் பணிகளையும் சமீபத்தில் முடித்தார். குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் பொங்கல் தினத்திலிருந்து விலகி தள்ளிச்சென்றுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவரான அஜித், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதிலும் கவனம் செலுத்தி வருவதை தொடர்ந்து செய்துவருகிறார்.
அந்தவகையில் இரண்டு படங்களின் வேலையையும் முடித்துவைத்த அஜித்குமார், நீண்ட இடைவெளிக்கு பிறகு துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச்சென்றார். ஜனவரி 10-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் கார் பந்தய தொடரில் ”அஜித்குமார் ரேஸிங்” அணி கலந்துகொண்டுள்ளது, இதில் நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓட்டுநராக களமிறங்கவுள்ளார்.
அஜித் உருவாக்கிய ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி..
தனது சிறு வயது முதலே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்குமார், கார் ரேஸிங்கிலும் ஒரு அங்கமாக பங்கேற்று வருகிறார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங் (Ajith Kumar Racing)’ என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது துபாயில் நடைபெற்றுவரும் PORSCHE 992 GT 3 பிரிவிலான கார் ரேஸ் போட்டியில் இந்த அணி பங்கேற்றுள்ளது. நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என மூன்று ஓட்டுனர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் இதனைத்தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் 5 ரேஸ் போட்டிகளில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. அஜித்குமார் தன்னுடைய அணிக்காக களத்தில் இருக்க ஆர்வம்காட்டிவருகிறார்.
அந்தவகையில் துபாயில் நடந்துவரும் கார் ரேஸிங் போது பேசியிருக்கும் அஜித்குமார், தன்னுடைய அணிக்காக படங்களில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கார் ரேஸிங்கிறாக அஜித்குமார் எடுத்த முக்கிய முடிவு!
ஒரு நடிகர் கார் ரேஸிங்கில் அணியை உருவாக்கும் அளவு ஆர்வம் கொண்டவராக இருப்பதற்கான பின்னணி குறித்தும், மோட்டார் சைக்கிள் ஆர்வம் குறித்தும் அஜித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பதிலளித்து பேசிய அவர், “நான் என்னுடைய 18 வயதில் ரேஸிங் தொடங்கினேன். அடுத்த 4 வருடங்கள், அதாவது 1993 வரை ரேஸிங்கின் மீது அதிக ஆர்வம் இருந்தது, அதற்குபிறகு என்னுடைய வேலைகளில் நான் பிஸியாகிவிட்டேன்.
இருப்பினும் அதற்கிடையே 2002-ம் ஆண்டு மீண்டும் மோட்டார் ரேஸிங்கிற்கு திரும்பி, இந்தியாவில் நடந்த தேசிய சாம்பியன்ஸிப்பில் பங்கேற்றேன். 2003-ல் ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஸிப்பிலும், 2004-ல் பிரிட்டிஸ் ஃபார்முலா 3 ரேஸில் பங்கேற்றேன். ஆனால் அதில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. அதற்குபிறகு 2010-ல் ஈரோப்பியன் ஃபார்முலா 2 ரேஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, அதிலும் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. சினிமா, ஸ்போர்ட்ஸ் இரண்டிலும் சமமாக பேலன்ஸ் செய்யவேண்டியிருந்தது.
அதற்குபின்னர் படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டேன், பின்னர் என்னுடைய 32 வயதில் மீண்டும் கார் ரேஸிங் களத்திற்கு திரும்பினேன்” என்று கூறினார்.
உங்களுடைய சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் கார் ரேஸிங் செல்வதற்கான ஒப்பந்தம் பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை நான் என்ன செய்கிறேன், செய்யாமல் இருக்கப்போகிறேன் என்பதற்கான ஒப்பந்தங்களை நான் போட்டதில்லை. ஆனால் இதற்குபிறகு என்னுடைய ’அஜித்குமார் ரேஸிங்’ அணிக்காக கவனம் செலுத்தவிரும்புகிறேன். அதன்படி கார் ரேஸிங் இருக்கும் நேரங்களில் படத்தில் நடிக்காமல் இருக்கப்போகிறேன். அக்டோபர் வரை படத்தில் நடிப்பதை தவிர்த்து, கார் ரேஸிங் இல்லாத நேரங்களில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் படங்களில் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி அஜித் தன்னுடைய ’அஜித்குமார் ரேஸிங்’ அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவிருப்பது தெரியவந்துள்ளது.