குடும்பத்தை காக்க ஹீரோ போடும் கொள்ளை திட்டமே `கான் சிட்டி'
சரவணா (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்), ஜாக்கி (யோகி பாபு), ஜானகி (வடிவுக்கரசி), ஜீவா (அகிலன்) ஒரே குடும்பமாக கர்நாடகாவில் ஒரு ஹோட்டல் நடத்து வருகின்றனர். திடீரென ஒருவர் சிறுவன் ஜீவாவை பள்ளியில் இருந்து கடத்தி செல்ல, அவனை மீட்க சென்னை மங்களாபுரம் கிளம்புகிறார்கள் சரவணா & டீம். ஜீவாவை கடத்தி சென்றது யார்? சரவணா & டீமின் ஃபிளாஷ்பேக் என்ன? ஜீவாவை மீட்க அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே `கான் சிட்டி' பட கதை.
ஜாலியான டார்க் காமெடி படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். அதில் முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டார் எனவே சொல்லலாம். அந்த அளவு படத்தில் நிறைய காமெடி காட்சிகள் சிரிக்க வைத்திருக்கிறது.
அர்ஜூன் தாஸுக்கு வில்லனிசம் இல்லாத, எந்த அலட்டலும் இல்லாத, அமைதியான பாத்திரம். அதே நேரம் சில காட்சிகளில் உற்சாகமும், சில காட்சிகளில் எமோஷனலும் காட்டி நடித்திருக்கிறார். அன்னா பென் ஏமாறும் இடத்திலும் சரி, ஏமாற்றும் நபராக மாறும் காட்சியும் சரி அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அதிலும் பணத்தை எண்ணாமல் அதற்கு விளக்கம் கொடுக்கும் காட்சி எல்லாம் செம காமெடி. யோகி பாபு - வடிவுக்கரசி நடிப்பும் படத்தின் காமெடிக்கு பெரிய அளவில் கை கொடுக்கிறது. குறிப்பாக வடிவுக்கரசி சொல்லும் பஞ்ச் பல இடங்களில் சிரிப்பூட்டுகிறது. மனைவியை ட்ராப் செய்வதை முழுநேரமாகவும், EB அலுவலகத்தில் பகுதி நேரமாகவும் பணியாற்றும் விடிவி கணேஷ் சார்ந்த காட்சிகளும் நன்று.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். படத்தின் காமெடி + டார்க் உணர்வுக்கு தகுந்தது போல காட்சிகளை கொடுத்திருக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை மூலம் சில காமெடிகளை எனர்ஜி ஏற்றுகிறார்.
சுவாரஸ்யமான காமெடி காட்சிகள் வேண்டும் என்பதை கவனம் செலுத்தி எழுதி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இடைவேளைக்கு முன் ரஜினியை சம்மந்தப்படுத்து வரும் ஒரு காட்சிக்கு தியேட்டரே பிளாஸ்ட் ஆகிறது. திரைக்கதையாகவும் சின்ன சின்ன ஐடியாக்கள் மூலம் சுவாரசியம் சேர்க்கிறார்கள். படத்தின் முதல் பாதி வரையிலுமே எந்த இடத்திலும் தொய்வின்றி நகர்கிறது படம்.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இரண்டாம் பாதியை இன்னும் சிறப்பாக கொண்டு போய் இருக்கலாம் என்பதுதான்.
சில காட்சிகளை தேவைக்கு அதிகமாக விளக்கி சொல்கிறேன் என நேரத்தை எடுத்துக் கொண்டது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது படத்தின் விறுவிறுப்பையும் வெகுவாக பாதிக்கிறது. படத்தில் வரக்கூடிய சில திருப்பங்களும் முன்பே யூகிக்க கூடியதாக இருப்பதும் சின்ன மைனஸ்.
மொத்தத்தில் ஒரு ஜாலியான காமெடி படம் என்பது மட்டும் கேரண்டி. ஆனால் படத்தின் நீளத்தை மட்டும் சகித்துக் கொள்ள வேண்டும்.