பாடல், ஆட்டம், கொண்டாட்டம்... அசத்திய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | Sing Geetham Review
பாடல், ஆட்டம், கொண்டாட்டம்... அசத்திய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!(3.5 / 5)
ஒரு ஊரை காப்பாற்ற நடக்கும் போராட்டத்தை, காமெடியும், பாடலும் கலந்து சொல்வதே இந்த சிங் கீதம்!
சின்ன சின்ன திருட்டுகளை செய்யும் பிரதாப் (அயான்) சிறையிலிருந்து வெளியே வந்ததும் குபேரபுரம் என்ற ஊரில் தனது பூர்வீக சொத்து உள்ளது என அறிந்து கொள்கிறார். அந்த சொத்தை விற்று சொகுசாக வாழ நினைத்து குபேரபுரம் கிளம்புகிறார். வறண்ட மலைப்பிரதேசமான அந்த ஊரில் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்கிறது, அதனை பாதுகாக்க தனி ஆளாக போராடி வருகிறார் கௌரி (அஹில்யா). அந்த ஊரில் தங்க சுரங்கம் இருக்கிறது என்பதால் தனது தந்தை வழிகாட்டுதலின் பெயரில் ரேணு (ஷாலினி) சுரங்கங்களை விற்பதற்கு முயற்சிக்கிறார். அந்த சொத்தில் பிரதாப்புக்கும் பங்கு இருப்பதால், அவரும் ரேணு உடன் கை கோர்க்கிறார். இனிமேல் தங்கம் கிடைக்க வேண்டும் என்றால் கௌரி பாதுகாக்கும் மரத்தை தான் வெட்ட வேண்டும் என்ற சூழல் வருகிறது. இதற்கான முயற்சியில் அந்த ஊருக்கு ஒரு சாபம் விழுகிறது. அம்மக்கள் யாராலும் பேச முடியவில்லை, பேச்சு எடுத்தாலே அது பாட்டாக தான் வருகிறது. பிரதாப்பின் நோக்கம் என்ன ஆனது? ரேணுவின் சுரங்க விற்பனை என்ன ஆனது? ஊரில் எல்லோரும் பாடுவதை சரி செய்ய முடிந்ததா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவின் க்ரியேட்டிவிட்டி தான் படம் முழுக்க நாம் பார்த்து வியக்கும் ஒரே விஷயம். முக்கால் வாசி படம் வசனங்களே இன்றி பாடல்கள் மட்டுமா, இது எப்படி சாத்தியம்? என்ற நம் கேள்விக்குறியை ஆச்சர்யக்குறியாக மாற்றிவிடுகிறார் இந்த 94 வயது இளைஞர். சுருக்கமாக சொல்வதென்றால் நம்ம ஊரில் ஒரு பிக்ஸர் படத்தை பார்த்த உணர்வை தான் கொடுக்கிறார்கள். குபேரபுரம் என்ற ஒரு உலகத்தை வடிவமைத்தது, அந்த மக்களை விதவிதமாக வடிவமைப்பது, அதை கதைக்குள் பக்காவாக பொருத்துவது, திடீரென நடக்கும் ஒரு மாற்றம், அதனை ஒரு ஒரு பாத்திரங்களாக உணருவது, வசனங்களை பாடல்களாக கொண்டுவந்த விதம், களேபரங்களுக்கு நடுவே காட்சிகளை பதிவு செய்திருப்பது என அட்டகாசம் செய்துள்ளனர். பாடலோடு சேர்த்து காமெடியையும் படத்தில் சரியாக சேர்த்திருக்கிறார்கள். அத்தனை நகைச்சுவையும் மிக தரமாகவும் எழுதப்பட்டிருந்தது சிறப்பு.
முதன்மை பாத்திரங்களான அயான், அஹில்யா இருவரது நடிப்பும் மிகச் சிறப்பு. அதிலும் அஹில்யா வரும் காட்சிகள் அனைத்திலும் தனித்து தெரிகிறார். ஊரின் மீது கோபம் கொள்வது, பாடுவது குறித்து ஆச்சர்யபடுவது என பல காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். தந்தையின் நோக்கத்தை நிறைவேற்ற வில்லத்தனமான நடப்பது, பின்னர் மனம் மாறுவது என வேறுபாடுகளை அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் ரேணு. துளசி, சிவநாராயணா, சிறுவர்கள் என பலரும் தங்களின் நடிப்பை சிறப்பாக கொடுத்திருந்தனர்.
பொழுதுபோக்காக படம் கொடுத்த அதே வேளையில், அதற்குள் சில கருத்துக்களையும் இயல்பாக பேசி இருக்கிறார் சிங்கீதம். அவை எதுவுமே திணிப்பாகவோ, துருத்தலாகவோ இல்லை என்பது சிறப்பு. கடவுள் நம்பிக்கை, மருத்துவம் என நடக்கும் மோசடிகள் போன்றவற்றை போகிற போக்கில் ஒரு குட்டு வைப்பதும் நன்று. கடந்த தலைமுறையினரை பார்த்து இந்த தலைமுறையினர் தவறு செய்வதும், பின்பு இளம் தலைமுறை பார்த்து பெரியவர்கள் மனம் மாறுவதும் என அந்த இடமும், க்ளைமாக்சில் எமோஷனலாக எடுக்கப்படும் முடிவும் அத்தனை அழகு.
தேவி ஸ்ரீ பிரசாத் தான் இந்தப் படத்தின் அடுத்த ஹீரோ. பேச்சு திடீரென பாடலாக மாறுவது உடனடியாகவே நமக்கு சகஜமானது அவரது இசையால் தான். மெலடியிலேயே பல வெரைட்டி காட்டி படத்துக்கு ஒரு காமிகல் உணர்வையும் தருகிறார். அங்கூர் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம். நிறைய சிஜி காட்சிகள் இருந்தாலும் அதற்கு தகுந்த விதத்தில் படத்தை பதிவு செய்திருக்கிறார். அதை நம்பும்படியும் செய்துள்ளார்.
இதன் குறைகள் எனப் பார்த்தால், அந்த மக்கள் ஊரில் அவ்வளவு பிரச்னை இருக்கிறது என்று இருக்கும் போதும் ஏன் அந்த ஊரைவிட்டு போகவில்லை என்பதற்கான காரணம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கலாம். மேலும் சாபம் இருக்கும் போது உண்மையை தவிர எதுவும் பேசமுயாது என்ற லாஜிக்கும் படத்தில் சில இடங்களில் மீறப்படுகிறது. இப்படியான சின்ன சின்ன குறைகளை தள்ளிவைத்துவிட்டு பார்த்தால், ஒரு அற்புதமான படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த சிங் கீதம்.

